காட்டிற்குள் குருநாதர் அழைத்துச் சென்றார் பல அனுபவங்களைக் கொடுத்தார்... நான் பெற்றேன். அது எப்படி...? என்ன...? என்று அறிந்து கொள்ளும்படி செய்தார்.
ஒவ்வொரு நிமிடத்திலும் எத்தனையோ வேதனைகளை நான் அனுபவிக்க நேர்ந்தது. வேதனையை நுகர்ந்த பின்
1.என் உடலுக்குள் எப்படி எல்லாம் மாற்றங்கள் ஏற்படுகிறது...?
2.உடலுக்குள் எப்படி எல்லாம் மாறுபடுகின்றது...? என்று அதையெல்லாம் காண்பிப்பார்.
அவர் சொல்வதைக் கேட்டுக் கொண்டே இருந்தாலும் திடீரென்று சில நேரங்களில் வயிற்றால் போய்விடும்... ஒன்றுமே செய்ய முடியாது.
சாமி எனக்குக் கிரக்கமாக வருகின்றது என்பேன்.
1.நீ இதையெல்லாம் பார்த்தாய் அல்லவா... நுகர்ந்தாய் அல்லவா
2.அது உன் உடலுக்குள் சென்ற பின் மற்ற அணுக்களை எல்லாம் அடக்கி
3.உன் உறுப்புகளைச் சீராக இயக்க விடாதபடி எப்படி இயக்குகிறது...? பார்...!
ஆனால் நீ தவறு செய்யவில்லை.
1.நீ நன்றாகத்தானே சுவாசித்துக் கொண்டிருந்தாய்
2.நீ ஆகாரம் ஒன்றும் சாப்பிடவில்லை.
3.சாப்பிடவில்லை என்றாலும் இது எப்படி வயிற்றால் போகின்றது...?
இப்படித்தான் பல வகைகளிலும் என்னைச் சிரமப்படுத்தி அதை அறிந்து கொள்வதற்குச் சூழ்நிலைகளை உருவாக்கினார்.
அதே போன்று உங்களுக்கும் இத்தகைய சூழ்நிலைகளை உருவாக்கலாமா...? சொல்லுங்கள் பார்க்கலாம்...!
சாதாரணமான நிலைகள் நீங்கள் நுகர்ந்த உணர்வு உங்களுக்குள் சென்ற பின் “சாமி எங்களை ரொம்பச் சோதிக்கின்றார்...!” என்று எண்ணுவீர்கள்.
ஏனென்றால் சாமி சொன்னதைக் கேட்டு அதன் வழி நடந்து வரும் பொழுது சாமியை நினைப்பார்கள்.
1.சாமி சொன்னார் என்று நான் பொறுமையாக இருந்து கொண்டிருக்கின்றேன்
2.ஆனால் என்னை எப்படி எல்லாம் பேசுகின்றார்கள்...?
3.என்னால் பொறுக்க முடியவில்லை... என்னால் தாங்க முடியவில்லை நான் எப்படி இப்படியே பொறுமையாக இருப்பது..? என்று
3.நான் சொன்ன உயர்ந்த கருத்துக்களை விட்டு விடுகின்றார்கள்... பிறர் உணர்வை எடுத்துக் கொள்கின்றார்கள்.
4.நான் சொன்னதை நிறுத்திவிட்டு அதைத் தான் வளர்க்க முடிகிறது.
சந்தர்ப்பங்கள் இப்படி எல்லாம் இயக்குகின்றது. இதை எல்லாம் மாற்றிப் பழக வேண்டும்.
சில குடும்பங்களில் எல்லோரும் சேர்ந்து சாப்பிடும் பொழுது ஒருவருக்கொருவர் கவலையாக... சங்கடமாக... பேசிக்கொள்வார்கள்... சஞ்சலமாகப் பேசுவார்கள்.
சாப்பிடும் போது இப்படிக் கவலையாகப் பேசுவது எல்லாம் என்ன ஆகும் என்றால் அவர்கள் பட்ட வேதனை எல்லாம் அந்த உணவோடு சேர்த்து உடலில் அணுக்களாக உருவாகும்.
1.ஒருவர் சொல்வதை எல்லோரும் உ..ம் கொடுத்துக் கேட்பார்கள்.
2.இது வளர்ந்த பின் சாப்பிடும் பொழுதெல்லாம் அந்த எண்ணங்கள் மீண்டும் வந்து கொண்டே இருக்கும்
3.அந்த அணுக்கள் வளர்ச்சி அடைவதற்கு இதுவே ஏதுவாக மாறிவிடுகின்றது.
ஆனால் சந்தோஷமாகச் செய்து அந்த மகிழ்ச்சியான உணர்வு கொண்டு சாப்பிட்டுப் பாருங்கள். எல்லாமே சந்தோஷமாக இருக்கும்.
ஆனால் சாப்பிடும் போது வேதனையாகச் சொல்லிப் பாருங்கள். அது எத்தகைய வேதனைகளை உருவாக்குகிறது...? என்று நீங்கள் தெரிந்து கொள்ளலாம். அதனால் பல நோய்கள் வரக் காரணமாகின்றது.
தியானத்தைக் கடைப்பிடிப்பவர்கள் இதை எல்லாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.