மனதில் நாம் எதைப் பதிவு செய்கிறோமோ அது தான் இயக்கும்.
உதாரணமாக... உங்களுக்கு முன்னாடியே நல்லது செய்கின்றார்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள்.
1.ஆனால் அதை நீங்கள் மோசமாக எண்ணுகின்றீர்கள்
2.அப்போது நல்லது செய்தார்கள் என்று அதை ஏற்றுக் கொள்வீர்களா...?
3.அதில் எப்படிக் குறை காணுவது...? என்ற உணர்வு தான் வரும்.
4.அது உங்களுக்கே தெரியாது... உங்களுக்குத் தெரியாமல் அது இயக்குவது தான்.
ஆகையினால் குறையான உணர்வுகள் வந்தபின் நல்லது செய்கிறார்கள் என்றால் அதிலே எப்படியெல்லாம் குறைகளைக் காண வேண்டுமோ அப்படி எல்லாம் அதைத் திருப்பிக் கொண்டு வரும். ஆக நல்லதாக்கும் நிலைகளுக்கு வராது. இது எல்லாம் மனிதனுடைய இயற்கையின் நிலைகள்.
எவ்வளவு பெரிய சக்தி எடுத்தாலும் எல்லாம்... எல்லாம் அனுபவித்தாலும் “நன்மை செய்ய வேண்டும் என்ற அந்த ஆதங்கம்”
1.மற்றவருடைய நிலைகளைப் பார்க்கப்படும் போது
2.தன்னை உயர்த்தி மற்றவர்களைத் தாழ்த்தும் நிலை வருகின்றது.
நன்மை செய்வதற்கு நான் பற்று கொண்டுள்ளேன்... ஆனால் மற்றவருக்குப் பற்று இல்லை என்கிற பொழுது இந்த மாதிரிக் குறைகளை வடிவமைக்க ஆரம்பித்து விடுகின்றோம். இதனால் எத்தனையோ பிழைகள் வருகின்றது.
இத்தகைய உணர்வுகள் ஒவ்வொருவருடைய மனதிலும் தோன்றும். நாம் போகும் பாதையை விட்டுவிட்டுத் திசைகளைத் திருப்பும்... ஆனால் சேவை செய்ய வேண்டும் என்ற பற்று இருக்கும்.
எல்லா உணர்விலும் அது சாம்பிள் போட்டுக் கொண்டே இருக்கும் நன்றாக இருக்கின்றது நல்ல ருசியாக இருக்கிறது என்று சொல்லிவிட்டு ஸ்ஸ்...ஆ...! காரமாக இருக்கிறது நல்லதைக் காரமாகச் சொல்வது போன்று காண ஆரம்பிக்கும்.
இது எல்லாம் அன்பைக் காட்டுகின்றது ஆனால் பேராசையைக் காட்டுகின்றது ஆனால் கடைசியில் நிராசையாக மாறுகின்றது.
1.இந்தப் பேராசை (நல்லது செய்ய வேண்டும்) என்ன செய்யும்...?
2.நிராசையாக மாற்றிக் கொள்ளும் சக்தி தான் வருகின்றதே தவிர நல்லாக்கும் நிலை இல்லை.
பேராசை என்கின்ற பொழுது எப்படி இருக்க வேண்டும்...?
நீங்கள் (அடுத்தவர்கள்) உயர வேண்டும் என்றால் இது பேராசை.
1.நான் உயர வேண்டும்...
2.நான் உயர்ந்திருக்கின்றேன் என்ற இந்தப் பேராசை வரக்கூடாது.
இதுவும் பேராசை தான்... அதுவும் பேராசை தான்.
மற்றவர்கள் உயர வேண்டும் என்ற எண்ணம் கொண்டு எப்படியும் தெளிந்த மனம் எல்லோருக்கும் வர வேண்டும் என்ற இந்தப் பேராசை நம்மைக் குறைகளிலிருந்து மீட்கச் செய்யும்.
ஒவ்வொரு மனிதனுக்கும் குறை காணும் இயல்புகள் உண்டு எனக்கும் கூட உண்டு உங்களிடம் எல்லாம் சொல்கின்றேன் அந்த மாதிரி உணர்வு... சில நேரங்களில் எனக்குள்ளும் (ஞானகுரு) வரும்.
இதனால் தான் குருநாதர் என்ன செய்தார்...?
ஒரு சந்தர்ப்பம் காட்டுக்குள் அழைத்துச் சென்று ஒரு மரத்தைக் காண்பிக்கின்றார். “தூக்கி வீசுடா.....!” என்றார் அவர் சொன்ன முறைப்படி செய்த பின் மரம் பறந்து போய் அங்கே விழுகின்றது.
1.அடுத்து எனக்குத் திமிரே வருகின்றது
2.யாராவது ஏதாவது செய்யட்டும்... நான் தூக்கிப் பந்தாடுகின்றேன் பார்...! என்று சொல்கின்றேன்.
“இப்போது உனக்குத் திமிர் வந்து விட்டது” என்று குருநாதர் சொல்கின்றார். எதற்காக வேண்டி உன்னை மரத்தைத் தூக்கி எறியச் சொன்னேன் தெரியுமா...?
ஒருவருக்குள் ஆட்டிப் படைக்கும் தீய சக்திகளைத் தூக்கி எறிய வேண்டும்.
சாதாரணமாக ஜீவனுடன் வாழும் அந்த மரத்தைத் தூக்கி எறிந்த உடனே உனக்குத் திமிர் வருகின்றது. அதை வைத்து யாரை வேண்டுமென்றாலும் தூக்கி எறிந்து விடலாம் என்ற எண்ணம் தானே உனக்கு வருகின்றது என்று அந்த இடத்தில் அதைச் சுட்டிக் காட்டுகின்றார்.
அந்தத் திமிர் வருவதனால்... யாராவது கோபித்துச் சொன்னால் அல்லது தவறாகச் செய்தால்
1.இருக்கட்டும்... கொஞ்சம் சுண்டிப் பார்க்கலாம்
2.அப்போதுதான் அவருக்கு அந்த அனுபவம் வரும் என்று நான் இதைச் செய்தால் எப்படி இருக்கும்...?
குறைகள் தான் வரும்.
அதை நிவர்த்திப்பதற்குண்டான வழியைத் தானே நான் சொல்ல வேண்டும்.
1.இன்னென்ன காரணத்தால் குறைகள் ஏற்பட்டது
2.அதனால் அது உங்களை இப்படிப் பாதிக்கின்றது என்று வழி காட்ட வேண்டுமே தவிர
3.அங்கே குறையைக் குற்றமாக ஆக்கி அவரைத் தண்டிக்கும் நிலைகளுக்கு வரக்கூடாது.
குருநாதர் எனக்கு முதலில் இதைத் தான் உணர்த்தினார்.
என்னைப் பெரிய ஆளாகக் காட்டுவதற்கும்... என்னை மெச்சும்படி செய்வதற்கும்... உங்களுக்கும் அந்தச் சக்தியைக் கொடுத்து மரத்தை தூக்கி எறியச் செய்யலாம்.
அப்போது உங்களுக்கும் அதே எண்ணம் தான் வரும். மனிதனுக்குள் இது போன்ற சக்திகள் கிடைத்தால் உடனே... அப்போதே... அந்தத் திமிர் வரும்.
இதை எதற்காகச் சொல்கிறோம் என்றால்
1.நல்லது என்ற எண்ணத்தில் மற்றவருக்குச் சேவை செய்யும் நேரங்களில் இது போன்ற சில உணர்ச்சிகள் நிச்சயம் வரும்.
2.நாம் அல்ல... நாம் எடுத்துக் கொண்ட ஆர்வத் துணிவு குற்றத்தை நிவர்த்தி செய்வதற்குப் பதில் குற்றத்தைப் பெருக்கத்தான் செய்யும்.
குற்றம் என்ற நிலையில் அவர்கள் தாழ்ந்து போனால் “பேசாமல் போகின்றார்கள் பார்...” என்ற நிலை வந்துவிடும். அதைக் கொண்டு குற்றங்களை எப்பொதுமே மாற்ற முடியாது. இதைத் தெளிவாக்கிக் கொள்ளுங்கள்.
ஆகவே சேவை செய்ய நாம் அணுக வேண்டிய முறைகள் எப்படி இருக்க வேண்டும்...?
ஒவ்வொரு உயிரையும் கடவுளாக மதித்து அந்த ஆண்டவன் வீற்றிருக்கும் ஆலயம் என்று அவர்களை மதித்து
1.அங்கே அமைதி பெறும் சக்தி பெற வேண்டும் என்று எண்ண வேண்டும்.
2.அமைதி பெறச் செய்யும் அந்தச் சக்தியை கொண்டு வந்தால் தான் அது சீராகும்.
அது அல்லாதபடி மற்ற எத்தனையோ பெரிய நிலைகளைச் செய்தாலும்
1.ஞானத்தின் வழியில் தேர்வு பெறுவது கடினம் தான்...
2.ஒரு சிலர் தான் தேற முடியும்.
கூட்டமாக ஒரு பக்கம் வந்து கொண்டே இருந்தாலும் “இதிலே என்னடா இருக்கின்றது...?” என்று களைந்து வெளியில் போய்க் கொண்டு தான் இருப்பார்கள்.... வர முடியாது... இதை வளர்க்கவும் முடியாது.
உங்களுக்கு அர்த்தமாகின்றது அல்லவா...!
ஞான வழியில் வளர்வதற்கு மாறாகத் “தன்னுடைய செயல்கள்தான் உண்மை...” என்று அதை நிலை நாட்டும் போது நல்லதை நிலைநாட்ட முடியாது போய் விடுகிறது.