ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

July 11, 2023

அருள் வழியில் அன்றாடம் நினைக்க வேண்டியது

எப்பொழுதெல்லாம் துன்பம் வருகின்றதோ… அப்போது உடலில் இருந்து வரக்கூடிய மணமே உங்களுக்கு எதிரியாக மாறி விடுகின்றது அதை அடிபணியச் செய்யும் நிலைக்கே “என்னுடைய (ஞானகுரு) ஆசீர்வாதம்…”

துன்பத்தை விளைவிக்கும் நோயோ… துன்பத்தை விளைவிக்கும் சொல்லோ… அதெல்லாம் நீங்க வேண்டும் என்ற எண்ணத்தில் நான் அருளாசி கொடுப்பதை நீங்களும் அப்படியே எண்ணிப் பெற்றால் அந்த ஞானிகளுடைய அருள் உணர்வுகள் உங்களுக்குள் படர்ந்து துன்பங்கள் அகலும்.

உதாரணமாக மாம்பழம் வாங்க வேண்டும் என்று விரும்பினால் நுகர்ந்த உணர்வு உங்களை அந்தக் கடைக்கு அழைத்துச் செல்கிறது. அதே போல்
1.மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும்
2.என் உடல் நோய் நீங்க வேண்டும்… துன்பம் நீங்க வேண்டும்
3.என் சொல்லுக்குள் இனிமை பெற வேண்டும்… செயல் புனிதம் பெற வேண்டும் என்று ஏங்கினால்
4.அது உங்களுக்குள் கிடைக்கப் பெறும்.

அதற்குப் பதிலாக சாமி…! என் துன்பம் என்னை விட்டு போக மாட்டேன் என்கிறது… “நீங்கள் தான் கடவுளாக இருக்கின்றீர்கள்…” என்று என்னை வணங்கினீர்கள் என்றால் “உங்களை நீங்கள் ஏமாற்றிக் கொள்கின்றீர்கள்” என்று தான் அர்த்தம். நான் கொடுத்த உபதேசம் அனைத்தும் வீணாகிவிடும்.

இவ்வளவு தூரம் பெரியவர் உயர்ந்த கருத்துக்களைச் சொல்லுகின்றார் என்று என்னை உயர்த்தி விட்டு… உங்களைத் தாழ்த்தி விடாதீர்கள்
1.உணர்வின் எண்ணத்தை உயர்த்துங்கள்… உணர்வின் ஆற்றலை உங்களுக்குள் செலுத்துங்கள்.
2.உங்களை அறியாது ஆட்டிப் படைக்கும் அந்த சக்தியைத் தாள் பணியச் செய்யுங்கள்.

எனக்கு குருநாதர் காட்டிய நிலைகள் அதுதான்…!

ஒருவர் துன்பப்படுகிறார் என்றால் “நம் சொல்” அவரைத் தீமையிலிருந்து மீட்டி உயர்வான நிலைகளுக்கு அழைத்துச் செல்ல வேண்டும்.

எல்லோரும் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்… எல்லோரும் நலமாக இருக்க வேண்டும்… என்று எண்ணும் பொழுது நாம் முதலில் நலமாகின்றோம் நம் சொல்லும் செயலும் நல்லதாகிறது. நம் சொல் மற்றவர்கள் உள்ளங்களை மகிழச் செய்கின்றது.

அந்த மகிழ்ச்சியால்
1.மற்றவர்கள் நம்முடன் இணைந்து செயல்படும் நிலையாக
2.நாம் போகும் நிலைகளுக்குத் தடையின்றி வழிபடுத்துவதும்
3.தடையின்றி தொழில் நடப்பதும் தடையற்ற நிலையாக நமக்குள் எல்லாமே உருவாகின்றது.

இந்த அடிப்படையில் நீங்கள் எம்மிடம் ஆசி வாங்கினால் அது உங்களைப் பின் தொடர்ந்து எப்போதுமே உறுதுணையாக அமையும்.
1.உங்களைக் காக்கும்… உங்களுக்குள் உயர்வை ஊட்டும்
2.மெய் ஒளியின் தன்மையைப் பெறச் செய்யும்… நீங்கள் அருள் ஒளி பெறுவீர்கள்.

ஆக… மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும்; அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்; நலமும் வளமும் நாங்கள் பெற வேண்டும்; எங்கள் சொல்லுக்குள் இனிமை பெற வேண்டும்; எங்கள் செயல் அனைத்தும் புனிதம் பெற வேண்டும்; நாங்கள் பார்ப்பது அனைத்தும் நலம் பெற வேண்டும்; நாங்கள் பார்ப்போர் அனைவரும் நலம் பெற வேண்டும்; எங்களைப் பார்ப்போர் அனைவருக்கும் நல்ல உள்ளங்கள் வளர வேண்டும் என்ற இந்த உணர்வை எண்ணினால் இதுவே உங்களுக்கு எம்முடைய ஆசியாகக் கிடைக்கின்றது அருள் ஞான வித்துக்களாக…!