ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

July 31, 2023

இன்றைய உலகில் எவ்வாறு வாழ வேண்டும்…? என்பதை “நாம் தெரிந்து நடப்பது தான் நல்லது…!”

விஞ்ஞான உலகில் இன்று வாழுகின்றோம் ஆனால் அஞ்ஞான வாழ்க்கையே வாழுகின்றோம்.

ஆனால்
1.வாழ்க்கையில் வரும் துன்பங்களை எவ்வாறு நீக்குவது…?
2.மனிதன் ஆன பின் மகரிஷிகளின் அருள் உணர்வுகளை எப்படிப் பெருக்குவது…?
3.தீமை இல்லாத வாழ்க்கையாக எவ்வாறு வாழ்வது…? என்பதனை நமது சாஸ்திரங்கள் தெளிவாகக் கூறியுள்ளது.

அவ்வாறு காட்டியிருந்தாலும்… இன்றைய உலகில் அரசர்கள் காட்டிய வழியில் அவர்கள் தத்துப்படித் தான் ஜாதகம் ஜோதிடம் யாகங்கள் வேள்விகள் என்று அனைத்துமே செயல்பட்டு கொண்டுள்ளது.

அரசன் வழியில் எடுத்துக் கொண்டால் “சத்ரிய தர்மம்” என்ற நிலையில் அவன் வாழ்க்கையில் தான் எதை ஆசைப்படுகின்றனோ அந்த ஆசையை நிறைவேற்ற எதை வேண்டுமென்றாலும் செய்யலாம் என்று தான் உருவாக்கி வைத்தனர்.

உதாரணமாக ஒரு நாட்டிற்கு சென்று எனக்கு சிறிதளவு இடம் வேண்டும் என்று கேட்பான்.

இல்லை… கொடுக்க முடியாது என்றால் போர் முறை கொண்டு அதை எடுத்துக் கொள்வான். இப்படித்தான் ஆட்சிகள் நடந்து ஓர் அரசன் மற்ற அரசனை அடிமையாக்கி… தன் வாழ்க்கை என்ற நிலை வரும் பொழுது எல்லோரையும் அரசனுக்குக் கீழ் அடிமையாக்கும் நிலைகள் வளர்ந்து வந்தது.

ஆனால் அரசனை மதிக்கவில்லை அரச வழியில் நடக்கவில்லை என்றால் அவர்களுக்குத் தொல்லை கொடுப்பதும் பின் குற்றவாளியாக ஆக்கி உதைக்கவும் செய்கின்றார்கள். இதற்குச் சாட்சிகள் யாரும் இல்லை (பழைய சரித்திரத்தைப் படித்தால் தெரியும்).

இப்படித்தான் அந்த அரசர்கள் வெளிப்படுத்தியது மக்கள் மத்தியில் பரவி தர்மம் நியாயம் சத்தியம் என்று பேசுவது அனைத்தும் “வெறும் பேச்சு தான்…”
1.தர்மமும் நியாயமும் எல்லாம் எங்கே இருக்கிறது என்றால் அதர்மவாதி கையில் தான் இருக்கின்றது
2.அதர்மம் எவன் செய்கின்றானோ அவன் கை ஓங்கி வலு இருக்கின்ற நிலையில்
3.தர்ம நியதிப்படி ஒருவன் நடந்தான் என்றால் அவனை அதர்மவாதி என்று இவன் குற்றத்தைச் சுமத்தி அவனை அடக்குகின்றான்…
4.அவன் வழியில் தான் இவன் நடக்க வேண்டும்.

விஞ்ஞான உலகமாக இருந்தாலும் இப்படித்தான் இன்று நாம் வாழுகின்றோம்.

ஆனால் எந்த வழியில் வாழ்ந்தாலும் “செல்வம் இல்லை” என்று ஒருவர் வேதனைப்படுகின்றார்… அது ஒரு புறம். அடுத்து அவருக்குச் செல்வம் வந்து விட்டாலோ தேடிய செல்வத்தைப் பாதுகாப்பதற்கு எத்தனையோ பயப்பட வேண்டியுள்ளது.

செல்வம் இல்லாதவன் திடீரென்று செல்வத்தைச் சேர்த்து விட்டால் “நேற்று வரையிலும் இவன் ஓன்றுமில்லாதவனாக இருந்தான்… இப்போது எங்கிருந்தோ கொள்ளையடித்து வந்து விட்டான்” என்று ஒரு சாரார் சொல்கின்றனர்.

இவன் கடுமையாக உழைத்தான்… நல்ல முறையில் சம்பாதித்தான் பரவாயில்லை…! என்றும் ஒரு சாரார் கூறுகின்றனர்.

நேற்று வரையிலும் சாதாரணமாக இருந்தவனுக்கு இவ்வளவு சொத்து எப்படி வந்தது என்று இன்னொருவர் சொல்கிறார்.
1.செல்வத்தைத் தேட இப்படிப் பல வகைகளிலும்
2.எதிரிகளை உருவாக்கும் நிலை தான் நடந்து கொண்டிருக்கிறது.

இது எல்லாம் அவருடைய செவிகளில் படும்பொழுது நான் நியாயமாகத்தான் சம்பாதித்தேன்… ஆனால் இப்படிப் பேசுகின்றார்களே என்ற வேதனை உணர்வுகளை நுகர்கின்றார்.

அவர்கள் எவ்வளவு பொறாமைப்பட்டனரோ அந்த உணர்வினை நுகரப்படும் பொழுது உடலுக்குள் பொறாமையின் உணர்வின் அணுக்கள் கருவாகி… அணுவாக உருவாகத் தொடங்கி விடுகிறது.

பிறர் பேசும் அத்தகைய நிலையை உற்றுப் பார்த்தால் அதை நகர நேர்ந்தால்
1.உயிர் அந்த உணர்வை இயக்கிக் காட்டுகின்றது…
2.இயக்கினாலும் அந்த உணர்வின் அணுவாக மாற்றி விடுகிறது.

ஆனால் அணுவின் கருவாக அது உருவாக்கி விட்டால் மீண்டும் அவன் எப்படிப் பொறாமைப்பட்டனோ அதன் உணர்வை மீண்டும் எண்ணி “என்னை இப்படிப் பேசுகின்றார்களே… என்னை இப்படிப் பேசுகின்றார்களே…! என்ற அந்த உணர்வை எடுத்து அதனின் அணுக் கருக்களாக உருவாகின்றது. அதன் வழி பேதமடையச் செய்யும் உணர்வுகள் உடலில் வளரத் தொடங்குகிறது.

நல்லதைச் செய்ய வேண்டும் என்றாலும் அடுத்து என்னை இப்படிப் பேசுகின்றான்… அப்படிப் பேசுகின்றான்… என்ற உணர்வுகளைத் தான் தோற்றுவிக்கின்றது. உண்மையின் இயக்கத்தை அறியாத நிலைகள் கொண்டு மாறுபட்டு வந்து விடுகிறது.

இப்படி இந்த உலகம் இயங்கிக் கொண்டிருக்கும் இந்தக் காலகட்டத்தில் நாம் எவ்வாறு வாழ வேண்டும்…? என்பதை “நாம் தெரிந்து நடப்பது தான் நல்லது…!”

காரணம்…
1.பகைமை உணர்வுகள் உலகெங்கிலும் அதிகரித்து விட்டது
2.எல்லோருடைய உடல்களிலும் அது விளைந்து விட்டது
3.பகைமையினால் ஏற்பட்ட அணுக்கள் அந்த உணர்வைத் தான் உணவாக எடுத்து கொள்ள நேர்கின்றது
4.அதை நுகர நேர்ந்தால் பகை உணர்ச்சிகளும் வெறுப்பு உணர்ச்சிகளும் காழ்ப்புணர்வுகளையும் தான் நமக்குள் தோற்றுவிக்கின்றது.

எந்தெந்தக் குணங்களை நுகர்ந்தோமோ அனைத்தும் உடலுக்குள் அந்த அணுவாக மாறிய பின் அதற்கு இரை தேவை… அந்த உணர்ச்சிகளைத் தூண்டும்.

நாம் எதை எண்ணுகின்றோமோ அதன் வழி இந்த உயிர் எடுத்துக் கொடுத்து அந்த வழிக்கே நம்மை அழைத்துச் சென்று விடுகின்றது.

இதை எல்லாம் மாற்றி அமைக்க வேண்டும் என்பதற்குத்தான் குருநாதர் காட்டிய அருள் வழியில்… அந்த மெய் ஞானிகள் தங்களுக்குள் வளர்த்துக் கொண்ட மெய் உணர்வுகளை உங்களுக்குள் இந்த உபதேச வாயிலாகப் பதிவாக்கிக் கொண்டே வருகின்றோம்.

1.அதை நீங்கள் வளர்த்து தீமைகளை அகற்றிடும் சக்தி பெற்று
2.என்றென்றும் அவர்களின் அருள் வட்டத்திலே வாழ்ந்திட வேண்டும்.
3.விஞ்ஞானத்தால் வரும் தீமைகளிலிருந்து விடுபட வேண்டும்.