குருநாதர் சொன்னது:-
1.உனக்கு இடைஞ்சலாகும் பொழுது நான் சொன்ன உயர்ந்த சக்தியை நீ சேர்த்துக் கொண்டால்
2.உன் கெடுதல் நீங்கும்… உன் துன்பங்கள் விலகும்
3.அந்தத் துன்பத்தை நீக்குவதற்குத் தான் உனக்குள் இதைப் பதிவு செய்கிறேன்…!
இதைக் கடைசியில் சொல்வார். ஆனால் அதற்கு முன்னாடி என்னை உதைப்பார்… எனக்கே தெரியாது.
“ஏன் தான் இப்படித் தொல்லை கொடுக்கின்றாரோ…” என்று அவர் மேல் எனக்கு வெறுப்பு வரும். அவரிடமிருந்து “தப்பித்து ஓடிப் போய் விடலாமா…!” என்று நினைப்பேன்.
எங்கேயடா நீ தப்பப் போகின்றாய்…? என்பார் குருநாதர்.. பல இம்சை…!
வழுக்கலான பாறையாக இருக்கும் அங்கே போகச் சொல்வார். போனால் கீழே விழுந்து பல்லெல்லாம் உடைந்து விடும். அதிலே ஒரு பொருளைக் காட்டி “நீ எடுத்துக் கொண்டு வாடா…” என்பார்
அதே போன்று பனிப்பாறையாக இருக்கும் இமயமலை போன்ற இடங்களுக்குச் செல்லும்படி சொல்வார் ஆனால் மேலே துணி ஏதும் போடக்கூடாது… கோவணத் துணியை மட்டும் தான் கட்டிக் கொண்டு செல்ல வேண்டும் என்பார்.
பார்த்தால் பாறைகளாக எல்லாம் உருப்படியாகத் தான் தெரியும் ஆனால் மரத்தின் மேலே பனி உறைந்திருக்கும். ஏமாந்து அங்கே கையை வைத்து விட்டால் “டப்…” என்று உள்ளே போய் பாதாளத்திற்கே போய்விடுவோம். ஆனால் அங்கே போடா… என்பார்.
இதையும் காட்டுவார்… எல்லாவற்றையும் சொல்வார்…!
1.ஆனால் இதில் இருந்து எல்லாம் உன்னைக் காப்பாற்றுவதற்குச் சக்தி வேண்டும்… வலு வேண்டும்…
2.அதை எப்படி எடுத்துக் கொள்ள வேண்டும் தெரியுமா…? என்பார்
3.நான் சொன்னதை நினைக்கவில்லை என்றால் நீ உள்ளே சென்று விடுவாய்
4.நான் சொன்ன முறைப்படி எண்ணினால் நீ உன்னைக் காப்பாற்றிக் கொள்ளலாம்.
ஏனென்றால் ஆபத்து வரும் நேரங்களில் இதையெல்லாம் சொல்லிக் கொடுப்பார் குருநாதர்.
நான் போய்க் கொண்டே இருப்பேன். ஒரு இடத்தில் மரத்தின் மீது பனிக்கட்டியாக உறைந்து இருக்கின்றது. ஆனால் அந்தப் பக்கம் பார்த்தால் திடு…திடு… திடு…திடு… என்று பனிப்பாறைகள் உடைந்து விழுந்து கொண்டிருக்கின்றது.
இங்கே பனி மலையில் காலை வைக்கின்றேன். பொரு..பொரு.. என்று உள்ளே போகின்றது. என்னுடைய ஒரு கால் “டபக்…” என்று உள்ளே இறங்கி விட்டது. இறங்கியவுடன் என்னுடைய எண்ணம் எப்படி வருகின்றது…?
“செத்து விடுவேன்…!” என்ற எண்ணம் தான் எனக்கு வருகின்றது…!
1.நான் உன்னிடம் என்னடா சொன்னேன்…!
2.நீ இப்போது என்னடா செய்கின்றாய்…? என்கிறார் குருநாதர்
ஆக… என்னுடைய உணர்வு ஏன்ன செய்கின்றது…?
1.குருநாதர் கொடுத்த சக்தியை அந்த இடத்திலே என்னால் பயன்படுத்த முடியவில்லை.
2.புவியின் ஈர்ப்பில் இருக்கப்படும் பொழுது இறந்துவிடுவோம்…! என்ற உணர்வு தான் உடனடியாக வருகின்றது
3.நல்லதை நினைக்கவே முடியவில்லை…!
இந்த உபதேசத்தைக் கேட்டுக் கொண்டிருக்கின்றீர்கள். அடுத்து ஈஸ்வரா…! என்று எண்ணித் தியானத்தில் அமர்ந்தவுடன்… எனக்கு மனதை ஒரு நிலைப்படுத்த முடியவில்லை (கான்சன்ட்ரேஷன் பண்ண முடியவில்லை) தியானம் வரவில்லை… என்னால் எண்ணத்தை நிலையாக நிறுத்த முடியவில்லை… சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள்.
நிலையாக அதை நிறுத்த முடியாது… அது பல அலைகள் ஓடிக்கொண்டே இருக்கும்.
ஆனால் இப்பொழுது யாம் சொல்லும் போது கேட்டுக் கொண்டிருந்தால் அது நல்ல அலைகளாக இருக்கும். ஆக… எப்பொழுதெல்லாம் குணங்கள் கெடுகின்றதோ அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் நல்ல உணர்வு எனக்குள் வளர வேண்டும் என்று எண்ணி உங்கள் உடலுக்குள் செலுத்தக்கூடிய நிலையில் ஆத்ம சுத்தியில் தான் இருக்கின்றது.
குருநாதர் காட்டிய வழியில் மிக மிக உயர்ந்த அருள் சக்திகளை உங்களுக்குள் பதிவு செய்கின்றேன்.
1.மகரிஷிகளின் அருள் சக்தி காற்றிலே படர்ந்து இருக்கின்றது.
2.அதை எடுக்கக்கூடிய திறன் உங்களுக்கு வேண்டும் அல்லவா…!
3.நான் பேசுகின்றேன்… நீங்கள் கேட்கின்றீர்கள்… அதற்கு வேண்டிய கரண்ட் தேவை…!
4.இல்லை என்றால் உங்களால் எடுக்க முடியாது… வெறுமனே எண்ணி எடுக்க முடியாது.
அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று உயிருடன் தொடர்பு கொண்டு அதைக் கூட்டிக் கொள்ள வேண்டும். இதைப் பழகிக் கொள்ள வேண்டும்.
தையல் வேலை பழகியவர்கள் துணியை வெட்டி அழகாக நேர்த்தியாகத் தைக்கின்றார்கள். மற்றவரிடம் பேசிக் கொண்டு கூட தைப்பார்கள்.
ஆனால் புதிதாகத் தைக்க வேண்டும் என்று சென்றால் கவனமாகப் பார்த்துத் தைத்தாலும் கூட சரியாக வராது. அந்தப் பழக்கம் வரும் வரை அது சீராக வராது.
அதைப் போன்று தான் அந்தப் பழக்கத்திற்கு வருவதற்குத் தான் உங்களுக்குத் திரும்பத் திரும்ப… பல கோணங்களில் உணர்த்திக் கொண்டு வருவது.
குருநாதர் என்னைக் காட்டிற்குள் அழைத்துச் சென்று தான்… “முதலிலே சொன்ன மாதிரி பல இம்சைகளைக் கொடுத்து… ஞானிகள் சக்திகளைப் பெறுவதற்குப் பழக்கிக் கொடுத்தார்…!”
இப்பொழுது உங்களிடம் இதை ஒவ்வொன்றாகச் சொல்லிச் சொல்லித் தெளிவாக்கிக் கொண்டு வருகின்றோம். மரம் செடி கொடிகளுக்கு உரத்தைப் போடுவது போன்று
1.இதைக் கேட்டுக் கொண்டிருப்பவர்கள் அவரவர்கள் மன நிலைக்குத் தகுந்த மாதிரி…
2.எத்தனை பேர் எந்தெந்த வகையில் வந்தாலும் அவர்களுக்கெல்லாம் நல்லது நடக்க வேண்டும் என்ற நிலையில் தான்
3.என்னுடைய இந்த உபதேசமே அமையும்… உங்களுக்குள் அந்தச் சக்தி கூடும்.
ஞானிகள் உணர்வை இப்படி உரமாக உங்களுக்குள் ஏற்றி வைத்த பின் ஈஸ்வரா…! என்று நீங்கள் உயிரை எண்ணி அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று எண்ணினால் நல்ல குணங்கள் வலுவாகி… அடுத்து நல்லதைச் சிந்திப்பதற்கும் நோய்கள் அகன்று… வேதனைகள் அகன்று உங்கள் சொல்லிலே வலிமையும் செயல்கள் புனிதமும் பெறும்.
என் பையன் சொன்னபடி கேட்கவில்லை; என் வீட்டுக்காரர் என்னை எதிர்த்துக் கொண்டேயிருக்கின்றார்; என் நண்பன் வெறுத்துப் பேசுகின்றான்; என் தொழில் சரியாக நடக்கவில்லை என்று இப்படி எல்லாம் சொல்ல வராது.
என் பையன் தெளிந்த நிலை பெறுவான்… என் வியாபாரம் விருத்தியாகும்… கணவன் மனைவி நாங்கள் ஒன்றி வாழ்வோம்… நோய்கள் அகலும்… என்று தன்னாலே சொல்ல வைக்கும்.
தீமையாக எண்ண விடாதபடி நல்லதாகவே உங்களை எண்ண வைக்கும்… உங்கள் அனுபவத்தில் பார்க்கலாம்…!