ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

July 4, 2023

வேதனை வந்த பின் நம்மால் நல்லதைச் சிந்திக்கவே முடிவதில்லை… ஏன்…?

கீதையிலே சொல்லப்பட்ட உண்மை “நீ எதை எண்ணுகின்றாயோ அதுவாகின்றாய்…” எந்தக் குணத்தை நீ சுவாசிக்கின்றாயோ… அதுவாகின்றாய்…!”

உதாரணமாக… மாம்பழம் வேண்டும் என்று எண்ணும் பொழுது அதைத் தேடிச் செல்கிறோம். அதைச் சுவாசித்துக் கடைக்குச் சென்று அதை வாங்கும்படி செய்கின்றது. வாங்கிய பின் அதை ரசித்துச் சாப்பிடுகின்றோம். “மாம்பழம் வேண்டும் என்கிற போது இவ்வாறு செய்கிறோம்…”

அதைப் போல் மூஷிகவாகனா…! ஒருவர் குற்றம் செய்கிறார் என்று பார்த்த பின் அவரை உதைக்க வேண்டும் என்று எண்ணுகின்றேன்… அந்த உணர்வை எண்ணும் போது சுவாசிக்கின்றேன்.
1.அதே உணர்வு கொண்டு கம்பையோ மற்ற ஒரு ஆயுதத்தையோ எடுத்து அவனை அடிக்க வேண்டும் என்று செல்கின்றேன்.
2.ஆனால் இங்கே மாம்பழம் வாங்க வேண்டும் என்றால் கூடையை எடுத்துச் சென்று அதை வாங்கிச் சாப்பிடுகின்றோம்
3.அதனால் தான் நீ எதை நினைக்கின்றாயோ… அதுவாகின்றாய் என்று கீதையில் சொல்லப்பட்டது.

இன்றைய செயல் நாளைய சரீரம்…! இதற்கு முன் நல்லதைப் பெற வேண்டும் என்று எத்தனையோ சரீரங்களில் எடுத்தது பரிணாம வளர்ச்சியாகி மனிதனாக உருவாக்கியது.

“வராக மூர்த்தி…” என்று காட்டியது போன்று முந்தி நாம் பன்றியாக இருக்கும் பொழுது கெட்டதை எண்ணாது… நாற்றத்தைப் பிளந்து அதற்குள் மறைந்துள்ள நல்ல பருப்பைச் சுவாசித்து… அதை உணவாக எடுத்து வளர்ந்து மனிதனாகக் கொண்டு வந்தது.

ஆக மனிதனாக வளர்ந்து வரும் போது உடலில் உள்ள நாற்றத்தைச் சிறுக சிறுக அப்புறப்படுத்திவிட்டு
1.நல்லதைச் சிந்தித்து…
2.நல்லதைச் செயல்படுத்தக்கூடிய சக்தியாக
3.நல்ல உடலை மனிதனாகப் பெற்றிருக்கின்றோம்..

நல்ல சுவைமிக்க உணவை உட்கொண்டாலும் நம்முடைய மலம் நாற்றமாகின்றது.

ஆடு மாடு மற்றும் மிருகங்கள் கெட்டதைச் (விஷமானதை) சாப்பிட்டாலும் அந்தக் கெட்டதை உடலாக மாற்றுகின்றது ஆனால் நல்லதை மலமாக மாற்றி விடுகின்றது… அது நாற்றமாவதில்லை… நல்லதைத்தான் அது கழிக்கின்றது

வராக மூர்த்தி என்று அதனால் தான் பன்றித் தலையைப் போட்டு மனித உடலாகக் காட்டி இருக்கின்றார்கள்.

பன்றியாக இருக்கும் போது நாற்றத்தை நினைக்கவில்லை. அதற்குள் இருக்கும் நல்லதை நுகர்ந்த்து… நல்ல சுவாசத்தை எடுத்து நல்ல பருப்பை எடுத்தது.

அதிலே சேர்த்துக் கொண்ட அந்தச் சத்து தான்… படிப்படியாக… படிப்படியாகக் கெட்டதை நீக்கி… மனிதனாக இன்று வளர்ந்து இருக்கின்றோம். நாம் சாப்பிடுவது… நினைக்கிறது அதில் உள்ள விஷத்தை எல்லாம் கழிக்கின்றது மனித உடல்

ஆனால் மனிதனாக வளர்ச்சி அடைந்த நிலையில் இன்று என்ன செய்து கொண்டிருக்கின்றோம்…?

என் பையன் நல்லவனாக வேண்டும் என்று ஒரு தடவை நினைக்கின்றோம் ஆனால் சேட்டை செய்கின்றானே… இப்படிச் செய்கின்றானே… இப்படிச் செய்கின்றானே… என்று வேதனைப்படுகின்றோம்.
1.இதைப் பல முறை எண்ணுகின்றோம்.
2.இப்படிப் பல முறை தியானம் செய்தால் என்ன ஆகும்…? வேதனை தான் விளையும்.

வியாபாரத்தில் ஒருவருக்குக் கடனாக கொடுக்கின்றோம். கடனைக் கொடுத்த பின்பு நான் கொடுத்தேன்… அவன் திருப்பிக் கொடுக்கவில்லை… நான் கொடுத்தேன் கொடுக்கவில்லை… கொடுக்கவில்லை… என்று இப்படிப் பண்ணுகின்றார்களே இப்படிப் பண்ணுகின்றார்களே…! என்று வேதனையைத்தான் வளர்க்கின்றோம்.
1.ஒரு தடவை நல்லது செய்கின்றோம்.
2.ஆனால் பல தடவை வேதனையைத்தான் வளர்க்கின்றோம்… வேதனை தான் உடலுக்குள் வளர்கின்றது,

இதை மாற்ற முடிகிறதா…? நல்லதைச் சிந்திக்க முடியாதபடி போய் விடுகின்றது அதைத் தான் தியானம் பண்ணுகின்றோம். இதைப் போன்ற உணர்வின் தன்மைகள் எல்லாம் விஷம்.

விஷம் (வேதனை) அதிகமாகும் பொழுது…
1.அந்த விஷத்தை உடல் கழிக்க முடியாதபடி இரத்தத்துடன் கலந்து எல்லாமே நஞ்சாக மாற்றி விடுகின்றது.
2.கழிக்கக்கூடிய திறனை இழந்து விட்டால் எல்லாம் நஞ்சாகி நல்ல குணங்களும் நஞ்சாக மாறி விடுகின்றது.

நஞ்சை நீக்கும் சக்தி பெற்ற மனித உடலில் நஞ்சை அதிகமாகச் சேர்த்தால் நஞ்சின் வாசனை உயிராத்மாவில் அதிகமாகி… எவ்வளவு அளவுகோல் கொண்டு அதைச் சேர்த்திருக்கின்றோமோ மிருகங்களில் எந்த நஞ்சு இருக்கிறதோ அங்கே தான் போகும். அது “லபக்…” என்று நம் உயிராத்மாவை இழுத்துக் கொள்ளும்.

அங்கே தான் நாம் பிறப்போம். அதை உறுதியாக்க முடியும்… மனிதனாகப் பிறப்பது உறுதி இல்லை.

ஆனால் நாம் ஒளியாக மாற்ற வேண்டும்.
1.ஞானிகள் கண்ட வழியில் சென்றால் தான் துன்பத்தைத் (நஞ்சை) துடைக்க முடியும்… உணர்வை ஒளியாக மாற்ற முடியும்.
2.இதைத் தவிர வேறு வழி இல்லை.