ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

April 29, 2023

நம் இச்சையை எங்கே வைக்க வேண்டும்

தசரதச் சக்கரவர்த்தி கங்கணமே கழட்டவில்லை…!
1.திருமணம் ஆகிக் கொண்டே உள்ளது
2.அவருக்கு எண்ணிலடங்காத மனைவி…! என்று கூறுகின்றனர்.

அதனின் உட்பொருள் என்ன…?

நம் வாழ்க்கையில் காலையிலிருந்து இரவு வரை எத்தனையோ சம்பவங்களைப் பார்க்கின்றோம்… கேட்கின்றோம்.

உதாரணமாக ஒருவன் சண்டை போடுவதைப் பார்க்கின்றோம் அவன் சண்டையிடும் உணர்வை நுகருகின்றோம்
1.நாம் கவர்ந்து கொண்டது அது வசிஷ்டர்…
2.சண்டையைப் பற்றித் தெரிந்து கொள்ளப்படும் பொழுது நம் உடலில் அது பிரம்மமாகின்றது.

அதே போன்று ஒருவன் நோயுடன் வேதனைப்படுகின்றான். அவன் ஏன் வேதனைப்படுகின்றான்…? என்று ஏங்கிப் பார்க்கும் போது உயிரிலே பட்டுத் தான் அதை அறிய முடிகின்றது.

இருந்தாலும் அவன் உடலில் விளைந்த தீய உணர்வுகள் நம் உடலுக்குள் உருவாகி விடுகின்றது. பிரம்ம குருவாக அருந்ததியாக இணைந்து செயல்படுகின்றது… வேதனைப்படும் நிலைகளுக்கு நம்மையும் இயக்கி விடுகிறது.

சங்கடப்பட்டது சலிப்புப் பட்டது ஆத்திரப்பட்டது என்று இப்படி எத்தனையோ உணர்வுகளை மாறி மாறி நாம் சுவாசித்துக் கொண்டே தான் இருக்கின்றோம்.

அதை உணர்த்துவதற்குத் தான் எண்ணிலடங்காத மனைவியைத் திருமணம் செய்து கொள்கிறான்…! என்று காட்டுகின்றார்கள்.
1.நம் உயிர் தான் அந்தத் தசரதச் சக்கரவர்த்தி…!
2.காரணப் பெயராக இப்படி வைக்கின்றார்கள்.

பத்தாவது நிலை அடையக்கூடிய நாம் எதை எதையெல்லாம் ஆசைப்படுகின்றோமோ “அதை எல்லாம் கவர்ந்து கொள்கின்றோம்… அது தான் வசிஷ்டர்…!”

தொழிலில் முன்னேற்றம் அடைய வேண்டும் என்று எண்ணுகின்றேன். ஆனால் எண்ணியது நடக்கவில்லை என்றால் வேதனைப்படுகின்றேன்.
1.வேதனையை நுகரும் பொழுது கவர்ந்து கொண்ட உணர்வுகள் நல்லது செய்வதற்கு மாறாக
2.வேதனையை உருவாக்கும் அணுவாக என்னுடன் இணைந்து அது சக்தியாக இயங்கத் தொடங்கி விடுகின்றது
3.இந்த உயிருடன் மனைவியாக அது இயக்கத் தொடங்கி விடுகிறது

ஆகவே… நாம் எதை ஏங்கிப் பெற வேண்டும் என்று விரும்புகின்றோமோ உயிரிலே பட்டு இந்த உணர்ச்சியின் இயக்கமாக
1.அந்த நுகர்ந்த உணர்வு தான் நம்மை இயக்குகின்றது
2.நுகர்ந்ததைத்தான் நமது உயிர் இயக்குகின்றது
3.நுகர்ந்ததைத்தான் நம் உடலாக மாற்றுகின்றது என்பதை இராமாயணக் காவியம் தெளிவாகக் கூறுகிறது.

ஆகவே நாம் எதைக் கவர வேண்டும்…? எதன் மீது நாம் இச்சைப்பட வேண்டும்…?

நம் இச்சையை உயிர் மீது வைக்க வேண்டும். இருளை நீக்கும் அருள் உணர்வைப் பெற வேண்டும் என்று இச்சைப்பட வேண்டும்.

பத்தாவது நிலை அடையக் கூடிய உயிர் நமக்குச் சக்கரவர்த்தியாக இருக்கின்றது. எதை எண்ணுகின்றோமோ அதை உயிர் எடுக்கின்றது
1.நாம் எதைக் கவர்கின்றோமோ வசிஷ்டர்.
2.இப்போது யாம் (ஞானகுரு) உபதேசிக்கக்கூடிய அருள் உணர்வுகளைப் பெற வேண்டும் என்று ஏங்கினால் இது வசிஷ்டர்.
3.நுகர்ந்த உணர்வுகள் உங்கள் உடலுக்குள் அணுவாகும் பொழுது பிரம்மம்
4.பிரம்மமாக ஆனபின் அணுவின் தன்மை அடைகின்றது
5.பிரம்மகுருவின் மனைவி அருந்ததி…!

எந்தக் குணத்தின் தன்மை உடலுக்குள் அணுவாக ஆனதோ அந்தச் சக்தியாக அந்த அணு இயக்கும் என்பதை இராமாயணத்தில் தெளிவாகக் காட்டியுள்ளார்கள்.

அதாவது “பத்தாவது நிலையான ஒளியை நாம் எவ்வாறு அடைவது…?” என்பதைத் தான் சாஸ்திரங்கள் நமக்குக் காட்டுகிறது..