ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

April 28, 2023

“உங்களுக்குப் புது சக்தியாகக் கொடுக்கின்றோம்…”

இன்றைய உலகில் நாம் என்ன தான் ஆட்டம் போட்டாலும் தேடிய செல்வங்கள் நம்மிடம் இருக்கின்றதா…? அழகான உடலும் இருக்கின்றதா…! இல்லையே…!

பின் எதற்காக ஏன் நாம் இந்த வாழ்க்கையில் போர் செய்ய வேண்டும்…?

ஆகவே நாம் ஒரு செயல் செய்யப்படும் பொழுது நல்ல உணர்வாக எடுத்து மற்றவர்களையும் நல் வழியில் நடத்தும் நிலையாகத் தூண்டச் செய்ய வேண்டும்.

நாம் சும்மாதான் இருக்கின்றோம். இருந்தாலும் ஒருவர் வேண்டாத ஒரு பொருளை எடுத்து அதை ரோட்டிலே அனாவசியமாகப் போடுகிறார்..! என்று வைத்துக் கொள்வோம். நாம் அதை உற்றுப் பார்க்கின்றோம்.

அப்பொழுது… “பார் அங்கே இருப்பதை எடுத்து ரோட்டில் போடுகிறான்…”
1.தேவையில்லாத பொருளை மக்கள் நடக்கிற பாதையில் போடுகிறான் என்று
2.அவனை நாம் வெறுக்கின்றோம்… நம் மனம் வெறுப்பாகி விடுகிறது.

ஆக மொத்தம் நம் உணர்வுகள் அடுத்தவர் செயலைப் பார்க்கப்படும் பொழுது இந்த நிலை அடைகின்றது. ஆனாலும் நாம் செய்ய வேண்டியது என்ன…?
1.மற்றவர் தவறான செயலைச் செய்தாலும் “அவர் நல்லதைச் செய்ய வேண்டும்…” என்ற உணர்வை நாம் தோற்றுவித்தல் வேண்டும்.
2.நம் சொல்லும் செயலும் பிறர் வாழ்க்கையைப் புனிதப்படுத்தக்கூடிய சக்தியாக வருதல் வேண்டும்.
4.அத்தகைய உணர்வினை எடுத்துக் கொண்டால் நம் உடலும் புனிதம் ஆகின்றது.

அதே சமயத்தில் நாம் ஒரு நண்பரிடம் பழகுகின்றோம். சந்தர்ப்பத்தில் அவர் உடல் நலக் குறைவாகி… காய்ச்சலோ மற்றதோ வந்து விடுகிறது.

வந்தவுடன் அவரைப் பார்க்கின்றோம். என்னப்பா…? என்று கேட்கிறோம்.

காய்ச்சல் இரண்டு நாளாக இருக்கின்றது என்று சொல்கின்றார். அதைக் கேட்டவுடன் அப்பொழுது அவர் (உடல் நலமில்லாத) உணர்வுகளைத் தான் நாம் சுவாசித்துக் கொள்கிறோம். அதைத் தடுக்கின்றோமா…?

ஆனால் ஒரு நோயாளியைப் பார்த்தால்… அடுத்த நிமிடம் அந்த நோயின் உணர்வு நமக்குள் வராதபடி தடுக்க வேண்டும்.

ஈஸ்வரா…! என்று உயிரை எண்ணி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் அவர் உடல் நலம் பெற வேண்டும் என்ற உணர்வை
1.நாம் மனதில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
2.அங்கே சொன்னால் நடக்காது…!

நமக்குள் துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்துக் கொண்டால் அந்த நோய் நமக்கு வராது. அதே சமயத்தில்
1.அவர் நலமாக வேண்டும் என்ற உணர்வை நாம் பாய்ச்சினால் அவரை நாம் காக்க முடியும்
2.சீக்கிரம் உடல் நலமாகிவிடும் என்ற சொல்லை… நம்மைச் சொல்லும்படி. வைக்கும்.

நம் உயிர் ஒளியாக இருக்கின்றது அந்த ஒளியான உணர்வின் தன்மையைப் பெறச் செய்வதற்குத் தான் குருநாதர் காட்டிய வழியில் துருவ நட்சத்திரத்தின் சக்தியைப் பதிவாக்கி அதை உங்களைப் பெறும்படி செய்கின்றோம்.

ஆனால் உங்கள் எண்ணம் எப்படியோ அதன்படி தான் நடக்கும்.

ஏனென்றால் நான் (ஞானகுரு) சொல்கிறேன். காடு மேடெல்லாம் அலைந்து குரு காட்டிய வழியில் பல அனுபவங்களைப் பெற்றேன்
1.கஷ்டம் எப்படி எதனால் வருகின்றது…?
2.அதை எப்படி நிவர்த்திக்க வேண்டும்…? என்ற சக்திகளையும் கொடுக்கின்றேன்.

சக்தி கொடுத்து அதை எடுக்கத் தெரியவில்லை என்றால் அது என்னுடைய குறையாக வராது.
1.என்னமோ சாமி சொல்கின்றார்…! நம்மால் முடியுமா…? என்றால் அது முடியாது போய்விடும்
2.சாமி சொன்னதை நான் கடைப்பிடிக்க வேண்டும் என்று எண்ணி எடுத்தால்
3.வரும் தீமைகளை உங்களால் மாற்றிக் கொள்ள முடியும்
4.சாமி தான் செய்து தருவார் என்று நீங்கள் நம்பினால் “அது ஏமாற்றம் தான்…”
5.நான் செய்து தருகிறேன் என்று சொன்னால் “நான் எப்படிச் செய்து தர முடியும்…!”
6.ஒரு விதையைக் கொடுத்தால் அதை முளைக்க வைத்து அதனுடைய பலனை எடுப்பது நீங்களாகத்தான் இருக்க முடியும்
7.உங்களுக்காக நான் உட்கொண்டால் என் பசி தான் தீரும்… உங்கள் பசி எப்படித் தீரும்…?

சில பேர் எனக்காக நீங்கள் பிரார்த்தனை செய்யுங்கள் என்று சொல்கின்றார்கள். அப்படி யாருக்கும் யாரும் செய்ய முடியாது.
1.உங்களுக்குக் கிடைக்க வேண்டும் என்று அருள் உணர்வுகளை யாம் பாய்ச்சினாலும்
2.அதை நீங்கள் எடுக்க வேண்டும் அல்லவா…!

ரேடியோ டிவி அலைகளை ஒலி/ஒளி பரப்புகின்றார்கள். நம் வீட்டில் உள்ள ரேடியோ டி.வி.யைத் திருப்பி வைத்தால் தானே அது வேலை செய்யும்.

அது போன்று தான் யாம் பதிவு செய்த துருவ நட்சத்திரத்தின் உணர்வலைகளை நீங்கள் நினைவுக்குக் கொண்டு வந்து அந்த அருளைப் பெற வேண்டும் என்று எண்ணினால் அது உங்களுக்குள் பாய்ந்து நல்லதாகும்..

ஆனால் சங்கடம் வரும் போது… “பாவிப்பயல்…! எனக்கு இடைஞ்சல் செய்தான்… உருப்படுவானா…?” என்று பிறரை எண்ணினால் அவன் உணர்வு வந்து அது தான் நம்மை இயக்கும்.

1.ஏனென்றால் எல்லாமே காற்றில் இருக்கின்றது நமக்குள்ளும் பதிவாகி இருக்கின்றது ஆக யாரிடத்திலிருந்தும் நாம் பிரிந்து இல்லை.
2.அந்த உணர்வுகள் எப்படி வேலை செய்கின்றதோ அது போன்றுதான் யாம் சொல்லும் சக்திகளும்.

இயற்கையின் இயக்கம் எப்படி இருக்கின்றது…? அகஸ்தியன் இருளை அகற்றி ஒளியாக மாறி துருவ நட்சத்திரமாக எப்படி ஆனான்…? என்பதை உங்களுக்குச் சிறுகச் சிறுகப் பதிவு செய்கின்றோம்.

அதைப் பெற வேண்டும் என்று நீங்கள் ஆசைப்பட்டால் உங்களுக்குள் நிச்சயம் அது வளரும்.