ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

April 1, 2023

“நான் உங்களைக் காப்பாற்றுகிறேன்…!” என்று சொன்னால் அது உங்களை ஏமாற்றுவதாகத்தான் அர்த்தம்

உயிரணு தோன்றிய பின் பூமிக்குள் வந்து உடல் பெற்ற பின்
1.நுகர்ந்த உணர்வுகள் அதற்குள் எண்ணங்களாக எப்படி இயக்குகிறது என்றும்…?
2.அதன் படி இந்த உலகம் எப்படி இயங்குகிறது என்றும்…? மனித உடல் எப்படி இயங்குகிறது…? என்றும்
3.உயிர் என்ற நிலை வரும் பொழுது மனிதன் எப்படி உருவானான்…? என்ற நிலையினையும்
4.ஐக்கிய உணர்வு கொண்டு மனிதன் தன்னைத்தான் அறிந்து எப்படி வாழ வேண்டும்…? என்றும்
5.அன்றே நமக்குக் வழி வகுத்துக் கொடுத்தது தான் இராமாயணமும் மகாபாரதமும்

அன்றாட வாழ்க்கையில் காலையிலிருந்டு இரவு வரை அந்தந்தச் சந்த்ரப்பத்திற்கொப்ப நாம் நுகர்ந்த உணர்வுகள் ஒன்றுடன் ஒன்று மோதுகின்றது… ஒன்றை ஒன்று வென்றிடும் நிலை வருகின்றது…!

நாம் நுகர்ந்த உணர்வுகள் உடலுக்குள் எப்படிப் போர் செய்கின்றதோ இதைப் போன்று ஆசையின் நிமித்தம் ஒவ்வொரு உடலும் தான் வாழ எத்தனையோ போர் செய்கின்றது.

அத்தகைய போர் நிலையில் ஒரு குணத்தை எடுத்தால் தர்மத்தையும் நியாயத்தையும் பார்ப்பதில்லை… அப்படிப்பட்டவனைச் சத்திரியன் என்று சொல்கின்றார்கள்.
1.ஒன்று அது மற்றொன்றை அடிமைப்படுத்தும் உணர்வுகளை அதுவே வளர்ச்சி என்ற நிலையில்
2.எந்த உணர்வின் தன்மை வருகின்றதோ… சத்திரியத்தின் தர்மத்தின் தன்மை கொண்டு அங்கே உருவாகின்றது.

அதே சமயத்தில் நாம் நுகர்ந்த உணர்வுகளுக்குள் எதை அடக்க வேண்டும் எதை நினைக்கின்றோமோ… அதை அடக்க வேண்டும் என்று எண்ணிச் செயல்படுத்தினால் அந்த உணர்வுகள் தனக்குள் பிரம்மம் ஆகி விடுகின்றது.

அந்த எண்ணத்தின் தன்மை எவர் கொள்கின்றனரோ அது பிரம்மத்தின் தன்மை அடைந்து அதன் உணர்வுக்கு ஒப்ப உடலின் தன்மையாகத் தன் வாழ்க்கையின் நிலைகளை எவ்வாறு மாற்றி அமைக்க முடியும் என்று தெளிவாகக் கூறுகிறது நம் சாஸ்திரங்கள்.

அதை எல்லாம் நாம் மறந்து விட்டோம்…! நம்மை நாம் இழந்து… நமக்குள் இருக்கும் சக்திகளை அறியாது…
1.எவனோ செய்வான் எவரோ செய்வார் என்ற நிலையும்
2.ஆண்டவன் எங்கோ இருக்கின்றான்… இறைவன் எங்கோ இருக்கின்றான்…
3.ஈசன் எங்கேயோ இருக்கின்றான்… சிவன் எங்கேயோ இருக்கின்றான்… என்று
4.நம்மை அலையவிட்டு ஆண்டவனைத் தேடிக் கொண்டிருக்கும்படி செய்து விட்டனர்.

அதே சமயத்தில் ஆசையின் நிமித்தம் செல்வத்தைத் தேடவும்… இந்த உடலில் இச்சைகளைப் பெறவும்… அரசர்கள் சுகபோகம் என்று ஆசையை ஊட்டி அதை வளர்த்து விட்டனர்.

ஞானிகள் உருவாக்கிய ஆலயங்களின் தத்துவங்களைத் திரிபு செய்து
1.தன் ஆசையை நிறைவேற்ற இந்தத் தெய்வத்தை வணங்கினால்
2.உனக்குச் செல்வம் வரும் என்றும் மாற்றிவிட்டனர்.

ஆனால்… அப்படி ஆசையின் உணர்வுகள் வளரப்படும் பொழுது தான் எண்ணியது தடைப்பட்டால் வேதனையாகின்றது. வேதனைகள் அதிகமானால் “வெறி கொண்டு… தான் எப்படியும் வாழ வேண்டும் என்ற ஆசையில் திருடு கொலை கொள்ளைகளை உருவாக்கி விட்டனர்…”

இத்தகைய நிலைகள் அரசனால் உருவாக்கப்பட்டு அதன் வழி வழி வளர்ந்து நம்மை அறியாது பெரும் தவறின் வழிகளுக்கே அழைத்துச் செல்லும் சக்தியாக இன்று அது பெருகி விட்டது.

இதைப் போன்ற நிலைகளிலிருந்து நாம் மீள்தல் வேண்டும். இந்த உடலுக்குப் பின் நாம் பிறவியில்லா நிலை அடைய வேண்டும்.

நஞ்சினை வென்றிடும் மின்னணுக்களை அகஸ்தியன் நுகர்ந்து உணர்வுகள் அனைத்தையும் உயிருடன் ஒன்றிய ஒளியின் கதிராக அவன் எவ்வாறு மாற்றினானோ அதைப் போன்று நாமும்…
1.அந்த அகஸ்தியன் நுகர்ந்த மின்கதிர்களை எடுப்போம் என்றால்
2.இந்த உலகில் வரும் விஷத்தின் தன்மைகளை அடக்கி ஒளியாக ஆக்க முடியும்.

இரு நட்சத்திரங்களின் கதிரியக்கங்கள் மோதும் பொழுது மின்னலாகப் பாய்கிறது.
1.அந்த ஒளிக் கதிர்களை அகஸ்தியன் வழியில் எடுத்தால்…
2.(அதாவது) மறைமுகமாக எடுத்து உடலில் இருக்கக்கூடிய அணுக்களுக்கு இரையாகக் கொடுத்தால்
3.நஞ்சை வென்றிடும் சக்திகளை நிச்சயம் பெறுவோம்.

ஆகவே அகஸ்தியன் எப்படித் துருவ நட்சத்திரமாக ஆனானோ… அதனின்று வரும் பேரருள் உணர்வுகளைச் சிறுகச் சிறுக உங்களுக்குள் பெறச் செய்வதற்குத் தான் “இந்த உணர்வை ஊட்டி… உங்கள் நினைவை அங்கே அழைத்துச் சென்று… அந்த உணர்வை நுகரும்படி செய்கின்றோம்…”

அதை நீங்கள் எடுத்துக் கொண்டால் உங்கள் உடலில் அது இந்திரீகமாக மாறி அதே உணர்வுகள் அணுவாக விளையத் தொடங்கும். விளைந்த பின் அது தன் இரைக்காக உணர்ச்சிகளை உந்தும் போது துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளைக் கவரும் தன்மையாக வரும்.

துருவ நட்சத்திரத்தின் சக்தியை இப்படிக் கவரும் போது… அறிவின் தன்மையாக இருளை நீக்கும் எண்ணங்கள் வந்து… உங்கள் வாழ்க்கையைச் சீர்படுத்த அது உதவும் என்று தெளிவாகக் கூறுகின்றோம் (ஞானகுரு).

ஆனால் உங்களுக்காக இதை யாரும் செயல்படுத்த மாட்டார்கள்…
1.நீங்கள் நுகர்ந்த உணர்வுகள் உங்களுக்குள் விளைந்து
2.அது தான் உங்களைக் காக்குமே தவிர வேறு யாரும் காக்கப் போவதில்லை.

“நான் உங்களைக் காப்பாற்றுகிறேன்…!” என்று சொன்னால் அது ஏமாற்றுவதாகத்தான் இருக்க முடியும். என் மேல் நீங்கள் பற்று கொள்ளும் போது உங்களிடம் இருந்து நான் வாங்கிக் கொள்ள முடியும். என்னை மதிக்கச் செய்து அதன் வழிகளிலே… அதன் மறைவிலே… நான் வாழத்தான் முடியும்… உங்களை ஏமாற்றி வாழலாம்.

ஆனால் நீங்கள் வாழ வேண்டும் அந்த உயர்ந்த உணர்வைப் பெற வேண்டும் என்ற இந்த இச்சையில்தான் குருநாதர் இட்ட கட்டளைப்படிதான் அருள் சேவையாக இதைச் செயல்படுத்திக் கொண்டிருக்கின்றேன்.

ஆகவே அந்த அகஸ்திய மாமகரிஷியின் அருள் சக்தியைப் பெறுவோம் அருள் வழியைப் பெறுவோம். இருளை அகற்றிடும் அருள் சக்தியை அனைவரையும் பெறச் செய்வோம்.