ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

April 24, 2023

எமனையே வதம் செய்த இடம்

நாம் தொழில் செய்கின்றோம் சந்தர்ப்பவசத்தால் நஷ்டமாகி விடுகின்றது. அதனால் வேதனை வருகின்றது. ஆனால் அதிலிருந்து மீள நமக்குச் சரியான சிந்தனை இல்லை என்றால் இருள் சூழ்ந்து விடுகின்றது.

வேதனை வந்தால் நமக்கு நல்ல சிந்தனை வருகின்றதா…? இல்லை…!

பொருளை வாங்கியவன் பணத்தைத் திரும்பக் கொடுக்கவில்லை என்றால் “இப்படிச் செய்கின்றானே…” என்று அவனை எண்ணி வேதனைப்படுகின்றோம்.

அபிராமி ஆலயத்தில் எதைக் கொண்டு வருகின்றார்கள்…?

நஷ்டமாகும் போது…
1.அப்போதே அது ஏன்…? என்ற அந்தத் தெளிவான உணர்வைச் சுவாசிக்கப்படும் பொழுது
2.தன் எண்ணத்தால் தீமையை அகற்றிடும் உணர்ச்சியை ஊட்ட முடியும்
3.அப்பொழுது இருளை நீக்கும் சக்தியாக அது வளருகின்றது.

ஏனென்றால் அந்த அபிராமி ஆலயத்தில்
1.“என்றும் பதினாறு” என்ற நிலையை அங்கே உருவாக்கிக் காட்டி உள்ளார்கள்
2.எமனையே வதம் செய்த இடம் என்று…!

வேதனை என்ற உணர்வு வந்தால் அது வராது தடுக்கும் சக்தியாக (எமனாக வரும்) அந்தச் சங்கட உணர்வுகளை… இருள் சூழ்ந்த நிலைகளை “நம்மால் நீக்க முடியும்…” என்று அங்கே காட்டுகின்றார்கள்.

ஞானிகளால் உருவாக்கப்பட்ட ஆலயங்கள் எல்லாம் மனிதர்களை தெய்வமாக வாழச் செய்யும் நிலைகள். ஆனால்
1.”ஆயுள் ஹோமத்தைச் செய்தால் ஆயுளை நீட்டிக்கலாம்…” என்று காட்டி விட்டு
2.ஞானிகள் சொன்ன உண்மையான உணர்வை எடுக்க முடியாதபடி நம்மை முட்டாளாக்கி விட்டார்கள்.

பணம் உள்ளவர்கள் அங்கே ஹோமத்தைச் செயல்படுத்துகின்றார்கள். அதே சமயத்தில் 60-வது கல்யாணத்தைச் செய்து முடித்தோம் என்ற எண்ணம் இருக்கும்.
1.அந்த அறுபதாம் கல்யாணத்தை முடித்துவிட்டு வந்த பின் இறந்தவர்கள் இருக்கின்றார்கள்
2.அல்லது 70… 80… என்று கல்யாணம் நடத்தியவர்களும் இறக்கத்தான் செய்கின்றார்கள்
3.இறக்காமல் யாரும் இருப்பதில்லை.

ஞானிகள் அந்த ஆலயத்தில் காட்டிய தத்துவம் என்ன…? நமக்குள் எப்பொழுது இருள் சூழ்கின்றதோ… அதை நீக்கும் வலிமையான நிலைகளை நாம் எடுத்துப் பழக வேண்டும்.

ஆனால் வேதனையான உணர்வுகளை எடுக்கப்படும் பொழுது “அந்த எண்ணம்” எமனாக மாறுகின்றது… எனக்கு இப்படி ஆகிவிட்டது என்று…!

சித்திர புத்திரன் கணக்கின் பிரகாரம் எமன் தண்டனை கொடுக்கின்றான்…! எப்படி…?

தொழிலில் நஷ்டமாகி விட்டது… நஷ்டமாகி விட்டது…! என்று எண்ணி எண்ணி அந்த உணர்வை வளர்த்துக் கொண்டால் அது தொடர்ந்து தனக்குள் வளர்ச்சியாகும் பொழுது
1.அந்த எண்ணமே நமக்கு எமனாக மாறுகின்றது
2.நாம் எதை எடுத்தோமோ வரிசைப்படுத்தி அது முழுமை பெறுகின்றது.

எமன் எதன் மீது வருகின்றான்…? எருமை மீது தான் வருகின்றான். சிந்தனையற்ற நிலை கொண்டது எருமை…! அதற்காக வேண்டி பரிணாம வளர்ச்சியில் வந்ததைத் தெளிவாக்குகின்றார்கள்.

ஆகவே மனிதனாக இருக்கக்கூடிய நாம் சிந்திக்கும் திறனை இழந்தால்… அந்த முரட்டுத்தனம் எதுவோ அதன்படி வளர்த்துக் கொண்ட பின்… இந்த உடலை விட்டுச் செல்லும் பொழுது எண்ணம் எதுவோ… விஷம் கொண்ட பாம்பின் உடலுக்குள் நரக வேதனைப்படும்படி உயிர் அழைத்துச் சென்று விடுகின்றது.

என் பையன் இப்படி இருக்கின்றானே…! என்று வேதனைப்பட்டுக் கொண்டே இருந்தால் வேதனையான எண்ணங்களையே வளர்த்தால்… உடலை விட்டுச் சென்ற பின் தன் பையன் உடலுக்குள் சென்று அவனையும் வீழ்த்தத்தான் அது உதவும். பையனையும் காக்க முடியாது…!

நமது எண்ணமே இப்படி எமனாக மாறுகிறது… சிந்தனையற்ற நிலைகளில் நாம் வாழுகின்றோம்…! என்ற நிலையை அந்த ஆலயத்தில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.

சற்று சிந்தித்து மக்களிடத்தில் இந்த உண்மைகளை எப்படி வெளிப்படுத்த வேண்டும்…? ஆலயத்திலே நாம் எப்படி வழிபடுத்த வேண்டும்…? என்ற ஒழுங்கு கூட இல்லாது போய்விட்டது.

ஆகவே கோவிலுக்குச் செல்லும் பொழுது நாம் எப்படி வழிப்பட வேண்டும்…?
1.தெளிந்த மனம் கொண்டு தெளிவான வாழ்க்கை வாழ வேண்டும்
2.பொருளறிந்து செயல்படும் அந்த அருள் சக்தி பெற வேண்டும்.
3.இந்த ஆலயம் வருவோரெல்லாம் அந்தச் சக்தி பெற வேண்டும்
4.மகிழ்ந்து வாழும் சக்தி பெற வேண்டும்
5.வருவோருக்கெல்லாம் அது கிடைக்க வேண்டும் என்று எண்ணினால் நாம் அதைப் பெறுகின்றோம்.

நீங்கள் எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் என்று நான் எண்ணினால் என் உயிருக்கு அது அபிஷேகமாக ஆகின்றது. அந்த உணர்ச்சிகள் இரத்தத்தில் கலந்து உடலில் உள்ள நல்ல அணுக்களுக்கு அது ஆகாரமாகக் கிடைக்கின்றது.

ஒவ்வொரு கோவிலிலும் சிலைக்குப் பாலாபிஷேகம் தேனாபிஷேகம் சந்தன அபிஷேகம் எல்லாம் செய்கின்றோம். ஆனால் அங்கே அபிஷேகம் செய்யும் போது நாம் என்ன எண்ணுகிறோம்…?

1.கஷ்டத்தை எல்லாம் அங்கே முறையிட்டு…
2.என்னை ஏன் இப்படித் தொல்லைப்படுத்துகிறாய்…?
3.எனக்கு ஏன் இப்படிக் கஷ்டமாக வருகின்றது…? என்று இதைத்தான் சொல்லி
4.நல்லது எடுப்பதற்கு மாறாக தப்பான வழிகளில் அங்கே வழிபடுகின்றோம்.

கனிகளை வைத்து அபிஷேகம் செய்யும் பொழுது இங்கே வேதனை தான் வருகின்றது. சந்தன அபிஷேகம் செய்யும் பொழுது அந்த நறுமணத்தையாவது நுகர்கின்றோமா…?

சந்தனத்தைப் போன்று நறுமணம் நாங்கள் பெற வேண்டும். இந்தக் கோயிலுக்கு வருவோர் அனைவரும் அந்த நறுமணம் பெற வேண்டும். என் குடும்பத்தில் உள்ள அனைவரும் அந்த நறுமணம் பெற வேண்டும் என்று தான் எண்ண வேண்டும்.

பையன் மீது ஆசையாக இருப்போம்… ஆனால் சரியாகப் படிக்கவில்லை என்று வரும் பொழுது அவன் மீது வெறுப்பாகி விடுகின்றது.

அப்போது என்ன செய்ய வேண்டும்…?

என் பையனுக்கு சந்தனத்தைப் போன்ற நறுமணம் கிடைக்க வேண்டும் அவனுக்கு அந்த நல்ல ஞானங்கள் வர வேண்டும் என்று நாம் எண்ணுதல் வேண்டும்.

1.இப்படி நாம் சுவாசிக்கும் பொழுது நம் உயிருக்கு உயர்ந்த அபிஷேகம் நடக்கிறது.
2.இந்த உணர்ச்சிகள் இரத்தத்தில் கலந்து மனிதனாக உருவாக்கிய நல்ல அணுக்களுக்கு ஆகாரமாக அமுதாகப் போய்ச் சேருகின்றது.