ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

April 14, 2023

சப்தரிஷி மண்டலத்தை அடையச் செய்யும் "தொடர் வரிசை"

இந்தத் தியானத்தைக் கடைப்பிடிப்போர்கள் எங்கெங்கெல்லாம் இருக்கின்றோமோ…
1.உடலை விட்டுப் பிரிந்து விட்டார்கள் என்று அவர்களைப் பற்றிக் கேள்விப்பட்டால்
2.அந்த ஆன்மாக்கள் சப்தரிஷி மண்டலத்துடன் இணைய வேண்டும் என்று தியானத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

அவர் வாழ்ந்த காலத்தில் நம்முடன் பழகியதை எண்ணி “ஐயோ… நல்லவராக இருந்தார்… இங்கே எல்லாம் வந்தார்… இப்பொழுது போய்விட்டாரே…!” என்று எண்ணுவதை விடுத்துப் பழக வேண்டும்.

அப்போது நாம் என்ன செய்ய வேண்டும்…? என்றால் மனித வாழ்க்கையின் துன்பத்தை அவர் கடந்தார்… இனி பேரின்பப் பெரு வாழ்வு அவர் பெற வேண்டும்…! என்ற இந்தப் பேரின்பத்தை தான் எண்ண வேண்டும்.

1.உடலில் வாழ்ந்த காலத்தில் பல துன்பங்களை அனுபவித்தார்
2.உடலை விட்டு அகன்ற பின் இனித் துன்பமில்லா ஏகாந்த நிலையை அவர் அடைய வேண்டும்
3.அவர் அருள் ஒளி பெறுதல் வேண்டும்
4.உலகில் இருளை அகற்றிடும் அருள் சக்தி பெற வேண்டும்… அவர் அருளானந்தம் பெற வேண்டும்
5.அந்த ஆன்மா ஏகாந்த நிலை பெற வேண்டும் என்று இப்படித்தான் எண்ணுதல் வேண்டும்.

இந்த உடல் நமக்குச் சொந்தமல்ல… உடலிலே நீடித்த நாள் வாழ்ந்தவர் எவரும் இல்லை. ஆகவே நாம் செயல்படுத்த வேண்டியது துன்பத்தைக் கடந்து அவர் செல்கின்றார். பேரின்பத்தை அவர் அடைய வேண்டும் என்பது தான்.

அவர் உணர்வு நமக்குள் இருப்பதால் துருவ தியானத்தில் எடுத்துக் கொண்ட வலுவின் துணை கொண்டு அந்த ஆன்மாக்களை விண் செலுத்துதல் வேண்டும்.
1.நமக்குப் பின்னும் இதே போன்று… “பின் உள்ளோர்” நாம் உடலை விட்டுப் பிரிந்த பின்
2.நாம் செய்வது போன்று அவர்கள் செய்தார்கள் என்றால் நாமும் எளிதில் சப்தரிஷி மண்டலத்தை அடைகின்றோம்.
3.அந்தத் தொடர் வரிசையை நாம் ஏற்படுத்திக் கொள்ளுதல் வேண்டும்

அதற்குத் தான் கூட்டமைப்பாக அமைத்துள்ளோம்.

ஏனென்றால் “ஒரு மனிதன் தனித்த நிலைகள் அங்கே சொல்ல முடியாது…!” ஒன்றுபட்ட உணர்வினை இயக்கப்பட்டுத் தான் செயல்படுத்த முடியும்.

உடலை விட்டுப் பிரிந்த ஆன்மாக்களை நாம் எப்படி விண் செலுத்துகின்றோமோ… இது போல நம்முடன் தொடர் கொண்டவர்கள்… நம்முடன் இணைந்தவர்கள்… கேள்வியுற்றபின் அங்கே செலுத்த வேண்டும்.
1.இந்தப் புவியின் ஈர்ப்புக்குள் சென்று விடாது அருள் ஒளி என்ற நிலைகள் உந்தப்பட்டு
2.என்றும் ஏகாந்த நிலை என்ற ஒளியின் சரீரத்தை நாம் பெற இது உதவும்.

ஒன்றின் துணை கொண்டு தான் ஒன்று வாழ்கின்றது… ஒன்று இல்லாது ஒன்று இல்லை… ஒன்றின் உணர்வு ஒன்றுதான் நாம் வாழுகின்றோம்…!

ஆகவே இதை வழிப்படுத்தி நாம் செயல்படுத்துதல் வேண்டும்… அழியா ஒளிச் சரீரம் பெற வேண்டும் என்பதை நாம் ஒவ்வொருவருமே வரிசைப்படுத்திக் கொள்ள வேண்டும்.