நமது குருநாதர் காட்டிய வழியில் உங்கள் வாழ்க்கையில் எத்தகைய தீமைகள் வந்தாலும் அந்தத் தீமை உங்களுக்குள் புகாதபடி செயல்படுத்திக் கொள்ளுங்கள்.
நமக்கு ஒருவர் தீமைகளை அதிகமாகச் செய்து கொண்டே இருக்கின்றார்… நம் மனம் தாங்கவில்லை…! என்றால் வேறு ஒன்றுமே செய்ய வேண்டியதில்லை…!
1.சும்மா கேட்டுக் கொண்டே இருங்கள்…
2.அவர்கள் எதையெல்லாம் கெட வேண்டும் என்று எப்படி எல்லாம் சொல்லுகின்றனரோ
3.அதைத் திருப்பி - நீங்களே அனுபவித்து அதன் வழியில் தெரிந்து கொள்ளுங்கள்…! என்று அவரிடம் சொன்னால் போதும்
4.அவர் சொன்ன கெடுதல் நமக்குள் வராது
ஆனால் அந்தத் தீங்கு செய்வோர் உணர்வுகளை நாம் நுகர்ந்தால் அந்தத் தீமையின் உணர்வுகள் இரத்ததில் இந்திரீகமாக மாறிவிடும்.
பின் அது அணுவாக மாறும் பொழுது அதே தீங்கான உணர்ச்சிகளை உணவாக எடுத்து வளரத் தொடங்கும். அப்பொழுது அதே பேச்சு அதே சொல் அதே நிலை நமக்குள்ளும் வந்து அந்தத் தீங்கின் அணுக்கள் விளைந்து நம் உடலையும் பாழ்படுத்திவிடும்.
இதைப் போன்ற நிலையில் இருந்து நாம் விடுபட வேண்டும்.
ஆகவே… யார் எத்தகைய தீமைகளைப் பேசினாலும்
1.நீ பேசுவது… நீ சொன்னது… நீ கேட்டது… எதையெல்லாம் கெட வேண்டும் என்று நீ எண்ணினாயோ…
2.அதையெல்லாம் உனக்குள்ளே நீயே அனுபவித்துத் தெரிந்து கொள்…
3.அதுவே உனக்குச் சிறந்ததாக இருக்கும்…! என்ற சொல்லிவிடுங்கள்.
அதற்கு அடுத்து
1.அறியாமையிலிருந்து அவர்கள் விடுபட வேண்டும்
2.பொருள் காணும் நிலைகள் பெற வேண்டும் என்று இதை நமக்குள் படைத்தல் வேண்டும்.
ஏனென்றால் அவர்கள் பேசிய உணர்வுகளை நாம் எடுக்காது… அவர் அறியாமையில் இருந்து விடுபட வேண்டும் என்ற உணர்வும் நல் ஒழுக்கத்தின் தன்மை அங்கே வர வேண்டும் என்றும் பண்பின் உயர்வு அங்கே வளர வேண்டும்… பண்பின் நிலைகள் கொண்டு அவர்கள் வளர வேண்டும் என்ற உணர்வுகளையும் நாம் எண்ணத்தால் எண்ணிவிட்டால்
1.இந்த நினைவின் ஆற்றல் நமக்குள் பண்பு கொண்ட உணர்வின் அணுக்களை வளர்க்கவும்
2.நம் சொல்லும் செயலும் நமக்கு நன்மை பயக்கும் நிலைகளாக வரும்.
ஏனென்றால்.. குரு காட்டிய அருள் வழியில் யாம் (ஞானகுரு) பல காலம் மலை காடு மேடெல்லாம் அலைந்து துயரப்பட்டுத் தான் இத்தகைய உணர்வுகள் எவ்வாறு இயக்குகின்றது என்பதை அறிந்து கொண்டோம்.
அறிந்து கொண்ட நிலையில் நாம் நுகர்ந்ததை உயிர் இரத்தத்தில் இந்திரீகமாக மாற்றுகின்றது. நம் உடல் இந்திரலோகமாக மாறுகின்றது அதிலே அந்த அணுவின் தன்மை உருவாகிவிட்டால் அது பிரம்மனாக உருவாகி அது தன் இனத்தின் தன்மை பெருக்குகின்றது… உடலாக… சிவமாக உருவாகின்றது.
விஷ்ணு வரம் கொடுக்கின்றான்… இந்திரனோ மகிழ்ச்சியாக ஏற்றுக் கொள்கின்றான்… பிரம்மனோ அதன் வழிப்படி உருவாக்குகின்றான்.
1.நாம் எதையெல்லாம் எண்ணுகின்றோமோ இது தான் ஜெபம் என்றும்
2.பல காலம் பிரம்மனை நோக்கித் தவம் இருந்தான்…! என்று இதைத் தான் (காவியங்களில்) சொல்வார்கள்
3.அதாவது இந்த வாழ்க்கையில் நாம் எதனை எண்ணி ஏங்குகின்றோமோ அதுவே பிரம்மமாக மாறுகின்றது… அதன் வலுவே ஒன்றாகக் கூடுகின்றது.
ஒரு குழம்பு வைக்கிறோம் என்றால் அதிலே காரத்தைப் போட வேண்டும் என்றாலும்… அதிகமாகப் போட்டுவிட்டால் சுவை கெட்டு விடுகின்றது.. இரசித்துச் சாப்பிடும் தன்மை இழந்து விடுகின்றது. அதே போல் உப்பை அதிகரித்து விட்டாலும் சுவைத்துச் சாப்பிட முடியாத நிலை வருகின்றது.
இது போன்றுதான் தீமை செய்யும் உணர்வுகள் நமக்குள் அதிகரித்து விட்டால் நமக்குள் மகிழ்ச்சி பெறும் உணர்வினை அது தடைப்படுத்துகின்றது.
அதை மாற்றி அமைக்க அருள் மகரிஷிகளின் உணர்வுகளை நுகர்ந்து சமப்படுத்துதல் வேண்டும். அருள் உணர்வுகளை அதிகமாகப் பெருக்கி சிறுமையும் தீமையும் விளைவிக்கும் அணுத் தன்மைகளைக் குறைத்திடல் வேண்டும்.
தீமைகளை வென்று உணர்வை ஒளியாக மாற்றி ஒளியின் சரீரமாக வாழ்ந்து கொண்டிருப்பது துருவ நட்சத்திரம். அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளைக் கவர்ந்தவர்கள் அதனுடைய ஈர்ப்பு வட்டத்தில் சப்தரிஷி மண்டலங்களாக வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.
நம் குரு காட்டிய வழிகள் கொண்டு அந்த அருள் சக்திகளை எடுக்க வேண்டும் என்பதற்காகத்தான் உங்களுக்குள் பதிவாக்குகின்றோம். யாம் பதிவாக்கியதை நினைவு கொண்டு உங்களுக்குள் எடுத்து வளர்த்துக் கொள்ளுங்கள்.
1.பகைமையான உணர்வுகள் வந்தால் அல்லது தீமை செய்வோர் உணர்வுகளை நுகர்ந்தால்
2.அது நமக்குள் புகாது அவர்களும் துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தி பெற்று
3.நல் வழி பெற வேண்டும் என்று நாம் பிரார்த்திப்போம்… தியானிப்போம்… தவமிருப்போம்.