ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

April 12, 2023

வாழ்க்கையில் இன்னல்கள் வந்து கொண்டு தான் இருக்கும்

அடுத்தவர்கள் நம்மைப் புகழ்வதைக் கண்டு நாம் ஏங்கி இருப்போம் என்றால்
1.“புகழ்ந்தோருக்கு நாம் எளிதாக அடிமையாகி விடுவோம்…!”
2.நம்மை நாம் ஏமாற்றிக் கொள்கின்றோம்…! என்று பொருள்.

அதே போன்று ஒருவரை நாம் புகழ்ந்து பேசினால் அந்தப் புகழ்ச்சியினால் மீண்டும் அவர்கள் நம்மை எதிர்பார்ப்பார்கள் அந்தப் புகழ்ச்சிக்குத் தக்கவாறு நாம் செயல்படவில்லை என்றால் நம்மைப் பழித்து பேசுவார்கள். நமக்கு எதிரிகளைத் தேடிக் கொள்கின்றோம் என்று தான் பொருள்.

நம்மை யார் இகழ்ந்து உரைத்தாலும் நாம் அதைக் கண்டு பதறாது “அருள் ஒளி பெற வேண்டும்…” என்ற மன உறுதியைக் கொள்தல் வேண்டும்.

1.அதே சமயம் பிறிதொருவரை நாம் இகழ்ந்துரைப்பது என்பது
2.நமக்கு “நாமே நம்மை இகழ்ந்து கொள்வது…” என்று தான் பொருள்.

ஒருவரை நாம் இகழ்ந்து பேசுகிறோம் என்றால் அடுத்தவர்கள் உடல்களில் அந்த இகழ்ச்சியின் உணர்வுகள் உருவாகும். இகழ்ந்து உரைக்கும் எதிரிகளை நாம் அப்போது உருவாக்கிக் கொள்கிறோம்.

எவரையும் இகழ்ந்து பேசினால் அந்த இகழ்ச்சியின் தன்மைகள் நம்மை எதிர்க்கும் நிலைகள் கொண்டு இகழ்ந்து பேசும் உணர்வுகளை அங்கே உருவாக்கிவிடும்.

ஆகவே இகழ்ந்துரைப்பது என்பது நமக்கு நாமே எதிரிகளை உருவாக்கி விடுகிறோம் என்று தான் பொருள்.

1.மனிதனுடைய வாழ்க்கையில் இன்னல்கள் வந்து கொண்டுதான் இருக்கும்
2.அந்த இன்னலைக் கண்டு நாம் அஞ்சினோம் என்றால் “இன்னலை எதிரியாக வளர்த்துக் கொள்கின்றோம்…” என்று தான் பொருள்
3அப்போது இன்னல் என்ற எதிரியை வீழ்த்திடும் சக்தியை நாம் இழந்து விடுகின்றோம்.

ஆகவே இன்னலைக் கண்டு அஞ்சாது அருள் ஒளி என்ற உணர்வுகளை வலுப்பெறச் செய்து இந்த வாழ்க்கையில் “நாம் எதனையும் வென்றிடும்…” அருள் ஒளி பெறுதல் வேண்டும்.

இந்த மனித வாழ்க்கையில் நாம் ஒவ்வொரு நிலைகளிலும் “உயர்ந்த குணங்களை வளர்க்கும் பொழுது அது நம்மை உயர்த்துகின்றது…” மற்றவர்களைத் தாழ்த்திடும் நிலை வரும் பொழுது எதிரிகளை உருவாக்கிக் கொள்கிறோம். நம்மைத் தாழ்த்தும்படி அவர்களை உருவாக்கிவிடுகிறோம்.

1.நமது வாழ்க்கையில் குரு அருளை எப்போதும் துணை கொண்டு
2.அருள் அருள் ஒளி கொண்டு என்றுமே நாம் இருளை அகற்றிடும் நிலையும்
3.”புகழுக்கு ஏங்கிச் செல்லாது…” உண்மை உணர்வுடன் சேவை என்ற நிலைகள் வருதல் வேண்டும்.

குறைகளைக் கண்டாலும் குறை நமக்குள் பதிவாகாதபடி… அவர்கள் பொருளறிந்து செயல்படும் சக்தி பெற வேண்டும்.. அறியாமை என்ற இருள்களிலிருந்து அவர்கள் விடுபட நீங்க வேண்டும்… மெய்ப்பொருள் காணும் திறன் அவர்கள் பெற வேண்டும்…! என்று அந்தக் குறை நமக்குள் வளராது மாற்றிக் கொள்ள வேண்டும்… நம்மை நாம் பாதுகாத்தல் வேண்டும்.

இது போன்று சீராக்கும் ஒரு பழக்கம் வந்துவிட்டால்
1.குறை உள்ளவரைப் பார்த்த உடனே… “நீ குறையாகஸ் செயல்படுகிறாய் என்று சொல்ல வராது
2.அதற்குண்டான சரியான மார்க்கத்தை அணுகிப் பேசும் நிலையும்
3.நம்முடைய சொல் அவரைக் குறையிலிருந்து மீட்டிடும் சக்தியாகவும் வரும்.