ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

April 17, 2023

அக்கால ஆச்சாரத்தையும் அனுஷ்டானங்களையும் காட்டுவதைவிட ஆத்ம வலுவைக் கூட்ட “இன்று அனுஷ்டிக்க வேண்டிய முறை முக்கியமானது...”

ஒவ்வொரு நொடிப் பொழுதிலும் நாம் எடுக்கும் சுவாசத்தால் ஆத்ம அலையின் தொடர்பு கொண்டுதான் சரீர இயக்கச் செயலினால் ஆத்மாவின் வலுவும் கூடிக் கொண்டே உள்ளது.

இயற்கையின் மாற்றக் குணங்களும்… உருவாகும் ஒவ்வொரு சக்தியுமே…
1.நொடிக்கு நொடி மாற்ற உராய்வு வளர்ப்பு தன்மையில் தான் மாற்றமும் வளர்ப்பும்
2.சுழற்சி ஓட்டத்தில் எல்லா வகை குண வளர்ப்பு முறையிலும் வளர்ந்து கொண்டுள்ளது.

காட்சி:-
அடர்ந்த காட்டுப் பகுதியில் மேடான மலைப் பகுதி தெரிகிறது. அதிலே மலையும் பாறைகளும் தெரிகிறது. மலையும் பாறையும் சேர்ந்து இருந்தாலும் ஓரிடத்தில் “மிகப் பெரிய பாறை ஒன்று” நிற்பதைப் போன்றும் தெரிகின்றது.

பிறிதொரு இடத்தில் அழகான குளமும் அக்குளத்தின் நீர் பாசி படிந்த கிளிப் பச்சையும் நிறம் போலவும் அப்பச்சையின் நிறம் மாறி மாறி கரும் பச்சையைப் போலவும் அதைச் சுற்றிச் சுற்றி மேலும் சில செடி கொடிகள் வளர்வதைப் போன்றும் தெரிகிறது.

பிறிதொரு இடத்தில் ஏற்றம் இறைக்கும் கிணறு இருக்கின்றது அதிலே நீர் உயர்ந்து குறைந்து இருப்பதைப் போன்றும் ஆனால் நீரின் நிறம் தெளிவு கொண்ட நீராகவும் காட்சியில் தெரிகின்றது.

இதன் விளக்கம் என்ன…?

பூமியின் பிடிப்புள்ள பாறைக்கும் அதற்கு மேல் பிடிப்பற்ற… அதாவது
1.பூமியின் வளர்ப்பு நிலையிலிருந்து மாறி
2.ஒரு பாறையின் மேல் ஒரு பாறை நிற்கின்றது என்றால்
3.அப்படி நிற்கும் நிலை எப்படி ஏற்படுகின்றது…?

பூமியின் வளர்ப்புப் பிடியுடன் வளரும் பாறைகள் இப்பூமியில் ஏற்படும் பிரளய காலங்களில்
1.சில மண்டல ஓட்டங்களின் சேர்க்கைக் காலங்களிலும்
2.பூமி ஈர்க்கும் அமில மாற்றத்திலும்
3.பூமி ஈர்த்து வெளிக் கக்கும் உஷ்ண அலையின் அமில வளர்ப்பில் அந்தந்த இடங்களில் வளரும்
4.கனி வளங்களுக்கும் கல் மண் இவற்றின் வளர்ப்பு நிலைகளுக்கும்
5.அதற்குக் கிடைக்கப் பெறும் ஊட்டச் சத்து மாறுபட்டவுடன்
6.பழக்கப்பட்டு எடுத்த வளர்ப்பு நிலை குன்றிய நிலையில் அக்கல்களில் சில வெடிப்பு நிலைகள் ஏற்பட்டு விடுகின்றது.

ஆகவே வளர்ந்த நிலையில் அதனுடைய சக்தி கிடைக்காமல் தடைப்பட்ட பின் அதன் தன்மை அதே நிலையிலேயே வெடிப்புப் பெற்று கீழிருந்து வளரும் பாறையின் மேல்… இப்பாறைகள் கரடு முரடாக… மலைகளில் ஒன்றுக்கு மேல் தனித் தனிப் பாறைகளாக உருண்டு நிற்கின்றன.

ஆனால் பூமியின் பிடிப்புடன் வளரும் பாறை மாறு கொண்ட வளர்ப்புடனே வளர்ந்து கொண்டுள்ளது.

நீரின் நிலை பாசி படர்ந்து வண்ணங்கள் மாறி தெரிந்ததன் நிலையும் இதைப் போன்றே ஒவ்வொரு நொடிக்கும் மாறும் உஷ்ண வெக்கையின் ஆவி நிலைக்கொப்ப மாற்றத் தன்மைகள் வருவதால் தான்.

இத்தகைய இயற்கையின் உண்மைகளை எல்லாம் எப்படி இதைப் போன்று அறிகின்றோமோ அதைப் போன்று தான் வளரும் மனித ஆத்ம வளர்ப்பிலும் மாற்றங்கள் உண்டு.

இப்பூமியின் பிடியுடன் வாழும் தன்மையில்… மாறி மாறி வளர்ந்து கொண்டுள்ள இயற்கையின் சுழற்சியில்… ஒன்றை ஒத்த தன்மையில் ஒன்றில்லாத உலகச் சுழற்சி நிலையில்
1.பல கோடி ஆண்டுகளுக்கு முன் இருந்த மனிதனின் வளர்ப்பு ஞானமும்
2.பத்தாயிரம் இருபதாயிரம் ஆண்டுகளுக்கு முன் இருந்த சித்தர்கள் பெற்ற ஞான சக்திக்கும்
3.இன்றைய வளர்ந்த கலியின் ஆத்ம ஞான சக்திக்கும் மிக மிக மாறுபாடுகள் உண்டு.

இன்றைய விஞ்ஞான காலத்திலும்
1.நம் செயலும் இயற்கையுடன் ஒன்றிச் சென்றுதான் ஞான சக்தி பெற வேண்டும் என்ற எண்ணத்தின் ஈர்ப்பைச் செலுத்தி
2.ஆசார அனுஷ்டானங்களை வலியுறுத்தி வகைப்படுத்தித்தான் எண்ணத்தைச் செலுத்தி வழி பெற வேண்டும் என்று உணராமல்
3.இக்கலியின் காலத்தில் மனித ஈர்ப்புத் துரித அறிவாற்றலின் சக்தியை
4.இக்கால நிலையின் சுழற்சியுடன் கலந்துள்ள தன்மையிலிருந்தே
5.அவரவர்களுக்கு அமைந்த வாழ்க்கையின் வளர்ப்பில் ஒவ்வொரு செயலிலுமே உயர்வின் ஞானத்தைச் செலுத்தி
6.ஆத்மாவின் வலுவுக்கு வலுக் கூட்டும் வழி முறையை வகுத்துக் கொள்ளுங்கள்.