ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

April 23, 2021

இருபத்தியேழு நட்சத்திரங்களின் சக்திகளை நாம் பெற வேண்டியதன் அவசியம்

 

இன்று எந்தப் பயிரினங்களாக இருந்தாலும் “பூச்சிக் கொல்லி மருந்துகள்” தெளிக்கவில்லை என்றால் அது சரியாக விளையாது. நாம் உணவாக உட்கொள்ளும் உணவுகள் அனைத்திலுமே இந்த நஞ்சின் தன்மையே கலந்துள்ளது.

நம் உடலிலே சிறுகச் சிறுக இந்த நஞ்சின் தன்மை கலக்கப்படும் பொழுது
1.கை கால் குடைச்சலும் மற்ற நோய்களும் வரக் காரணமாகின்றது.
2.அதே சமயத்தில் நஞ்சு அதிகரிக்கும் போது சிந்திக்கும் தன்மை இழக்கப்படுகின்றது.
3.சிந்திக்கும் தன்மை இழக்கும் போது தவறு செய்யும் இயல்புகள் அதிகமாகி விடுகின்றது... குற்ற இயல்புகளும் அதிகமாகி விடுகின்றது.

இதைப் போன்ற நிலைகளிலிருந்து நாம் தப்புவதற்கு என்ன செய்வது...? என்று நாம் சற்று சிந்தித்தல் வேண்டும். ஏனென்றால் இந்தக் காற்று மண்டலத்தில் விஞ்ஞான அறிவால் விஷத்தின் தன்மை அதிகளவில் பரப்பப்பட்டு விட்டது.

பூச்சிக்கொல்லி மருந்துகளால் உருவான பயிர் வகைகளை உணவாக உட்கொள்ளும் பொழுது நம் உடலில் அது வடிகட்டினாலும்
1.நம் ஆன்மாவில் கலந்தது
2.அதே விஷத்தின் தன்மைகளை இன்னொரு பக்கம் தூவினாலும்
3.அதை நமக்குள் இழுக்கும் சக்தியும் வருகின்றது.

ஆகையினால் அந்த விஷத்தின் தன்மை வரும் பொழுது நமக்குள் எத்தனையோ புதுவிதமான நோயாக மாறுகின்றது.

மாடு ஆடுகள் இவைகளெல்லாம் விஷத்தைத் தன் உடலாக மாற்றுகின்றது. நல்லதைக் கழிவாக மாற்றுகிறது.

ஆனால் பூச்சிகளைக் கொன்று விட்டு நல்ல உணவை உணவாக உட்கொள்ளலாம் என்று விஞ்ஞான அறிவு கொண்டு மருந்துகளைத் தூவிப் பயிர்களை உருவாக்குகின்றார்கள்.

அப்படி உருவாக்கினாலும் அந்த விஷத்தன்மை அதனுடன் கலந்து நம் உடலுக்குள்ளும் விஷத்தன்மைகளை ஊட்டி விடுகின்றது. இதைப் போன்று நம் உடலில் ஏற்படும் நிகழ்ச்சிகள் ஏராளமாக நடந்து கொண்டுள்ளது,

பயிரினங்களால் உருவாக்கப்பட்ட அந்த விஷத்தன்மை நம் உடலிலும் விளையத் தொடங்குகின்றது. அப்படி விளைந்த அந்த அணுக்கள் அதே உணர்ச்சிகளை ஊட்டி அந்த விஷத்தையே உணவாக உட்கொள்ளும் தன்மை வருகின்றது.

இதைப்போன்ற நிலையிலிருந்து விடுபட வேண்டும் என்பதற்குத் தான் உங்களுக்கு அடிக்கடி அடிக்கடி அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை ஞாபகப்படுத்திக் கொண்டே வருகின்றோம்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை எடுத்து நம் உடலில் உள்ள எல்லா அணுக்களிலும் அதை வளர்த்துக் கொண்டால் “விஷத்தை வென்றிடும் சக்தி...” பெறுகின்றோம்.

ஏனென்றால் துருவ நட்சத்திரம் எதனையுமே ஒளியாக மாற்றும் திறன் கொண்டது.

இந்தப் பிரபஞ்சத்தில் உள்ள மற்ற நட்சத்திரங்கள் வெளியிடும் மின்னல்கள்... மின் கதிர்கள் வெளிப்படுவதை துருவ நட்சத்திரம் எடுத்து அதை ஒளியாக மாற்றுகின்றது.

அதாவது...
1.27 நட்சத்திரங்களும் ஒன்றுக்கொன்று எதிர் நிலையாகி மின்னல்களாகச் சீறிப் பரவுவதை
2.அதிலிருந்து வரும் அந்த ஒளிக்கற்றைகளை நம் உடலில் உள்ள அணுக்கள்
3.அதனுடைய சந்தர்ப்பம் அதைப் பெறத் தொடங்கி விட்டால் சிந்திக்கும் திறனும் அதிகமாகின்றது
4.தீமை என்ற உணர்வுகள் நமக்குள் புகாமல் தடுக்கும் சக்தியும் பெறுகின்றது.
5.அதன் மூலம் எத்தகைய நஞ்சை நாமும் ஒளியாக மாற்றிட முடியும்.
5.விஞ்ஞானத்தால் வந்த கடும் நஞ்சையும் நாம் ஒளியாக மாற்றிட முடியும்.