ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

April 11, 2021

நல்லவர்களுக்குத் தான் துன்பம் அதிகம் வருகிறது என்றால் அதைத் தடுத்து நல்லதாக்க வேண்டுமல்லவா...?

 

நீங்கள் நல்லவராக இருக்கின்றீர்கள். ஒருவன் கடுமையான வேதனைப்படுகின்றான்... அவனை உற்றுப் பார்க்கின்றீர்கள். உங்கள் பாச உணர்வுகளில் இது கலக்கின்றது.

பார்த்தபின் இரக்கத்துடன் அவர்களுக்கு நல்ல உதவிகளைச் செய்கின்றீர்கள். அப்பொழுது உங்கள் நல்ல உணர்வுக்குள் அவரின் வேதனைகள் பாய்கிறது.

பாய்ந்த பின் என்ன நடக்கின்றது...?

பாலிலே பாதாமைப் போட்டு அதில் விஷத்தைக் கலந்து குடித்தால் என்ன ஆகும்...?

இதைப் போன்றுதான் பாச உணர்வோடு நீங்கள் பார்த்து இந்த உணர்வுடன் இன்று அவருக்கு உதவி செய்து இருக்கலாம்.
1.ஆனால் அந்த வேதனை சிறுகச் சிறுக உடலுக்குள் விளைந்தவுடனே
2.உங்களுக்குத் தலை வலி மேல் வலி எல்லாம் வரும்.

அது வந்தாலும் கூடப் பரவாயில்லை. ஆனால் என்ன ஆகின்றது...?

அந்த வேதனையான உணர்வுகள் உங்கள் ஆன்மாவில் இருக்கப்படும் பொழுது தொழிலின் நிமித்தம் நீங்கள் எதையாவது ஒரு பொருளைத் தேர்ந்தெடுக்கச் சென்றாலும் அந்த வேதனையுடன் பார்த்தவுடனே அதனின் தரத்தைப் பார்த்துச் சரக்கை வாங்க முடியாது.

1.அந்த வேதனைப்படும் நிலையும் சோர்வான நிலையும் கொண்டபின்
2.அதற்குத் தக்கவாறு தான் கலரும் தெரியும்... சரக்கும் தெரியும்.
3.அதை வாங்கிக் கொண்டு வந்து விடுகின்றோம்.

நாம் எடுத்துக் கொண்ட அந்த உணர்வுக்குத் தக்கவாறு வியாபாரத்திற்கு அதைக் கொண்டு வந்தாலும் “நமக்கு அது நல்ல சரக்காகத் தான் தெரியும். ஆனால் வியாபாரம் சரியாக ஆவதில்லை...!”

நாம் வைத்திருக்கின்ற சரக்கைப் பார்த்து... “என்ன இந்த மாதிரி ஒரு சரக்கை வைத்திருக்கிறீர்கள்...?” என்று கேட்பார்கள். இங்கே நமக்கு நல்ல சரக்காகத் தெரியும்... அது அடுத்தவர்களுக்கு மட்டமாக தெரியும்.

நாம் என்ன நினைப்போம்...?

பாருங்கள்... மட்டமான சரக்காக அங்கே வைத்திருக்கின்றார்கள் அங்கே கூட்டம் போகிறது... அதை வாங்கிச் செல்கிறார்கள். ஆனால் இங்கே நான் நல்ல சரக்கு வைத்து இருக்கின்றேன்... யாரும் எடுக்க மாட்டேன் என்கிறார்கள்...! என்போம்.

ஏனென்றால் இந்த உணர்வின் தன்மை எதுவோ... “கண்களில் இந்த அலைகள் வரும்...” கரு விழியை சாதாரணமாக நாம் பார்த்தால் இந்த வித்தியாசங்களை உணரலாம்.

ஒரே கண்கள்தான்...! இருந்தாலும்
1.சோகமாக இருக்கும்போது நம் கண் ஒளிகள் எப்படித் தெரிகின்றது...?
2.கோபமாக இருக்கும் பொழுது நம் கண்ணின் ஒளி அலைகள் எப்படித் தெரிகின்றது...?
3.சந்தோசமாக இருக்கும் பொழுது அந்த மகிழ்ச்சி நிலைகள் கொண்டு நம் கண்ணில் ஒளிகள் எப்படித் தெரிகிறது...? என்று
4.அந்தந்த உணர்வின் அலைகள் எந்த அலைக்குப் பாய்ச்சப்படுகிறது...? என்பது எல்லோருக்கும் தெரிந்தது தான்...! தெரியாமல் இல்லை...!

ஆனால் இது போன்ற நிலைகள் இருக்கும் போது நாம் நம்முடைய நல்லதை எப்படிப் பாதுகாக்க வேண்டும்...? என்பதற்குத்தான் இதைச் சொல்வது.

நல்லதை எண்ணித் தான் நாம் செயல்படுகின்றோம். ஆனால் நல்லவர்களுக்கு தான் இத்தகைய துன்பங்களும் அதிகமாக வருகின்றது.

“காரணம்...” என்ன என்றால்
1.பாசத்தால் பரிவால் அன்பால் நாம் பிறருடைய கஷ்டங்களை எடுத்துக் கொள்கின்றோம்
2.ஆனால் அதைத் துடைக்கத் தெரிவதில்லை
3.உடலில் உள்ள எல்லா அணுக்களிலும் இந்தத் தீமைகள் சேர்ந்து விடுகின்றது.

அதனால் வியாபாரம் மந்தம் ஆகின்றது. சரக்கைத் தரமான நிலைகள் கொண்டு பாதுகாக்க முடியவில்லை. இப்படிச் சங்கடமாகிப் போய்விட்டால் அடுத்து என்ன நடக்கின்றது...?

நல்ல மனதுடன் இருக்கும் பொழுது முதலில் வீட்டைச் சுத்தமாக வைத்திருப்பார். ஆனால் இப்பொழுது சுத்தமாக வைத்திருக்க மாட்டார்... சுத்தமாக வைக்க வேண்டும் என்ற மனமே வராது. வீட்டில் இருண்ட நிலையாக இருக்கும்.

ஆகவே... பலருக்கு உதவி செய்திருக்கிறார். இருந்தாலும் அந்தச் சங்கடமான உணர்வுகள் இவருக்குள் வந்தது அழுக்காகி விட்டால் வீட்டைச் சுத்தப்படுத்துவததோ மற்ற பொருள்களைச் சீராக அடுக்கி வைப்பதோ அது எல்லாம் அங்கே இருக்காது.

காரணம் அவருடைய தவறு அல்ல...! இந்த உணர்வின் இயக்கங்கள் அதுவாகத்தான் மாற்றும்.

நாம் வேலை செய்கிறோம். அப்பொழுது அந்த நேரத்தில் ஏதாவது ஒரு பொருளைக் கையில் எடுத்தோம் என்றாலும் வேலை செய்து முடிந்த பின் கையைக் கழுவிக் கொள்கின்றோம். அதிகமான நேரம் கடுமையாக வேலை செய்து அதனால் உடலில் வியர்வையானல் குளிக்கின்றோம்.

ஆனால் அது போன்று நம் ஆன்மாவில் அழுக்கானால் தூய்மைப்படுத்துகின்றோமா...?
1.ஆன்மாவை உடனுக்குடன் தூய்மைப்படுத்த வேண்டும் என்பதற்குத்தான்
2.குருநாதர் காட்டிய வழியில் அந்த ஞானிகளின் அருள் சக்தியைக் கொடுக்கின்றோம் (ஞானகுரு).