ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

April 12, 2021

அருள் சக்திகளை நீங்கள் பெறவேண்டும் என்று நான் தியானிக்கும் பொழுது நீங்கள் கதவைத் திறந்து வைத்தால் தானே அது உள்ளே புகும்…!

 

நீங்கள் கதவை அடைத்துவிட்டீர்கள் என்றால் எப்படி உள்ளே வர முடியும்…! கதவை அடைத்து எங்கேயோ சென்று விட்டீர்கள் என்றால் நான் (ஞானகுரு) உள்ளே வர முடியாதல்லவா…!

அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நீங்கள் பெற வேண்டும் என்று நான் அந்த அலைகளைப் பரப்பிக் கொண்டே இருக்கின்றேன். அதே எண்ணத்தை நீங்களும் எண்ணி அந்த அருள் சக்தி பெறவேண்டும் என்று ஏங்கினால் எளிதில் பெற முடியும்.

1.ஏனென்றால் எனது வேலை கடவுளை நான் எங்கும் தேடவில்லை…!
2.உங்கள் உயிரைத்தான் குருநாதர் கடவுளாக வணங்கும்படி சொன்னார்.
3.அவன் அமைத்த கோட்டை தான் உங்கள் உடல் என்று சொன்னார்.

பல ஆயிரம் ஆண்டுகள் இதன் உணர்வைத் தேர்ந்தெடுத்து இந்த மனித உருவை உருவாக்கி உள்ளது உயிர். அதற்குள் இருக்கக்கூடிய உயர்ந்த குணங்களைத் தெய்வமாக மதித்து
1.இந்த மனிதனை உருவாக்கும் உணர்வுகள் அனைத்தும்
2.அந்த மகரிஷிகளின் அருள் உணர்வு பெற வேண்டும் என்று தான் நான் எண்ணுகின்றேன்.

உலக வாழ்க்கையில் உயர்ந்த குணங்கள் கொண்டு வாழ்ந்தாலும் ஒவ்வொருவருக்குள்ளும் மறைந்திருக்கும் அந்தத் தீமைகளின் நிலையை நீக்குவதற்கு அருள் மகரிஷிகளின் உணர்வை எடுத்து ஆத்ம சுத்தி செய்து தூய்மைப்படுத்திக் கொண்டே வரவேண்டும்.

ஆனால் இப்போது தான் இதைச் செய்கின்றோம். இதற்கு முன் எடுத்துக் கொண்டது நமக்குள் எத்தனையோ கோடி உணர்வுகள் உண்டு…!

அதை எல்லாம் மாற்றி அமைக்க அவ்வப்போது அந்த மகரிஷியின் அருள் சக்தியைப் பெற வேண்டும் என்று நாம் எடுத்துக் கொண்டே வரவேண்டும்.

நீங்கள் சும்மா உட்கார்ந்து பாருங்கள்… அப்போது தெரியும் உங்கள் உடலில் என்னென்ன உணர்வுகள் எல்லாம் ஓடுகிறது என்று…!
1.நம்மிடம் வெறுப்பாகப் பேசியவர்கள்… சண்டை போட்டவர்கள் இடைஞ்சல் பண்ணியவர்கள் அவர்களைப் பற்றி எல்லாம் நினைவு வரிசையாக வரும்.
2.அதாவது நாம் எண்ணமாலே இது எல்லாம் நமக்குள் வரும்
3.நான் உதவி செய்கிறேன்… ஆனால் அவன் இடைஞ்சல் செய்கின்றான்
4.காசை வாங்கியவன் திரும்பக் கொடுக்கவில்லை
5.வீட்டில் இருப்பவர்களே என்னைக் கேவலமாகப் பேசினால் நான் என்ன செய்வது…? என்ற இந்தப் புலம்பல்கள் தன்னாலே வரும்.

ஏனென்றால் நமக்குள் பதிவு செய்த உணர்வுகளின் இயக்கம் இப்படித்தான் வரும்.

எத்தனை வகையான வித்துக்களைப் பூமியில் விதைக்கின்றோமோ அது எல்லாம் வளர்ந்தால் தன் தன் இனமாக வளர்ந்து அதனதன் மணங்கள் தான் வரும்.

உதாரணமாக ஒரு செண்டு நிலத்தில் விதைகளை விதைத்துப் பாருங்கள். அதில் எந்தப் பகுதியில் எந்தச் செடி சக்தி அதிகமாக முளைத்திருக்கின்றதோ அந்த வாசனை தான் அங்கே முன்னணியில் வரும்.

செடிகள் குறைந்திருந்தால் வாசனை குறைவாக இருக்கும். ஆனால் அந்த செடியின் வளர்ச்சி அதிகமாக இருந்தால் பக்கத்தில் இருக்கும் நல்ல செடிகளை வளரவிடாது. மற்றது வளர்வதற்கு வேண்டிய சத்தை எல்லாம் இது எடுத்துவிடும்… மற்றது வளராது.

அதை மாற்றுவதற்குத் தான் விவசாயத்தில் ஊடு பயிர் செய்யலாம் என்று சொல்வார்கள். என்னென்ன பயிர் வகைகளைச் சேர்த்தால் அதனுடன் உணர்வுகள் ஒன்று பட்டு ஊடு பயிர் போடும்போது இது நன்றாக வளரும் என்று சொல்வார்கள்

ஆனால் செடிகளில் ஏற்கனவே ஊடு பயிர் கலப்பில்லாத நிலைகள் வைத்தால் அந்தச் செடிகள் முளைக்காது. இதை விவசாயிகள் தெளிவாகத் தெரிந்து இருக்கலாம்.

பல தாவர இன சக்திகளை ஒருங்கிணைத்து அதை இணைத்துப் புதிதாக வித்தை உருவாக்குவார்கள். அப்படி உருவாக்கி விட்டால்… ஊடு பயிர்கள் போடப்படும் போது
1.இது எடுக்கும் சக்தி அதற்கும் இது எடுக்கும் சக்தி அதற்கும் எடுத்து இது இரண்டுமே தழைத்து ஓங்கும்.
2.அதாவது அதனுடைய சக்தி இதற்கு உரமாகவும் இதனுடைய சக்தி அதற்கு உரமாகவும்
3.இப்படி வளர்ந்து வரப்படும் பொழுதுதான் தாவரங்கள் செழித்து வளரும்.

நான் இதை எல்லாம் படித்துப் பேசவில்லை. குருநாதர் காட்டிய வழிப்படி இந்த உணர்வுகள் ஒவ்வொன்றும் எப்படி இணைக்கப்படுகின்றது..? விஞ்ஞான அறிவால் எப்படி இணைக்கிறார்கள்…? இயற்கை உணர்வு எப்படி இணைக்கின்றது…? இணைந்த நிலைகள் எப்படி வளர்கின்றது…? என்று உணர்ந்த உண்மைகளைத் தான் சொல்கிறேன்.

ஏனென்றால் ஆதியிலே முதல் மனிதனாகத் தோன்றிய அகஸ்தியன் தன்னைத் தான் அறிந்தவன்… தன்னை உணர்ந்தவன் தான்.

அணுவின் இயக்கத்தைத் தனக்குள் கண்டுணர்ந்து விண்ணின் ஆற்றலை நுகர்ந்து பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு இது உருவாகி அது தனக்குள் கருவாகி அப்படி அவனுக்குள் விளைந்த உணர்வுகள் இன்றும் இந்தப் பூமியில் பரவி உள்ளது.

1.அவன் வாழ்ந்த காலங்களில் இந்தப் பகுதிகளில் (தென்னாட்டில்) நடந்து சென்ற நிலைகளில்
2.இந்தப் புவியில் படர்ந்துள்ள அவனின் சக்தியை எடுப்பதற்கு
3.உங்களுக்குள் அந்த மெய் ஞானியின் உணர்ச்சிகளைத் தூண்டப்படும்போது
4.அந்த உணர்வலைகளை எளிதில் நீங்கள் நுகர முடியும்.

வாடிய பயிர்களுக்கு எப்படி உரமிட்டுச் செழிக்கச் செய்கின்றோமோ அதைப் போன்று யாம் கொடுக்கும் இந்த உபதேச உணர்வுகள் உங்களுக்குள் சோர்வடைந்த… நலியச் செய்யும் உணர்வுகளை… அடக்கச் செய்யும்.

அகஸ்தியர் பெற்ற அருள் சக்திகளை நீங்கள் பெறுவதற்கு உணர்ச்சியைத் தூண்டி மெய் ஒளியைப் பெறும் உணர்வினை உங்களுக்குள் உருவாக்குவதற்குத் தான் இவ்வாறு உபதேசத்தைக் கொடுப்பது…!