ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

April 30, 2021

பிறரையே எண்ணிக் கொண்டு வாழும் வாழ்க்கையும் நல்ல வாழ்க்கையில்லை - ஈஸ்வரபட்டர்

 

ஐம்புலனை அடக்குவது என்றால் என்ன...?

பார்த்தல்... சுவைத்தல்... கேட்டல்... நுகர்தல்... எண்ணல்... எனும் இந்த ஐம்புலன்களும் பெற்ற மனிதர்கள் எல்லோருமே தான் பெற்ற அருளை
1.பார்த்தவுடன் பதட்டப்படாமல்
2.பார்க்கும் நிலையில் ஒன்றை எடை போடாமல்
3.பார்த்த பொருள் ஒன்றைப் பார்த்தவுடன் வாங்க வேண்டும் என்றில்லாமல்
4.தான் பார்த்ததை ஒருநிலைப்படுத்தி
5.பார்த்த நிலைக்கு எதையும் முடிவு எடுக்காமல்
6.தான் பார்க்கும் அருளைப் பெற்ற “அந்த அருளின் சக்தியை” நல்வழியில் உபயோகப்படுத்த வேண்டும்.

இப்படித்தான் சுவைக்கும் கேட்பதற்கும் நுகர்வதற்கும் மன எண்ணத்திற்கும் எல்லாவற்றுக்குமே ஆண்டவன் அருளிய இத்தன்மை உள்ளது.

இத்தன்மை என்பது மனித ஜென்மங்கள் ஐம்புலனை அடக்கும் தன்மை மிருக ஜெந்துக்களுக்கு இல்லையப்பா...!

ஐம்புலனை அடக்கிடும் தன்மை பெற்ற மனிதனே தன் மன நிலையை அடக்கிடாமல்...
1.“வாழும் வரை சந்தோஷமாக வாழலாம்...” என்று இருக்கின்றார்கள்
2.வாழ்க்கையில் சந்தோஷம் என்பதே என்ன..? என்றே புரியாத மானிடர்கள்

ஆக இவ் ஐம்புலனை அடக்கி ஆளும் சக்தியையே அதி பேராசையினால் இவ் ஐம்புலனையும் அலைய விட்டு விடுகின்றார்கள்...! பேராசை நிலைக்கு அடிமைப்பட்டவன் தானப்பா இவ் ஐம்புலனையும் அலைய விட்ட ஒவ்வொரு மனிதனும்.

இந்த மனித ஜென்மங்களுக்கு ஆண்டவன் அருளிய “அரும் பெரும் பொக்கிஷமப்பா...” இந்த ஐம்புலனைப் படைத்தது.

மிருக உடலுக்குத் தன்னைக் காத்துக் கொள்ள... தன் உணவைத் தேட... ஆண்டவனால் ஒவ்வொரு மிருக இனத்திற்கும் ஒவ்வொரு காப்பு நிலை உள்ளதப்பா.

ஆனால் ஆறறிவு படைத்த மனிதன் என்ன செய்கின்றான்...?

ஒருவனை ஒருவன் ஏமாற்றி... ஒருவனுக்காக ஒருவன் ஒருவனை அழிக்கப் பல பில்லி சூனியங்கள் பல மந்திரங்கள் பல ஏவல்கள் எல்லாம் செய்கின்றனர்.

தன் எண்ணத்தையே பிறரையே அழிக்க உபயோகப்படுத்துகின்றனர்.
1.பிறரை அழிப்பது மட்டுமல்லாமல்
2.அந்நிலையே தன்னை வந்து தாக்குகிறது என்பதை அறியாமல்
3.தான் பெற்ற பாக்கியத்தை எல்லாமே சிதறவிட்டு வாழ்கிறார்கள் பல கோடி மக்கள்.

எவன் ஒருவன்...
1.பிறரையே எண்ணிக் கொண்டுள்ளானோ
2.அவன் வாழும் வாழ்க்கையும் நல்ல வாழ்க்கையில்லையப்பா...!

நீங்கள் கேட்கலாம்... தன்னையே பார்த்துக் கொண்டுள்ளவன் “சுயநலவாதியல்லவா” என்று...! நான் சொல்லும் சொல் அதுவல்லப்பா...!

நான் சொல்வதெல்லாம்...
1.உன்னை நீ உணர்ந்து
2.உன்னில் அந்த ஈஸ்வர சக்தியைப் பெற்று
3.உன் உழைப்பில் நீ உண்டு
4.உன்னைச் சார்ந்தோரின் நிலையை நீ பார்த்து
5.உன்னால் மற்றவர்களுக்குப் பயனை மட்டும் தான் அளிக்கும் நிலையில் நீ இருந்து
6.உன் வாழ்க்கையையே நீ அமைத்துக் கொண்டு
7.பிறரின் சொல்லுக்காக... அவச் சொல்லுக்காகப் பயப்படாமல்... பிறரின் புகழுக்காக ஏங்கிடாமல் மயங்கிடாமல்
8.உன்னையே நீ நம்பு...! என்பதன் பொருளைப் புரிந்து கொண்டு வாழும் வாழ்க்கையே பூரிப்புடன் வாழும் வாழ்க்கை...!

நாம் வாழும் வாழ்க்கை பிறருக்காக வாழ்வதல்ல. எவன் ஒருவன் பிறரைப் பார்த்துப் பொறாமைப்பட்டோ பிறரைப் புகழ்ந்தோ வாழும் வாழ்க்கையும் வாழ்க்கை அல்ல..!

மனித உடலில் மன நிலையில் கொதி நிலைதானப்பா..! அந்த மன நிலையையும் ஐம்புலனையும் ஒருநிலைப்படுத்தி மகிழ்ந்து வாழ்ந்திட வேண்டுமப்பா..! முடியுமப்பா...!