ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

April 15, 2021

மகரிஷிகளின் அருள் சக்தியை நீங்கள் பெற வேண்டும் என்று எண்ணுவதே என்னுடைய பொழுது போக்கு - ஞானகுரு

 

அன்றாட வாழ்க்கையில் சந்தர்ப்பத்தில் நாம் ஒரு கெட்டதைப் பார்த்து விட்டால் அது நமக்குள் பதிவாகி விடுகின்றது. ஏனென்றால் நாம் ரோட்டிலே போகின்ற போக்கிலே அந்தத் தவறு செய்பவர்களைப் பார்க்க நேர்கின்றது.

1.அந்த உணர்வுகள் நமக்குள் பட்டவுடனே நம்மை அறியாமலே வெறுப்பு வருகின்றது
2.அதைச் சுத்தப்படுத்த வேண்டும் அல்லவா...!

சுத்தப்படுத்தவில்லை என்றால் என்ன செய்யும்...? நம் உயிரிலே பட்ட பின் அந்த உணர்வுகளை உயிர் இயக்கிக் கொண்டே இருக்கும். நம்மை அறியாமல் ஆத்திரத்தையும் கோபத்தையும் தூண்டிக் கொண்டே இருக்கும்.

இதைப் போல ஒவ்வொரு நாளும் எத்தனையோ தீமையான உணர்வைப் பார்த்திருப்போம். அந்த அணுக்கள் நமக்குள் விளைந்திருக்கும். அதற்குச் சாப்பாடு தேவை.

அது தன்னுடைய உணர்வுகளை எடுத்து வளரப்படும் பொழுது
1.நம் உடலில் மேல் வலிக்கின்றது... கால் வலிக்கின்றது...
2.கழுத்து சுளுக்கி விட்டது... நரம்பு பிடித்துக் கொண்டது... சுண்டி விட்டது... என்றெல்லாம் சொல்வோம்.
3.நன்றாகத்தான் இருந்தோம்... இது எப்படி வந்தது...? என்று தெரியவில்லை என்போம்.

ஆனால் இவை எல்லாம் எந்த அடிப்படையில் வருகிறது என்றால்... மேலே சொன்ன மாதிரி சில நேரங்களில் நாம் பதிவு செய்த அந்தத் தீமையான உணர்வுகள் அது உடலுக்குள் வலுவாகப்படும் பொழுது நம் நல்ல அணுக்களை இயக்க விடாதபடி தடைப்படுகின்றது. அதனால் வேதனையும் வருகின்றது.

டாக்டரிடம் சென்று அவர் கொடுக்கும் அந்த மருந்தை வைத்துத் தான் இதை எல்லாம் போக்க முடிகிறது.

இருந்தாலும் தீமைகளைக் கண்ட உடனே அடுத்த கணமே அந்த மகரிஷிகள் சக்தி பெற வேண்டும் என்று அதைச் சுத்தப்படுத்துகின்றோமா என்றால் அந்தப் பழக்கம் நம்மிடம் இல்லை.

அத்தகைய பழக்கம் வர வேண்டும் என்பதற்குத்தான்
1.குருநாதர் காட்டிய அருள் வழியில் உபதேச வாயிலாக அந்த மெய் ஞானிகளின் அருள் சக்தியைக் கொடுக்கின்றோம்.
2.அதை எடுக்கும் பழக்கத்தையும் ஏற்படுத்துகின்றோம்.
3.அந்த மகரிஷியின் அருள் சக்தியை எடுக்க வேண்டும் என்று
4.பல வகைகளிலும் ஞானிகள் உணர்வுகளை உங்களுக்குள் பதிவு செய்கிறோம்.

ஆனால் உபதேசங்களைக் கேட்ட பின் எங்கள் சாமி... எங்கள் சாமி...! என்று போற்றுவதற்கு மட்டும் ஆள் நிறைய வந்து விடுகின்றது. உபதேச வாயிலாகக் கொடுக்கும் சக்தியை எண்ணித் தனக்குள் எடுப்பதில்லை.

1.ஞானகுரு சொன்ன வழியில் அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை எடுத்தேன்....
2.என்னை நான் காப்பாற்றிக் கொள்ள முடிந்தது...! என்ற இந்தச் சொல் உங்களிடமிருந்து வர வேண்டும்.

காரணம் என்ன என்றால் கோபப்பட்டவர்கள்... சலிப்புப்பட்டவர்கள்... சஞ்சலப்பட்டவர்கள்... வெறுப்புப்பட்டவர்கள்... குரோதப்பட்டவர்கள்... தொல்லை கொடுப்பவர்கள்... என்று இத்தனையும் இதற்கு முன்... பதிவு செய்திருக்கிறீர்கள்.

இது எல்லாம் உடனடியாக நினனவுக்கு வந்து விடுகின்றது.

ஆனால் உங்களிடம் உயர்ந்த குணங்களைப் பதிவு செய்கின்றேன் (ஞானகுரு). அதை மீண்டும் எண்ணச் சொல்கின்றேன். நீங்கள் எண்ணுகிறீர்களா...! என்றால் இல்லை.

ஏனென்றால் இந்தக் கோபமும் வெறுப்பும் வேதனையும் குரோதமும் வலுக் கொண்டது. உங்களிடம் இருக்கும் நல்லதை எடுக்க விடாதபடி முன்னாடியே தடுத்து விடுகின்றது.

ஆகவே அதைச் சுத்தப்படுத்தினால் தான் அந்த அருள் ஞானத்தைப் பெற முடியும். சிறிது நாளைக்கு நீங்கள் இதை வளர்க்கக் கற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்குத்தான் ஆத்ம சுத்தி என்ற ஆயுதமாக எளிதாகக் கொடுத்து இருக்கின்றேன்.

குருநாதர் எனக்கு எத்தனையோ கடுமைக்கு அப்புறம் அந்தச் சக்தியைக் கொடுத்தார்.
1.உங்களுக்கு இலேசாக எடுத்துக் கொள்ளும்படி அந்த ஆத்ம சுத்தி என்ற ஆயுதத்தைக் கொடுத்துள்ளேன்.
2.சதா உங்களுக்கு அந்தச் சக்தி கிடைக்க வேண்டும்...! என்று அதைப் பாய்ச்சுவது தான் என்னுடைய பொழுது போக்காக இருக்கின்றது.

யார் யாருக்கெல்லாம் வாக்கு கொடுத்தேனோ... நல்லதாக வேண்டும் என்று சொன்னேனோ... அவர்களுக்கெல்லாம் மகரிஷிகளின் அருள் சக்தி கிடைக்க வேண்டும் என்று தவம் இருக்கின்றேன்.

முதலில் அந்த மகரிஷிகள் சக்தி பெற வேண்டும் என்று நான் தியானிக்கின்றேன். எனக்குள் அதை வலுப் பெறச் செய்து கொள்கின்றேன்.

அதற்குப் பின் நான் வாக்குக் கொடுத்தவர்கள் அனைவருக்கும்
1.அந்த மகரிஷிகளின் அருள் சக்தி கிடைக்க வேண்டும்
2.அவர்கள் நன்றாக இருக்க வேண்டும்.. உடல் நலமாக இருக்க வேண்டும்
3.அவர்கள் குடும்பத்தில் உள்ளோர் எல்லோரும் நலமாக இருக்க வேண்டும்
4.அந்த அருள் ஞானம் பெற வேண்டும்... மகிழ்ந்து வாழ வேண்டும்
5.என்னைச் சந்தித்தவர்கள் எல்ல்லொரும் நன்றாக இருக்க வேண்டும் என்று
6.இப்படித்தான் என்னுடைய தவம் இருந்து கொண்டிருக்கின்றது. (ஞானகுரு).