ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

April 7, 2021

தியான வழியினைக் கடைப்பிடிப்போர் குருவிடம் கேட்டுத் தெளிவு பெற வேண்டிய சரியான வழி முறை

 

மந்திரம் செய்வோரையோ தந்திரம் செய்வோரையோ மற்ற மார்க்கங்களையோ எண்ணிக் கொண்டு... அவர் என்ன செய்கின்றார்...? இவர் என்ன செய்கின்றார்...? என்ற நிலைகளுக்கு ஆராய்ச்சிக்குச் செல்ல வேண்டாம்.

1.மகரிஷிகளின் அருள் உணர்வைப் பெற வேண்டும் என்ற எண்ணத்தில் இங்கே தேடி வருவோர்
2.அவர்களின் ஏக்கம் எதுவோ அது பதிவாகின்றது...
3.அவர்களுக்குள் அந்த அருள் சக்தி ஓங்கி வளரவும் செய்யும்.

ஆனால் மற்றதைப் பற்றி அறிய வேண்டும் என்று எண்ணினால் அந்த நோக்கம் அதிலே தான் இருக்கும். மற்றவரின் செயலைப் பற்றித் தெரிய வேண்டும் என்று விரும்பினால் அது தான் ஆழமாக அவர்களுக்குள் பதிவாகி இருக்கிறது என்று பொருள்.

அதன் மேல் எண்ணத்தைச் செலுத்தி அந்த விபரத்தைத் தெரிந்து கொண்டால் அது தான் வளரும்.

ஆகவே இந்த மனித வாழ்க்கையில்
1.கஷ்டமாக இருக்கிறது... கஷ்டமாக இருக்கிறது...! என்று சொல்லி அதையே கேட்டால் அந்தக் கஷ்டத்தைத் தான் வளர்க்க உதவும்.
2.ஆனால் கஷ்டத்தை நீக்க வேண்டும் என்று கேட்டால் கஷ்டத்தை நீக்கும் உணர்வுகள் உங்களுக்குள் விளையும்.

கேட்டுணர்வோர் உணர்வின் தன்மை எதுவோ அதற்கொப்பத்தான் அந்த உணர்வுகள் வளர்ச்சி அடையும்.

1.கஷ்டம் என்னை விட்டுப் போகவே மாட்டேன் என்கிறது என்று சொல்லிக் கொண்டே இருந்தால் “அது வந்துவிடும்...”
2.இந்த மனித வாழ்க்கையில் வரும் சிக்கல்களிலிருந்து... நான் மீள முடியுமா...? என்றால் “இது சந்தேகம்...”
3.மீள முடியாது...! என்று அந்த வலுவை இழந்து விட்டால் “மீள முடியும்” என்ற உணர்வுகள் உங்களுக்குள் வராது.

ஆகவே மீள வேண்டும் என்ற எண்ணத்தை வலுவாக்கிக் கொண்டு யாம் கொடுக்கும் இந்த ஞானிகளின் வாக்கின் தன்மையை உங்களுக்குள் ஆழமாகப் பதிவு செய்தால் எத்தகைய துன்பத்திலிருந்தும் நீங்களே விடுபட முடியும்.

அதைத்தான் கீதையிலே நீ எதை எண்ணுகின்றோமோ அதுவாகின்றாய் என்று சொல்லப்பட்டது.

ஆனால் பெரும்பகுதியானோர் அவர்கள் தங்களுடைய கஷ்டங்களையும் துன்பங்களையுமே எண்ணி... இது எப்படி வந்தது...? எதனால் வந்தது...? என்று கேள்வி எழுப்பிக் கொண்டே உள்ளார்கள்

அன்றாட வாழ்க்கையில் நம்மை அறியாதபடியே துன்பங்களும் கஷ்டங்களும் எப்படி வருகின்றது...? என்பதை பல முறை உபதேசித்திருக்கின்றேன் (ஞானகுரு).

உபதேசங்களை எல்லாம் கேட்ட பின்னாடியும் மீண்டும் கஷ்டங்களையே எண்ணிக் கொண்டிருந்தால் யாம் சொல்வது அவர்களுக்குள் பதிவாகவில்லை...! என்று தான் பொருள் ஆகின்றது.

ஆனால் மேற் கொண்டு நாம் செல்ல வேண்டிய சரியான மார்க்கங்களை எண்ணி அதைக் கேட்டால் அது பதிவாகும்... நல்லதாகும்.

அதே சமயத்தில் இந்த அருள் உணர்வு எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் என்றும் எண்ணுதல் வேண்டும். அதனின் உணர்வின் துணை கொண்டு தான் உங்கள் உடலுக்குள் ஞானிகளின் உணர்வு விளையும் பருவமும் வரும்.

ஆகவே எப்பொழுதுமே துன்பமோ துயரமோ நோயோ வேதனையோ எது வந்தாலும்...
1.இதிலிருந்து விடுபடுவது எப்படி...? என்று கேட்டால்
2.அந்த விடுபடும் உணர்வுகள் நிச்சயம் உங்களுக்குள் வளரும்.

சொல்வது அர்த்தம் ஆகிறது அல்லவா...!

எம்மிடம் (ஞானகுரு) கேட்டறிந்து கொள்ள வேண்டிய முறைகள் அது எப்படி...? என்பதை நீங்கள் உணர்ந்து கொள்ள வேண்டும் என்பதற்குத் தான் இதைச் சொல்கிறேன்.