உதாரணமாக எனக்கு இப்படிச் செய்தான்... செய்தான்...! என்று நமக்கு இடைஞ்சல் செய்தவன் மீது சிந்தனை வரும் பொழுது அந்த உணர்வுகள் கோபமோ வேதனையோ ஆத்திரமோ உடலுக்குள் வந்துவிடுகின்றது. அந்த இடத்தை நாம் வலுவாக்கிக் கொள்கின்றோம். தீய வினைகளாக அது வளர்கிறது.
ஆனால் நம் உடலில் வந்த அந்தத் தீமைகளை நீக்க...
1.மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று
2.நம் சிந்தனையை அதற்குள் செலுத்தினோம் என்றால்
3.அதனின் உணர்வுகள் வளர்ச்சியாகி இந்த மனித உடலையே ஒளியாக மாற்றிக் கொள்ள முடியும்.
4.இந்த உடலிலிருந்து தான் நாம் ஒளியாக மாற்ற முடியும்.
ஆனால் மாற்றத் தவறினால் அந்த உடலில் விளைந்த தீமையான உணர்வின் தன்மை இங்கே இழுத்து விட்டால் மனித ரூபத்தை மாற்றிவிடும்... மனிதனல்லாத உருவாகத் தான் பெற நேரும்.
ஆனால் அந்த அருள் மகரிஷிகளின் அருளை நமக்குள் பெறும் பொழுது ஒளியாக மாற்ற முடியும்.
1.மனித உணர்வைச் சுவாசித்தால் உருவம் மாறும் இங்கே...!
2.அருள் உணர்வைச் சுவாசித்தால் ஒளியின் தன்மையாக மாறும் அங்கே...!
நம் உயிர் ஒளியானது. மனிதனான பின் அறிவால் அறிந்து கொள்கின்றோம். இருந்தாலும் ஒளியின் உணர்வாக விளைந்திடும் அத்தகைய மகரிஷியின் அருள் சக்தியைப் பெற நாம் பழகிக் கொள்ள வேண்டும்.
உதாரணமாக நான் கோபமாக இருக்கிறேன் என்று வைத்துக் கொள்வோம். மற்றவரும் என் கோபத்திற்குச் சாதகமாக இருந்தால் எனக்கு நல்லது.
அதே சமயத்தில் தவறு செய்கிறேன் என்று வைத்துக் கொள்வோம். அருகில் இருக்கும் என் நண்பனும் அந்தத் தவறுக்காக என்னுடன் ஒத்துழைத்தால் எனக்கு நல்லது.
1.அதுவே தவறு என்று என்னைச் சுட்டிக்காட்ட வந்தால் எனக்கு எதிரி ஆகின்றது...!
2..ஆகவே நல்லது என்பதை நல்லதாக எண்ண முடியாது
3.கேட்டது என்பதைக் கெட்டதாகவும் எண்ண முடியாது
4.நமக்கு ஒத்து வந்தால் நல்லது என்று எண்ணுகின்றோம்
5.நமக்கு ஒத்து வரவில்லை என்றால் கெட்டது என்று எண்ணுகிறோம்.
மிளகாய் காரமாகத்தான் இருக்கின்றது. அந்தக் காரத்தை அளவுடன் குழம்பிலோ மற்ற பொருள்களிலோ இணைத்தால் அது நல்லதாகின்றது.
1.காரத்தை அதிகமாகப் போட்டால் கெட்டதாகிறது
2.காரத்தைக் குறைத்தால் “சப்” என்றாகி விடுகிறது.
ஆகவே நல்லது நல்லதும் அல்ல... கெட்டது கெட்டதும் அல்ல...!
இதைப் போன்ற உணமைகளை உணர்ந்து கொண்ட பின் நமக்குள் எந்த உணர்வின் தன்மையை எடுக்க வேண்டும்...?
நம்மை அழியா ஒளியின் சரீரம் பெறச் செய்யும் அந்த நிலையான உணர்வுகளை எடுத்தால் அதுவே நமக்கு நல்லது.
நம் உயிரின் தன்மை ஒளியாக நின்று எதை எல்லாம் தனக்குள் அறிவிக்கின்றதோ அந்த உயிருடன் ஒன்றிய ஒளியாக மாற்றுவது தான் நமக்கு நல்லது.
விண்ணின் ஆற்றல் என்று சொல்கிறோம். பொதுவாக விண்ணின் ஆற்றலும் மகரிஷிகள் ஆற்றலும் வேறு.
1.விண்ணின் ஆற்றல் என்பது மற்ற கோள்களின் மண்டலங்களின் சக்தி பெற்றது
2.அந்த விண்ணின் ஆற்றலால் தான் மனித உடல் வருகின்றது
அதாவது நட்சத்திரங்களை வைத்துத் தான் ஒரு பிரபஞ்சத்தில் கோள்கள் சூரியன் எல்லாமே வளர்ச்சிக்கு வருகின்றது. அந்த விண்ணின் ஆற்றலைப் பெற்றுத் தான் மனிதனாக வளர்ந்து வந்திருக்கின்றோம்.
ஆனால் விண்ணின் ஆற்றலால் மனிதனான பின் சிருஷ்டித்துக் கொண்டதுதான் மகரிஷிகள். மனித உடல் பெற்ற பின் சிருஷ்டிக்கும் சக்தி பெற்ற அந்த மகரிஷிகளின் ஆற்றலால் தான் மனிதன் உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரமாக உருவாக்க முடியும்.
விண்ணில் இருக்கக்கூடிய மகரிஷிகள் அவர்கள் உணர்வின் தன்மை கொண்டு நாம் எதை உணர்த்தினோமோ “விண்...” என்று வரப்படும்போது சொல் விண்... என்று வரும்.
இங்கே மண்ணுலகிலிருந்து சென்று இன்றும் விண்ணிலே வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் மகரிஷிகள். ஆகவே அந்த விண்ணுலகத்திற்குத் தான் நாம் செல்ல வேண்டும்.
1.சூரியப் பிரபஞ்சத்திற்குள் இருக்கும் இந்தப் பூமி இதுவும் ஒரு விண்ணுலகம் தான்
2.ஆனால் மண்ணுலகைக் கடந்து விண்ணுலகம் சென்ற அந்த மகரிஷிகள் அருள் வட்டத்தில் நாம் இணைய வேண்டும்.
அது தான் யாம் (ஞானகுரு) சொல்லும் விண்ணுலகம்...!