ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

April 30, 2021

என்ன தியானம் செய்து... என்ன பலன் என்பார்கள்...!

 

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று அடிக்கடி தியானிக்க வேண்டும் என்று உங்களுக்குள் பதிவு செய்கின்றோம்... நினைவுபடுத்துகிறோம்.

அதை வைத்துத் தீமைகள் புகாது பாதுகாத்துக் கொள்ள வேண்டியது உங்களுடைய பொறுப்புதான்...!

ஒரு பொருளுக்கு ஆசைப்படுகிறோம் கிடைக்கவில்லை. அதே போல் நமக்கு வேண்டியவர்களுக்கு உடலில் நோயாகி விட்டது. சரியாகவில்லையே...! என்ற நினைவைச் செலுத்தினால் வேதனை உணர்வு தான் வருகிறது. அத்தகைய நேரத்தில் நல்ல உணர்வு பெறும் தகுதியை இழந்து விடுகின்றோம்.

எத்தனையோ தியானம் இருந்தாலும் கூட இப்படி எல்லாம் வருகிறது என்று சில பேர் எண்ணுகின்றனர்.

1.அத்தனை தியானம் செய்தேன்... என் பிள்ளைக்கு உடல் நலம் இல்லாது போய்விட்டது...!
2.எவ்வளவு தியானம் செய்தேன்...? என்னிடம் சண்டைக்கு வருகின்றார்களே...! என்று
3.இந்த உணர்வை எடுத்து எடுத்து இப்படி மாற்றிக் கொண்டிருந்தால்
4.உணர்வுகள் அங்கே (தீமையின் பால்) சென்று விடும்... நினைவுகள் தீமையின் பக்கமே சென்றுவிடும்.

ஆகையினால் அது போன்று வராதபடி அந்த மகரிஷிகளின் அருள் ஒளி பெற வேண்டுமென்று அதை வலுவாக்க வேண்டும். அருள் உணர்வை நம் உடலுக்குள் பெருக்கிக் கொண்டே வர வேண்டும்.

ஏனென்றால் அன்றாட வாழ்க்கையில் எத்தனையோ நிலைகளைப் பார்த்தாலும் நாம் நுகரப்படும் போது “தவறு செய்கிறார்கள்...” என்று உற்றுப் பார்க்கின்றோம்... அது பதிவாகிறது.

பதிவாகி விட்டால் பின் அது தன் உணவுக்காகக் கிளரும். அதை வைத்து அந்த உணர்வின் அணுக்கள் உடலுக்குள் பெருகிக் கொண்டே இருக்கும். தவறு செய்தவரின் உணர்வை உணவாக எடுத்துத் தான் அந்த அணுக்கள் தன் இனத்தைப் பெருக்கும்.

ஆகவே இந்த மனித வாழ்க்கையில் எப்போது சங்கடம் சலிப்பு வெறுப்பு என்று வருகின்றதோ... அடுத்த கணமே அதை மாற்ற... அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று இதை கூட்டிக் கொண்டே வந்தால் அது குறைந்து கொண்டே வரும்.
1.அது குறையத்தான் செய்யும் தவிர முழுமையாக மாற்ற முடியாது
2.இதைப் (அருளை) பெருக்கினால் அது இதற்குள் அடங்கிவிடும்.

நல்ல குணங்கள் கொண்டு இருக்கும் பொழுது தீமை என்ற உணர்வுகள் அதிகமாகி விட்டால் அது நல்ல குணங்களை அடக்கி
வேதனை என்ற உணர்வும்...
வேதனைப்படும் சொல்லும்...
வேதனையான செயல்களும்...
வேதனையான பேச்சுகளும்...
வேதனையான மூச்சுகளையும் தான் செயல்படுத்தும்.

ஆனால் அந்த மகரிஷிகளின் அருளைப் பெற்று இதை மாற்றிடுவோம்... மாற்ற முடியும்... அவர்கள் நலம் பெறுவார்கள்...! என்ற எண்ணத்திற்கு நாம் வர வேண்டும்.

ஒரு நோயாளி அவருடைய கஷ்டத்தைச் சொன்னால் மகரிஷிகளின் அருள் சக்தியை அவர்கள் பெறுவார்கள்... நலம் பெறுவார்கள்...! என்று நாம் எண்ணி விட்டால் அந்த உணர்வுகள் நமக்குள் வராது.

ஆனால் அவர்களை உற்றுப் பார்த்து... சொல்வதைக் கேட்டறிந்து அவருடைய துயரத்தை எண்ணி நாம் எடுத்துக் கொண்டால் நமக்குள்ளும் அது விளைந்து அவர் சொன்ன கஷ்டங்கள் எல்லாம் நமக்குள்ளும் வரும்.
1.அவரை மாதிரித் தான் நமக்குள்ளும் இருக்கின்றது
2.அவரை மாதிரித் தான் நமக்கும் நோயாகி விட்டது...! என்று அவரின் உணர்வு வந்து
3.அதையே நாமும் வளர்த்துக் கொள்கிறோம்

உதாரணமாக ஒருவன் நம்மை ஏமாற்றினான் என்றால் “ஏமாற்றினான்... ஏமாற்றினான்...” என்று எண்ணி அதையே எடுத்துக் கொண்டே இருந்தோம் என்றால் நம்மை அறியாமலேயே நம் உடலுக்குள் நல்ல உணர்வுகள் வளர்வது நிச்சயம் தடைப்படும்.

இதைப் போன்ற தீமையான விளைவுகளிலிருந்து நாம் மாறுவதற்கு ஒவ்வொரு நிமிடமும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று கூட்டுத் தியானத்தின் மூலம் எடுத்து வலுப்படுத்திக் கொள்ள வேண்டும்.