ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

April 9, 2021

உடலை விட்டு உயிர் வெளியே செல்வதன் முகாந்திரம் என்ன...?

 

இந்த மனித வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும் எதாவது ஒன்றை எண்ணி அதைப் பெற வேண்டுமென்று ஆசைப்படுகின்றோம். ஆக... உயிரால் ஈர்க்கப்பட்டு அத்தகைய அணுக்களாக உடலுக்குள் உருவாக்கப்பட்டது தான் தசரதச் சக்கரவர்த்தி என்று உயிருக்குக் காரணப் பெயரைச் சூட்டுகின்றார்கள்.

1.ஒருவரின் செயலைப் பார்த்து அவரின் உணர்வுகளை நுகர்ந்தோம் (சுவாசிக்கின்றோம்) என்றால்
2.அதனின் சக்தியாகத் தன்னுடன் அரவணைத்து இந்த உடல் உறுப்புகளை உருவாக்குகின்றது என்றும்
3.உணர்வுகள் எண்ணங்களாக இயக்கப்படுகின்றது என்றும் இராமாயணம் தெளிவாகக் காட்டுகின்றது.

நாம் நுகர்ந்த உணர்வுகள் எண்ணங்களாக எப்படி இயக்குகின்றது என்ற நிலையை வான்மீகி அன்றே இராமாயணக் காவியங்களில் கொடுத்துள்ளார்.

உதாரணமாக ஒரு கோபப்படுவோரைப் பார்த்து விட்டால் அந்தக் கோபத்தின் உணர்வை உயிர் அந்தச் சக்தியாகத் தனக்குள் அரவணைத்துக் கொள்கின்றது.

நாம் கோபம் என்று அறிகின்றோம். இருந்தாலும் நமக்குள் அந்தச் சக்தியாக அரவணைத்துக் கொள்கின்றது.
1.அதனால் விளைந்த கோபத்தை உருவாக்கும் அந்த அணுவின் தன்மை
2.அது தன் இனத்தைப் பெருக்கிக் கொண்டே இருக்கும்.

அப்பொழுது அந்தச் சக்தி தன் நிலைகளில் எப்படியும் (அடிக்கடி) கோப உணர்வுகளை வெளிப்படுத்திக் கோபத்துடன் பேசும் நிலையாக அதே வழியிலேயே தான் நாம் இருக்க நேரும்.

தனக்குள் வளர்ந்த அத்தகைய அணுக்கள் அந்தச் சமயத்தில் அது இயல்பாகத் அதனின் வளர்ச்சியையே நமக்குள் கூட்டும்.

இதை உணர்த்துவதற்குத் தான் இராமாயணக் காவியங்களில் நாம் எடுத்துக் கொண்ட ஒவ்வொரு சக்தியும் அது அது தன் இனத்தைப் பெருக்கும் என்ற நிலையாகத் தசரதச் சக்கரவர்த்தி தினமும் ஒரு மனைவியைக் கல்யாணம் செய்து கொண்டே இருந்தார் என்று காட்டுகின்றார்கள்.

நல்ல ஒழுக்கமும் குணசீலமும் கொண்டு நாம் இருந்தாலும்
1.நமக்குள் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் எடுத்துக் கொண்ட
2.அந்தந்த குணத்தால் பதிந்த நிலைகள் வரப்படும் பொழுது
3.அதன் இனப்பெருக்கங்கள் என்று வரும் பொழுது
4.அடுத்து அடுத்து நாம் நல்லதை எண்ணினாலும்...
5.உடலுக்குள் அந்த நல்ல குணத்தை கொண்டு ஆட்சி புரிய வேண்டும் என்று எண்ணினாலும் நம்மால் முடிவதில்லை

அப்பொழுது நல்லதைச் செயல்படுத்த முடியவில்லையே...! என்ற எண்ணமும் அதே சமயத்தில் தனக்குள் நுகர்ந்து கொண்ட சக்தியின் வலிமையால் நாம் அடிமைப்பட்டு “இந்த உயிரின் இயக்கம் அதன் கீழ் செல்கிறது...!”

நல்ல குணங்களை இந்த உடலில் இருந்து ஆட்சி புரிய முடியாத நிலை ஏற்பட்டு விட்டதே...! என்ற
1.அந்த வேதனை உணர்வுகளை எடுக்கப்படும் பொழுது இந்த நஞ்சு உடல் முழுவதும் பரவுகின்றது
2.இந்த நஞ்சின் தன்மை பெருகி... உடலில் உள்ள அணுக்கள் நஞ்சாக உருவான பின்
3.இதில் குடியிருக்க விரும்பாது இந்த உடலை விட்டு உயிரான்மா (உயிர்) பிரிந்து சென்று விடுகின்றது.

இப்படிச் செல்லும் உயிர் அடுத்து வேதனைப்படும் உயிரினங்களுக்குள் தான் நம்மை அழைத்துச் செல்லும்.

ஆகவே வேதனையிலிருந்து விடுபடும் ஆற்றலையும் தீமைகளிலிருந்து விடுபடும் ஆற்றலையும் பெற வேண்டும் என்றால் துருவ நட்சத்திரத்தின் சக்தியை நாம் அவ்வப்பொழுது எடுத்துத் தூய்மைப்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும்.

அந்தச் சக்தி எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் என்று நாம் தியானிக்க வேண்டும். இதை வலுப்படுத்தினால் யாருடைய ஈர்ப்புக்குள்ளும் நாம் சிக்குவதில்லை... ஏகாந்த நிலை பெறுகின்றோம்..