இயற்கையின் நியதிகள் எவ்வாறு இயக்குகின்றது என்றும்... பிறப்பு இறப்பு என்ற இயற்கையின் சுழற்சியிலிருந்து மனிதன் எப்படி மீள வேண்டும் என்றும் எண்ணி இந்தப் பூமியில் முயற்சித்தவர்கள் எத்தனையோ பேர்...!
1.ஆனால் எத்தனையோ பேர் முயற்சி செய்தாலும் அதிலே முழுமையடையாது மடிந்தவர்கள் உண்டு
2.முழுமை பெறும் வழிக்குச் சென்று... முழுமை பெற்றவர்கள் “சிலரே” உண்டு.
பலர் முழுமை பெறாது தோல்வி அடைந்து... அந்த முழுமையற்ற நிலைகளாகக் குறை கொண்ட உணர்வுகளை உடலில் விளைய வைத்து அப்படி வெளிப்படுத்தப்பட்ட உணர்வின் அணுக்களும் இந்தக் காற்றிலே உண்டு.
அதே சமயத்தில் முழுமை பெற்று அழியாத நிலையில் எண்ணிலடங்காதோர் இன்றும் துருவ நட்சத்திரமாகவும் சப்தரிஷி மண்டலமாகவும் உள்ளார்கள்.
ஆனால் உயர்ந்த நிலை பெற வேண்டும் என்ற ஆவேச உணர்வுகள் மனிதனுக்குள் உருவாகி
1.அதற்காக “நான் திருமணமே செய்யமாட்டேன்...!” என்ற உணர்வின் வேக அழுத்தம் கொண்டு செயல்பட்டால்
2.திருமணம் ஆகாமலே வெறுக்கும் தன்மையே அந்த உடலிலே வளருகின்றது
அப்படி வெறுக்கும் தன்மை வரப்படும் பொழுது அவன் வளர்ச்சியின் தன்மை குன்றுகின்றது. மற்றொன்றை வளர்க்கும் தன்மையும் இழக்கப்படுகின்றது.
1.ஆண்மை என்ற உணர்வின் தன்மை வலுவாக உருவாக்கி
2.கரு என்ற உணர்வை உருவாக்காதபடி
3.வளர்ச்சி பெறும் உணர்வின் தன்மை தடைப்படுத்தி விடுகின்றது.
4.அதற்கு மேல் வளர முடியாத நிலையும் வருகின்றது.
இப்படிப்பட்ட வளர்ச்சி பெற்றவர்கள் சாமியாராகச் சென்றாலும் திருமணமாகிக் கணவன் மனைவி என்று ஒன்றிணைந்து செயல்படவில்லை என்றால் உடலில் விளையும் அணுக்கருத் தன்மை மாறுபட்டு அவரின் செயலாக்கங்களும் மாறுகின்றது.
திருமணமே செய்யமாட்டேன் என்ற இவரின் உணர்வைப் பின்பற்றி வரும் சீடர்களின் உணர்வுகளிலும் இது ஆழமாகப் பதிவாகின்றது. ஏனென்றால் “குரு போதிக்கின்றார்...” என்று அந்தக் குரு சென்ற பாதையில் அவர்களும் செல்லத் தொடங்குகின்றனர்.
இருந்தாலும் குரு என்பவர் கடைசியில் மடிந்தார் என்றால் சீடர்கள் என்று அவர் வளர்த்த நிலைகள் கொண்டு அவரின் உடலுக்குள் தான் குருவின் உயிரான்மா செல்கிறது.
1.குருவின் உணர்வுகளை எந்தச் சீடன் வளர்த்துக் கொண்டு
2.குரு பக்தி என்றும்... தனது குரு...! என்றும் நேசிக்கின்றானோ
3.குரு இறந்த பின் அவன் உடலுக்குள் தான் அவர் செல்ல முடிகிறது.
உடலுக்குள் வந்த பின் குரு கண்டுபிடித்த உணர்வுகள் எல்லாம் சீடனின் உடலுக்குள் இயங்கத் தொடங்குகின்றது. இப்படி அந்தச் சீடனின் உடலுக்குள் தான் இவர்கள் நுழைய முடிகின்றதே தவிர சொர்க்கம் அடையும் நிலை இல்லை.
சீடன் குரு மீது பற்று கொண்ட உணர்வும் குருவினுடைய உணர்வும் ஒன்றுபடும் நிலையில் அந்த உயிரான்மா வெளி வந்தால் அது இயக்கி அந்த உடலுக்குள் “சாகாக்கலை...” என்ற நிலையாகத் தான் மாறுகின்றது.
சீடனின் உடலுக்குள் புகுந்த பின் அவன் எடுக்கும் ஆசையின் உணர்வுகள் கொண்டு வேதனை என்ற உணர்வை அவன் வளர்த்து விட்டால் விஷமான உணர்வின் தன்மையையே உடலுக்குள் வந்த குருவும் வளர்க்க நேர்கின்றது.
ஆனால் வேதனை என்றால் கடும் விஷம். அவன் செய்தான்... இவன் செய்தான்..!. என்ற நிலையில் மாறுபட்டுச் செயல்படும் நிலையே இங்கே வருகின்றது.
1.அவர்களுடைய ஆசையின் நிலைகள் செயல்படும் போது
2.வளர்ச்சியின் பாதைக்குச் செல்ல முடியாதபடி தேய்பிறை என்ற நிலையை அடைகின்றனர்.
சொர்க்கம் அடைந்தார் என்று இவர்கள் பட்டத்தைக் கொடுக்கலாம்.
1.ஆனால் அந்த நிலையை இவர்கள் அடைவதில்லை என்பதை
2.குருநாதர் காட்டிற்குள் எம்மை (ஞானகுரு) அழைத்துச் சென்று சொர்க்கம் என்பது எது...? என்று தெளிவாகக் காட்டினார்.