“மெய்யை மெய்யால் உணர்தலும் ஒன்று...
அறிவை அறிவால் அறிதலே நன்று...!
1.கோடாயுதம் கொண்டு மத்தகத்தால் தகர்க்கப்பட
2.மேலாம் அறிவு சித்தித்தது...! என்பது
3.மெய்ப் பொருள் காணும் நிலை.
வழி வழியாக வந்த இந்தத் தத்துவங்கள் அனைத்தும் “குருவால் உபதேசிக்கப்பட வேண்டும்...!” என்று மறைபொருள் ஆக்கப்பட்டுவிட்டது.
குரு என்பவன் மெய்ப் பொருளின் உண்மையை நாடிக் கோபம் சுடு சொல் தவிர்த்து மெய் ஞானம் உரைத்தலே நன்று. ஆனால்
1.இனிய சொல்லால் வார்த்தைகள் ஆடி (ஏமாற்றும் நிலை)
2.நிலையற்ற பொருள் செல்வத்தை அடைவதிலும் அல்லது
3.அதை அளிப்பதற்கும் தான் ஒரு கருவியாகச் செயல்படும் எண்ணத்தையும் தவிர்த்திடல் வேண்டும்.
தான் பெற வேண்டியதைப் பெற்றே... உயர்த்திடும் வழியாகப் பேரருள் செல்வத்தைப் பெற்றிடவே... பூமியின் ஈர்ப்புப் பிடிப்பில் சிக்குண்டுவிடும் எண்ணச் செயல்களை எல்லாம் களைந்திடல் வேண்டும்.
குரு என்பவன்...
1.மெய்ப் பொருளை வாய்மையால் உபதேசிக்கும் நிலையில் நின்று
2.அறிவின் அமைதிக்கு வழி காட்டிட வேண்டுமப்பா…!
ஆனால் இன்றைய குருமார்கள் செல்வத்தைத் தேடிக் கொண்டிருக்கின்றனர். எந்தச் செல்வத்தைக் கண்டுபிடிக்கப் போகின்றார்கள்…?
வாழ்க்கை நிலையில் அருள் செல்வம் பெற்று உயர் நிலை பெற வேண்டியவன்...
1.செல்வச் செழிப்பை எண்ணத்தில் கொண்டு...
2.அதி ஆசைக்குத் தன்னையே அடகு வைத்து...
3.உயர் ஞானத்தால் ஆத்ம பலம் பெற்றிட வழிகாட்ட வந்த உபதேசியின் (குரு) நிலை எல்லாம்
4.குறி சொல்பவனின் நிலை ஆகிவிட்டது...!
அந்த நிலை நமக்கு வேண்டாம். “நான் தான்…!” என்ற நிலையே உயர் ஞான வளர்ப்பிற்குத் தடைக்கல் ஆகிவிடும்.
அறிவை அறிவால் அறிவது என்பதே தத்துவப் பொருள் காட்டப்பட்ட உண்மையின் சாரங்களைக் கைக் கொள்ள வேண்டும் என்பதே...!