ஆண்டாண்டு காலமாக மனித குல சமூக நெறி வாழ்க்கை அமைப்பில் ஒழுக்கவியலாக வரைமுறை மீறாச் செயலுக்கும் உயர்வெண்ணம் சிதறிடாத் தன்மை பெற்றிட வாழ்க்கை நெறிச் சட்டங்கள் மகரிஷிகளால் உணர்த்தப்பட்டதிலெல்லாம்
1.அறிவின் ஆற்றலும் வைராக்கிய சிந்தனையுமாகத் “தான் யார்...?”
2.இந்த ஜீவ பிம்ப சரீரம் பெற்றதன் நோக்கம் என்ன...? என்று
3.தன்னை உணரக்கூடிய வழி பிறந்து...
4.உயர் நிலை பெற வேண்டிய ஞானம் கொண்டு பெறும் மெய்ப் பொருளை
5.நாம் உணரத் தான் முடிந்திடும்.
மனோசக்தியின் ஆற்றலே இன்றைய விஞ்ஞானத்திற்கும் “புரியாத ஒரு புதிர் தான்...!”
அப்படியானால்... தன்னைத்தான் உணர்ந்து உயர் ஞான சிந்தனை கொண்டு மெய் ஞானத்தின் பொருளாக இயற்கைச் சக்திகளை அறிந்து கொண்டது எந்தச் சக்தியால்...?
1.உயிராத்ம சக்தி பலம் பெற்றிருந்தால்
2.அதை வெளிப்படுத்தும் செயல் தன்மை கொண்டாலே மனோசக்தி என்று பெயர் பெறுகின்றது.
3.ஆனால் இவைகளைக் கண்டு வியப்பு மேலிடுவதைத் தவிர ஆக்கச் சக்திக்கு அது ஒன்றும் பயன் இராது.
பிண்டமாகிய சரீரத்தைக் கொண்டே அண்டத்தை அறிந்து கொள்ளும் செயலில் பூமித்தாய் ஈர்த்திடும் சூரியனின் சக்திகளை சுவைத்து வளம் பெற்ற இயற்கையின் செயலைத் தன் சரீரத்தின் உள்ளேயும் அதே தொடர் நிகழ்வு பெறுகின்ற தன்மைகளை அறிந்து கொண்டாலும்
1.பரவெளியின் சூட்சமத்தில் சூரிய ஒளிக்கதிர் தன்மைக்குள்
2.இரு வித உயிரணுக்கள் (சிவசக்தி அணுக்கள்) கலந்து செயல்படும் செயலை
3.ஞான விழிப்பார்வை கொண்டு அறிந்து கொள்வதே “அரூபலிங்கம்...!”
அந்த உயிரணுக்கள் சரீரத்தில் செயல்படும் நிலைகளில் சரீரம் கொண்டு ஆண் பெண் உடல் கூறுகளாக உயிர் தொகைகளாக ஜீவாத்மாக்களாகின்றது.
அரூபலிங்கம் என்ற அந்தப் பால்வெளி சூட்சமத்தைச் சரீர செயலில் கண்டு தெளிந்து அந்த உயர் சக்திகளை வான இயல் தன்மைகளில் உண்மைப் பொருள் காட்டி ஸ்வரூபலிங்கமாகச் சமைத்துப் பேரின்பச் சக்திகளைப் பெற்று “உயர் ஞான வளர்ப்பாக உயர் நிலை பெறவே வழி வகைகளை ஞானிகள் காட்டினார்கள்...!”
அப்படிக் காட்டியிருந்தாலும்.. இன்றோ சிவலிங்க வடிவு (உடலின் ரூபங்கள்) என்றாலே சிற்றின்ப இரசனைக்கே எண்ணத்தைச் செலுத்தித் தன் நிலையையே மறக்கின்றான் மனிதன்...! எண்ணுகின்ற எண்ணம் அன்றோ செயல்படுகின்றது.
இயற்கையின் செயல்பாட்டை உயர் ஞானத்தால் அறிந்த ஞானிகள் பூமியின் சுழற்சியில்
1.ஆகாயம் காற்று நீர் நிலம் நெருப்பு என்ற பஞ்சபூதத் தன்மைகளில் ஓசை ஒளி என்ற செயல் நிகழ்வுகளையும்
2.ஞாயிறு கோள் திங்கள் கோள் பூமியின் தொடர்பு கொண்ட செயல்பாட்டையும்
3.உயிரணுக்களின் அசைவு நிலைகளையும்
4.ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்ட செயல்பாட்டில்
5.தன் எண்ணத்தால் தெளிந்த அந்தப் பேரானந்தப் பெருநிலையை
6.”கூத்தாண்டவன்...!” என்ற உருவச் சமைப்பில் இயற்கையின் தத்துவத்தைக் காட்டினார்கள்.
சிவன் உருவமும்... உருவத்தின் ஆனந்த லயமும்... அலங்கரித்துக் காட்டிய தத்துவங்களும்...
1.“இயற்கையின் பால் ஒன்றச் செய்த தன்மைகளை உணர்ந்து கொண்டால்...”
2.மனித எண்ணத்திற்கு மரண பயமில்லை...!