ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

April 22, 2021

மரண வாயிலில் வைத்து குருநாதர் எனக்குக் கொடுத்த சக்தி

 

ஒரு சமயம் குருநாதர் (ஈஸ்வரபட்டர்) கை கால் வராது போல் இருந்தார் என்று சொல்லி (தூக்கிக் கொண்டு தான்) ஐவர் மலைக்கு அழைத்துச் சென்றிருந்தேன் (ஞானகுரு).

அங்கே சென்ற பின் இரவிலே நீ என் பக்கத்திலேயே படுத்துக்கொள்...! என்றார், குருநாதர். பனிரெண்டு மணி இருக்கும். கை கால் வராமல் முடமாக இருந்தவர் எழுந்து நடக்கிறார்... சாதாரணமாக நடக்கின்றார்...!

அங்கு ஒரு பிள்ளையார் கோவில் இருக்கும். நடந்து போய் அங்கே உட்கார்ந்து கொண்டார். அவர் செய்வதை நான் முழித்துப் பார்த்துக் கொண்டே இருந்தேன்.

அங்கே போனவுடன்... “தெலுங்கு ராஜ்ஜியம் இங்கே வாடா...” என்னை எவனோ தூக்கிக் கொண்டு வந்து இங்கே வைத்துவிட்டான்... வந்து தூக்குடா...! என்கிறார்.

இரவு நேரத்தில் அங்கே போய் என்ன செய்வது...? சருக்கலான பாறையில் உட்கார்ந்திருக்கிறார்.

அந்த இடத்தில் இருந்து கொண்டு என்னைக் காப்பாற்றுடா... என்னைக் காப்பாற்றுடா,.. என்கிறார். பார்த்தால் சறுக்கலான பாறையில் பிடிக்க முடியாத இடத்தில் இருக்கின்றார். (இன்னும் கூட அந்த வழுக்குப்பாறை அங்கே இருக்கின்றது)

நான் எப்படி சாமி வர முடியும்...? என்று கேட்டேன். பின் வேஷ்டியெல்லாம் கட்டி விட்டு இதைப் பிடித்து கொள்ளுங்கள் என்று சொன்னேன்.

ஆனால் அதைப் பிடித்துக் கொண்டு கீழே போய்க் கொண்டே இருக்கின்றார், நீ வந்து என்னைக் காப்பாற்றுடா, துண்டு... வேஷ்டி எல்லாம்... என்னைக் காப்பாற்றாது...! என்கிறார் குருநாதர்.

சாமி... வேஷ்டியையும் பிடித்துக் கொள்ளுங்கள், நானும் பிடித்துக் கொள்கிறேன் என்றாலும் பிடிக்க முடியவில்லை. அப்பொழுது நான் (ஞானகுரு) ஒரு பக்கம் இருந்தாலும் என்னை வழுக்கிவிட்டு இந்தப் பக்கம் கொண்டு போகின்றது..

குருநாதர் “என்னை காப்பாற்றுடா...” என்கிறார்.

சாமி, நான் கீழே போய்த்தான் காப்பாற்ற வேண்டும். கீழே விழுந்தால் நொறுங்கித் தூள் ஆகிப்போகும். அங்கு போய்த்தான் காப்பாற்ற வேண்டும் என்றேன்.

இது நடந்த நிகழ்ச்சி.

அப்பொழுதுதான் அதிகாலை விடிந்து சில நிலைகள் வருகின்றது. அங்கு கீழே ஒரு பஸ் போய்க் கொண்டிருந்தது. உடனே குருநாதர் “ஏறு சிங்... இறங்கு சிங்... என்று நீ பார்த்திருக்கிறாயாடா...?” என்றார்.

1.சாமி... இப்பொழுது நான் இறங்கு சிங்கில் கீழே போய்க் கொண்டு இருக்கிறேன்.
2.செத்த பிற்பாடு... உடலிருந்து உயிர் ஏறு சிங்காக மாறிவிடும்.
3.அதிலே வேண்டுமென்றால் போய்ப் பார்த்துக் கொள்ளலாம் சாமி என்றேன்.

ஏன்டா நான் சொல்கிறேன்... நீ எதிர்த்துப் பேசுகின்றாயா...? என்றார், குருநாதர்.

பார்த்தால் அந்த இடத்தில் வைத்துக் குருநாதர் பல நிலைகளில் பல அற்புதங்களைக் காட்டுகின்றார். இந்த உலக நிலைகளையும் மற்ற நிலைகளையும் எல்லாவற்றையும் காட்டுகின்றார்.

அப்பொழுது நீ இந்த உலகத்தைப் பாருடா...! என்கிறார்.

எங்கே சாமி பார்ப்பது...? இன்னும் கொஞ்ச நேரத்தில் கீழே போய் எல்லாம் அடங்கிவிடும் போல் இருக்கின்றது...! என்றேன் நான்.

நீ உலகத்தைப் பாருடா என்றால்... என்னடா நீ அடங்கிவிடும்...! என்று சொல்கின்றாய்...? என்று இப்படி வாதம் பண்ணிக் கொண்டே இருக்கின்றார் குருநாதர்.

அப்படியே பாறையில் நெஞ்சோடு தேய்த்து இரத்தம் வடிகின்றது. வழுக்குப் பாறையாக இருப்பதால் அப்படியே என்னைக் கீழே கொண்டு போகின்றது. இன்னும் கொஞ்ச நேரத்தில் போய்விடுவோம் (உயிர்) போலத் தெரிகின்றது.

நீ இதைப் பார்... உலகம் எப்படி இருக்கிறது என்பதைப் பார்...! என்று என்னென்னமோ அதிசயங்களை எல்லாம் காட்டுகின்றார் குருநாதர்.

சாமி... இன்னும் கொஞ்சம் நேரத்தில் நீங்கள் சொல்வது எல்லாவற்றையும் போய்ப் பார்க்கப் போகின்றேன், அது வரைக்கும் கொஞ்சம் அமைதியாக இருங்கள்...! என்றேன்.

அதற்குப்பின்...
1.எத்தனையோ உணர்வுகளை ஊட்டுகிறார், உலக நிலைகளைக் காட்டுகின்றார்
2.இந்த மரண நிலைகளில் வைத்துத்தான் முழுமையான சக்தியைக் கொடுக்கிறார்
ஐவர் மலையில் வைத்துத்தான் அதைக் கொடுத்தார் நமது குருநாதர்.

அந்தக் காலை நேரத்தில் யாரும் இருக்க மாட்டார்கள். குருநாதர். அங்கிருந்து எழுந்து வந்து என்ன செய்தார்...?

1.சிவ தாண்டவம் ஆடுகிறார்
2.ஒரு பெரு விரலில் நின்று கொண்டு அப்படியே “கிறு...கிறு...கிறு” என்று பம்பரம் போல் சுற்றி அவ்வளவு அற்புதமாக ஆடுகிறார்.
3.எல்லா வேலைகளையும் செய்கின்றார், குருநாதர்.

நீ பல உண்மைகளை அறிவாய்... பல நிலைகளைப் பெறுவாய் என்று இந்த இடத்தில் வைத்து மரண வாயிலில் வைத்துத்தான் இந்த சக்திகளைக் கொடுக்கிறார்.

இந்த உலகம் எப்படி இருக்கிறது என்று நீ அறியும் தன்மை பெறுவாய், அதை எப்படிக் காக்க வேண்டும்...? என்று காட்டுகின்றார்.

யாராவது தவறு செய்தால் கூட என்னிடம் இருக்கும் சக்தியைக் கொண்டு ஒன்றும் செய்வதில்லை. ஆனால் அதைச் செய்தால் இந்தச் சக்தி விரயம் ஆகும்.
1.அந்த விரயம் ஆகும் நிலைக்குக் கொண்டு செல்லாமல்
2.உருவாக்கும் நிலைக்குக் கொண்டு வரவேண்டும் என்று சொன்னார் குருநாதர்.

இப்படித்தான் ஏதேதோ செய்யும்படி பல நிலைகளைச் செய்து... அதை எல்லாம் சொல்வதற்கில்லை...! இப்படி எண்ணிலடங்காத நிலைகளைச் செய்துதான் எனக்கு இந்த வாக்குகளைக் கொடுத்தார் குருநாதர்.

நமது அகண்ட அண்டமும் பேரண்டமும் இந்த உணர்வின் தன்மை எப்படி இயங்குகிறது...? என்ற சில உண்மையின் தன்மைகளை எல்லாம் கொடுக்கிறார்.

நமது பிரபஞ்சமும் 27 நட்சத்திரங்களும் எப்படி எல்லாம் இயங்குகிறது...? என்பதை நேரடியாகப் பார்த்தால் எப்படி இருக்கும்...!
1.அந்த மரண வாயிலில் வைத்துத்தான் இந்த அற்புதங்களை
2.பார்க்காத காட்சிகளை எல்லாம் காட்டுகிறார் குருநாதர்.

பின் அந்த உணர்வின் தன்மை கொண்டு ஏறு சிங்... இறங்கு சிங்... என்று சொல்லி இந்த ஆட்டங்களைக் காட்டி அப்புறம் என்னை எழுப்பிவிடுகிறார் குருநாதர்.

அப்பொழுது, அந்த இடத்தில் மற்றவர்கள் பார்க்கும் போது கால் முடமாக இருப்பது போல இருக்கிறார். ஆனால் இங்கே நன்றாக நடனம் ஆடுகின்றார்.

மற்றவர்கள் அவரைப் பைத்தியம் என்றுதான் நினைத்தார்கள். அதனால் காலை முடக்கி கொன்டார். ஆனால், அந்த உண்மையின் தன்மையை எமக்குக் கொடுத்து இங்கு நடனம் ஆடுகிறார்.

1.குருநாதர் ரசமணி செய்வார்... தங்கத்தைச் செய்வார்
2.இந்தச் சரக்குகளைச் செய்தால் நாமும் தங்கம் செய்யலாம் என்ற வகையில்
3.குருநாதரிடம் ஆசைப்பட்டு அணுகியவர்கள் ஏராளமானோர்.

ஆனால் இதிலிருந்து ஒடுங்கப்பட்டு தனித்தன்மையாக, எனக்கு இந்த ஐவர்மலையில் வைத்துத்தான் அந்தச் சக்தியைக் கொடுத்தார்.

அவர் இருக்கும் பொழுதே பல காடுகள் பல மேடுகள் எல்லாம் அலைந்து பார்த்தேன். இந்த உண்மையெல்லாம் எமக்குத் தெளிவாகத் தெரிந்த்து இந்த ஐவர் மலையில் தான்.

ஏனென்றால் அந்த உண்மையின் உணர்வுகள் வந்த பின் குருநாதர் என்ன செய்வார்...?

என் கையை நீட்டச் சொல்வார். அங்கிருக்கும் மரங்களும் கற்களும் அப்படியே தூக்கிக் கொண்டு மேலே போகும். தூக்கி வீசுவது போன்ற சில சக்திகளைக் கொடுக்கின்றார்.

அப்பொழுது எனக்கு என்ன செய்கின்றது...?

1.மரத்தையே தூக்கி வீசும் பொழுது நம்மால் எதை வேண்டுமானாலும் செய்ய முடியும் என்று ஒரு திமிர் ஏற்படுகின்றது.
2.எதிரி இருந்தால் அவனை வீழ்த்தக்கூடிய சக்தி நமக்கு இருக்கிறது என்று இப்படித்தான் எனக்குச் சிந்தனை வருகிறது.

ஆனால் அதை எப்படி நல்ல வழிக்குப் பயன்படுத்த வேண்டும் என்று அந்தந்தச் சமயங்களிலெல்லாம் குருநாதர் ஒவ்வொரு உணர்வின் நிலைகளையும் எனக்கு உபதேசித்தார்.

ஆகவே... எம்மை குருநாதர் எப்படிப் பண்படுத்தி வளர்த்துக் கொண்டு வந்தாரோ அதே போல மற்றவர்களையும் கொண்டு வர வேண்டும் என்று தான் விரும்புகின்றேன்.

1.இந்த உலகம் எப்படி இருக்கிறது...? என்ற நிலையும்
2.இந்த உடலுக்குப்பின் எங்கே செல்ல வேண்டும்...? என்ற நிலையும்
3.பிறவி இல்லா நிலைகள் எப்படி அடைய வேண்டும்...? என்ற உண்மைகளையும் எனக்கு உணர்த்தினார் குருநாதர்.

அப்பொழுது அந்த நிலையில்... எது எது உன்னைச் சந்திக்கும்...? அந்த ஆசையின் நிலைகள் உனக்குத் திரும்பும்...! அல்லது ஆசையின் நிலைகள் உனக்குள் திரும்பும் போது உன்னை எதிரி என்ற நிலையில் உன்னைத் தாக்கும் உணர்ச்சி வரும்.

அப்பொழுது, இந்தக் கடுமையான நிலைகளின் உணர்வை ஏற்றினால் உன்னையும் ஆட்கொண்டு உனது நல்ல குணங்களைக் கொல்லும்... மற்றவரையும் காக்க முடியாது.

இப்படிக் கடுமையான சோதனைகளைக் கொடுத்தார் குருநாதர். நான் போகும் பக்கம் எல்லாம் பல எதிர்ப்புகள் வரும். நாய் கூடக் கடிக்க வரும், அப்பொழுது என்னென்ன செய்வது...? என்று முதல் அனுபவத்தைக் கொடுத்தார்.

இப்படித்தான் இருபது வருடம் அனுபவம் பெற்று உங்களுக்குள் இந்தச் சக்தியைக் கொடுத்து உங்களை வளர்த்துக் கொள்ளுங்கள் என்கிறேன்.

நிறையச் சொல்லப் போனால் ஒவ்வொரு நேரத்திலும் நான் பட்ட அவஸ்தைகள் இன்னதென்று சொல்ல முடியாது. ஆகையால் இதைப் பேணிக் காத்து எல்லோருக்கும் இந்த உண்மையை உணரும் தன்மை பெறச் செய்ய வேண்டும். நீங்கள் எடுத்துக் கொண்ட மூச்சலைகள் பிறருடைய தீமைகளை அகற்றும் சக்தி பெற வேண்டும்.

என்னுடைய ஆசை... நீங்கள் அனைவரும் என்னைப் போல் (ஞானகுரு) பெரும் ஞானிகளாக மாற வேண்டும்.

பிறருடைய தீமைகளைப் போக்கும் மகான்களாகத் தான் நீங்கள் மாற வேண்டுமே தவிர இந்த உடலின் இச்சைக்கு மாறி விடாது உங்களைக் காத்து நல் வழியில் கொண்டு வருவதுதான் “என்னுடைய முழுமையான தியானம்....!”

நீங்கள் முழுமை பெற்றால்தான் இதைச் செயல்படுத்த முடியும்.

ஏனென்றால் அதைத்தான் இப்பொழுது மிகவும் வலுப்படுத்துகின்றேன். இந்தச் சக்தி பெற்ற நீங்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையிலும் வழி காட்டுதல் வேண்டும்.

இப்பொழுது உபதேசித்த நிலைகள் கொண்டு
1.நுகர்ந்த உணர்வுகள் உங்களை எப்படி இயக்குகின்றது...?
2.அதிலிருந்து நீங்கள் எப்படி மீள வேண்டும் என்று உபாயத்தை
3.மற்றவருக்கு எடுத்துக் கூறி அந்தப் பதிவின் நிலைகளை அவர்களுக்குள் பதிவு செய்ய வேண்டும்.

அந்தப் பதிவின் நிலைகள் அவர்களுக்குள் வளர்ந்தால்...
1.அந்த எண்ணத்தால் தீமையிலிருந்து அவர்கள் விடுபடுவதும்,
2.தீமை செய்தவர்கள் திருத்திக் கொள்வதும்
3.நன்மை செய்யும் உணர்வு உள்ள மக்களாக அவர்களை மாற்றும் திறன் நீங்கள் எல்லோரும் பெற வேண்டும் என்பதற்குத் தான்
4.யாம் இதைச் சொல்வது.

அந்த முழுமையின் தன்மைகளை நாம் எல்லோரும் அடைதல் வேண்டும். இது தான் நமது லட்சியமே...!

ஆகவே இந்த லட்சியத்தின் நிலைக்கு வரும்போது செல்வத்தை நாம் தேடிப் போக வேண்டாம். செல்வம் தன்னாலே வந்து சேரும். ஏனென்றால் செல்வத்தைக் குறிக்கோளாக வைத்தால் அதனுடைய ஆசையின் நிலைகள் “உடல் பற்று தான் வரும்..”

நமது குருநாதர் காட்டிய அருள் வழியில்...
1.நீங்கள் எல்லோரும் அந்த அகஸ்தியனைப் போன்று
2.உலகைக் காக்கும் அருள் ஞானிகளாக வளர வேண்டும் என்று நான் பிரார்த்திக்கின்றேன்.