ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

February 29, 2016

உடலின் உணர்வுக்குக் கல்வி - உயிருடன் ஒன்றும் உணர்வுக்கு அருள் ஞானம்

இன்று கல்விச்சாலையில் நாம் கற்பது உடல் வாழ்க்கைக்கு. வாழ்க்கை எப்படி நடத்த வேண்டும்? என்று தெரிந்து கொள்கிறோம்.

அதே சமயத்தில் அருள் ஞானத்தைப் போதிக்கும் பொழுது கல்வி கற்றிருந்தாலும் இதை நாம் வாழ்க்கையில் உணர்வின் செயலாக எப்படி மாற்றியமைப்பது? என்ற நிலை பெறவில்லை.

உதாரணமாக, பல விதமான பாட நிலைகளைப் படிக்கின்றார்கள். அதனதற்குத் தக்க படிப்பின் நிலைகளைப் பதிவாக்குகின்றார்கள். திருப்பி அதைச் சொல்கின்றார்கள்.
ஆனால், படித்ததை அதையே திருப்பி எழுதப்படும் பொழுது
தேர்ச்சி (PASS) பெற்று விடுகிறார்கள்.

படிக்கும் பொழுதே அதனின் கருத்தின் ஆழம் எது?
என்று சிந்திக்கும் மாணவன் அவன் பரீட்சையில் தேர்வதில்லை.

படித்ததை அப்படியே மனதில் வைத்துத் திருப்பிப் பாடமாக ஒப்புவிப்பவர்கள்
பரீட்சையில் முதல் நிலையில் (FIRST CLASS) தேர்ச்சி
என்ற நிலைக்கு வந்துவிடுகின்றார்கள்.

அந்தப் படிப்பின் அறிவைச் சிந்தித்து எது குறை? எது நிறை? என்ற நிலைகளில் அவரால் வர முடியாது.
படித்ததை மட்டும் தான் சொல்வார்.
தன் வாழ்க்கையில் வரும் சிந்தித்துச் செயல்படும் திறன் இருக்காது.

அவர் கற்றுணர்ந்த உணர்வு எதுவோ அதை மட்டும் பேசுவார். மற்றவர்களைப்பற்றிக் குற்றமாகவே பேசுவார்.

படிப்பில் கல்வியில் தேர்ச்சி பெறவில்லை என்றாலும் அவர் சிந்திக்கும் திறனை அதிகமாக வளர்த்துக் கொண்டால் அந்தச் சிந்திக்கும் நிலை வரப்படும் பொழுது
அவன் தொழிலில் இயக்கும் போது
ஒவ்வொன்றிலும் சிந்தித்துச் செயல்படத் தொடங்கிவிடுகின்றான்.

யாம் இங்கே உபதேசம் செய்கின்றோம்.

படித்தவர்கள் சாமி சொல்வது சரியா தவறா? சரியா தவறா? சரியா தவறா?
என்று வாதம் செய்து கொண்டே இருப்பார்கள்,
பெரும்பகுதி நீங்கள் இதைப் பார்க்கலாம்.

“சாமி என்ன சொல்கிறார்..,?” என்று பதிவாக்கிக் கொள்கின்றார்கள்.
“அன்று சொன்னார்..., நாம் அதைச் செய்து பார்ப்போம்..,”
என்று உணர்வைத் தூண்டும் பொழுது
படிக்காதவர்கள் ஞானத்தைப் பெறுகின்றார்கள்.

படித்தவர்கள் என்ன செய்கிறார்கள்? நான் மகாபாரதத்தைப் படித்தேன், கந்த புராணத்தைப் படித்தேன் பிரம்ம சூத்திரத்தைப் படித்தேன், ஆனால், அதையெல்லாம் சாமி இதில் சொல்லவில்லையே என்பார்கள்.

அவர்கள் படித்ததை அதைப் பதிவு செய்து கொள்கிறார்கள்.

இப்பொழுது யாம் சொல்லும் ஞானத்தின் நிலைகளை அந்த அருள்ஞானிகள் பெற்றதைச் சொல்லப்படும் பொழுது
இந்தச் சூத்திரத்தை விட்டுவிடுவார்கள்.
யாம் சொல்வதைக் காலி செய்து கொண்டேயிருப்பார்கள்.
தனக்குள் பதிவும் ஆக்க முடியாது, உபதேசிப்பதைப் பெறவும் முடியாது.

ஆக, பிரம்ம சூத்திரத்தைத் தெளிவாக எடுக்கின்றார்கள்.

மனு நீதி சாஸ்திரத்தில் இது தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.
·         மனிதனான பின் இந்தத் தீமைகளை அகற்றுவது எப்படி?
·         தீமைகளை அகற்றியவன் யார்?
·         தீமையை அகற்றியவனின் உணர்வுகளை நாம் எப்படி எடுப்பது?

மனு நீதி சாஸ்திரத்தில் இது உண்டு. இது மனுஷாள் என்று சொல்லிவிடுவார்கள். ஆனால், அந்தச் சாஸ்திரத்தைத் தெளிவாக்கும் நிலைகள் இல்லை.

அவர்கள் படித்திருப்பார்கள். நான் மனு நீதி சாஸ்திரத்தைப் படித்திருக்கின்றேன். சாமி சொல்வது எங்கே அதிலே இருக்கின்றது? ஒன்றும் காணோம் என்பார்கள்.

இந்த நிலைகள் தான் வரும். மகாபாரதத்தைப் படிக்கும் பொழுது படித்த நிலைகள் வருகின்றது. ஆனால், சாமி சொல்வதை அதில் காணவில்லையே என்பார்கள்.

ஏனென்றால், படித்தைதை மட்டும் தான் அவர்கள் எடுத்துக் கொண்டுள்ளார்கள். படித்த உணர்வுகள் எதுவோ அதுவே தான் இங்கே வருகின்றது

கேரளாவில் மொக்கை அரிசி சாப்பிடுகின்றார்கள். அதனுடைய ருசி வேறாக இருக்கின்றது. சன்ன அரிசியைப் போட்டுச் சாப்பிட்டால் ருசி வேறாகிவிடுகின்றது. அப்பொழுது அந்த ருசி இதில் காணவில்லையே என்பார்கள்.

. அதே மாதிரி இங்கே தமிழ் நாட்டில் உள்ளவர்கள் மொக்கை அரிசியைச் சாப்பிடும் பொழுது அந்த ருசி இதில் காணவில்லையே என்பார்கள்.

மொக்கை அரிசி சாப்பிடுபவர்கள் அதைத்தான் ருசி என்பார்கள்.
சன்ன அரிசி சாப்பிடுபவர்கள் அதைத்தான் ருசி என்பார்கள்.
ஆக, உணர்வுகளின் சுவை எதுவோ அதனால் வளர்ந்த அணுக்களும் அதே தான்.

இதைப் போன்றுதான் மதங்களானாலும், இனங்களானாலும்  எதன் மேல் பற்று வைத்து நாம் பதிந்து கொண்டோமோ அதன் சுவைதான் அவர்களுக்கு இரசிப்பாக இருக்கும்.

அருள் ஞானிகளின் உணர்வை நாம் பெறவேண்டும். இருள் சூழா நிலைகளில் எப்படிப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்? என்று இதனைப் பதிவாக்கிக் கொண்டால் அதன் சாரமாக
அருள் ஞானிகளின் உணர்வை நமக்குள் பெருக்கி
நம்மை அறியாது வரும் தீமைகளை மாற்ற முடியும்.

இல்லையென்றால் படித்ததை வைத்து நாம் தெளிவாக்க வேண்டும் என்றால் படித்தது பாதைகளை அறிவதற்குத்தான் உதவும்.

ஆனால், ஞானத்தின் நிலைகள் வளர்வதற்கு
அருள் ஞானிகளின் உணர்வைப் பெறுதல் வேண்டும்.

அந்த ஞானத்தை வைத்துத் தான் படித்த கல்வியின் நிலைகளின் ஞானத்திற்கும் கொண்டு செல்ல முடியும்.

உடலின் உணர்வுக்குத் தான் கல்வி உதவுமே தவிர, உயிருடன் ஒன்றிய உணர்வின் தன்மை வளர்க்கும் ஞானத்திற்கு இது உதவாது.

கல்வி நமக்கு நல் பாதையைக் காட்டுவதற்குத்தான் அந்தக் கல்வியை நாம் சீராக எண்ணி அருள் ஞானியின் உணர்வுடன் ஒன்றிப் பார்த்தால் இன்று விஞ்ஞான உலகில் வந்த நச்சுத் தன்மையையும் மாற்றியமைக்கலாம்.