ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

November 30, 2015

அணுவைப் பிளந்தான் விஞ்ஞானி, உணர்வுக்குள் இருக்கும் தீமையைப் பிளந்தவன் மெய்ஞானி

இன்று விஞ்ஞானிகள் அணுவைப் பிளந்துள்ளார்கள். மெய்ஞானி உணர்வுக்குள் இருக்கும் தீமைகளைப் பிளந்து உணர்வின் தன்மை ஒளியாகச் சென்றவர்கள்.

அந்த மெய் ஞானிகளின் உணர்வை நமக்குள் எடுத்தால் இந்த விஞ்ஞான அறிவால் நமக்குள் ஏற்றுக் கொண்ட தீமையின் உணர்வின் தன்மையைப் பிளக்க முடியும்.

அதனைப் பிளந்திடச் செய்வதற்குத்தான் இன்று எமது குருநாதர் காட்டிய அருள் வழிப்படி மெய் ஞானியின் உணர்வுகள் படர்ந்திருக்கும் நிலையில் அதை உங்களுக்குள் ஆழமாக அந்த ஞானியின் தன்மையைத் தியானித்து அதனின் நிலையை வலுப்பெறச் செய்து அதையே உபதேசிக்கின்றோம்.

உபதேசிக்கும்போது நீங்கள் எந்த அளவிற்குக் கூர்ந்து கவனிக்கின்றீர்களோ அந்த உணர்வின் தன்மையை ஊழ்வினையாகப் பதிவு செய்யும்போது அதனின் நினைவு கொண்டு இந்த வாழ்க்கையில் விஞ்ஞான அறிவால் நமக்குள் வரும் தீய வினைகளிலிருந்து உங்களை மீட்டிக் கொள்ளலாம்.

இந்த உணர்வின் தன்மையை ஊழ்வினையாகப் பதிவு செய்ததை நினைவு கொண்டு நீங்கள் வரிசைப்படுத்தி தியானித்து யாம் உபதேசிக்கும் உணர்வின் தன்மையை உங்கள் உடலுக்குள் வலுப்பெறச் செய்தல் வேண்டும்.

யாம் உபதேசித்ததை மீண்டும் நீங்கள் எண்ணும்போது ஞானியின் உணர்வலைகளை நீங்கள் எளிதில் சுவாசித்து உங்களை அறியாது வந்த தீயவினைகளை நீக்கமுடியும்.

இன்று விஞ்ஞானி விஞ்ஞானத்தின் நிலைகள் கொண்டு அவன் கல்விக்குச் சென்று பாடநிலைகளில் வளரப்படும்போது அணுவைப் பிளக்கும் ஆற்றலின் நிலையை அவன் பெறுகின்றான்.

அதைப் போல நம் உணர்வுக்குள் நஞ்சு கலந்ததை மெய்ஞானியின் உணர்வை நமக்குள் சேர்த்து நம் எண்ணத்தால் உணர்வுக்குள் இருக்கக்கூடிய நஞ்சினைப் பிளக்க முடியும்.

ஏனென்றால், உணர்வின் தன்மையை ஒளியாக மாற்றிய
மகரிஷிகளின் உணர்வினை உங்களுக்குள் பதியச் செய்யும்போது
அதையே நீங்கள் பாட நிலையாக எடுத்து
அவர்களின் ஆற்றலை வளர்த்திட முடியும்.

வளர்த்த நிலைகள் கொண்டு மனித வாழ்க்கையில் எப்பொழுது துன்பமோ துயரமோ நேருகின்றதோ அதை உங்களுக்குள் சேராதவண்ணம் தடுத்து நிறுத்த ஓம் ஈஸ்வரா என்று நீங்கள் எண்ணியதை இயக்கிக் காட்டும் அவனையே ஈஸ்வரா என்று எண்ணி உயிரிடம் வேண்டுங்கள்.

மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெறவேண்டும் வானை நோக்கி எண்ணி ஏங்குங்கள்.

ஆண்டென்னாவை விண்ணை நோக்கிச் செலுத்தப்படும்போது அதனின்று குவிந்து பூமிக்குள் படர்ந்து கொண்டிருப்பதை டி.வி.யில் தெளிவாக உணர்த்துகின்றது விஞ்ஞானிகலால் உருவாக்கப்பட்ட சக்தி வாய்ந்த ஆண்டென்னா.

இதைப் போல எமது உபதேசத்தைக் கூர்ந்து கவனித்த நிலைகள் கொண்டு உங்கள் கருவிழியின் இயக்கத்திற்குள் ஆற்றல் மிக்கதாக இந்த உணர்வின் தன்மையப் பாய்ச்சுவதே இப்பொழுது நாம் தியானிக்கும் உணர்வின் நிலை.

இதை மனம் உவந்து உங்களுக்குள் பெறவேண்டும் என்று ஏக்க உணர்ச்சியை ஊட்டினால் அது ஜீவன் பெறுகின்றது. அது உங்கள் கையில்தான் இருக்கின்றது. ஏனென்றால்
நமது குருநாதர் காட்டிய அருள் வழிப்படி இதை நான் செய்தேன்.
அதனின் வழிகளில் நான் பெற முடிந்தது.

அவர் காட்டிய அருள் வழியில் உங்களுக்குள் இதைப் பதிவாக்கப்படும்போது இதை விண்ணை நோக்கி நீங்கள் எண்ணும்போது அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெறவேண்டும் என்று எண்ணி அதை உங்கள் உடலுக்குள் சேர்க்க முடியும்.

அப்பொழுது உங்கள் வாழ்க்கையில் நல்லதை எண்ணியிருந்தாலும் பிறரின் தீமையை விளைவிக்கும் உணர்வினை நுகர்ந்து அறிய வேண்டும் என்ற நிலைகளில் செயல்பட்டிருந்தாலும் அந்தத் தீமைகள் உங்களுக்குள் விளையாதபடி தடுக்க முடியும்.

ஒரு வெண்மையான துணியை நாம் போட்டிருந்தாலும் அழுக்குப்பட்டால் அடுத்து நிமிடமே சோப்பைப் போட்டு அதை வெளுத்துவிடுகின்றோம்.

இதைப் போல தீமையை வென்ற அந்த மகரிஷிகளின் உணர்வை நாம் நுகர்ந்து நமக்குள் சேர்த்துத் தீமையை விளைவிக்கும் உணர்வைச் சுத்தப்படுத்தும் நிலையே யாம் இப்பொழுது உபதேசிக்கும் இந்த நிலைகள்.

இதைப் போல அடிக்கடி ஈஸ்வரா என்று உயிரை எண்ணி அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும். அது எங்கள் உடல் முழுவதும் படரவேண்டும் என்று எண்ணினால்
எப்படி சோப்பைப் போட்டுத் தூய்மையாக்குகின்றோமோ இதைப் போல
அந்த ஞானியின் அருள் சக்தியை எடுத்து
நம் ஆன்மாவைத் துடைத்துவிடலாம்.

பிறர் தவறு செய்வதை நாம் உணர்ந்தபின் அதை உணரும்போது நமக்குள் அந்த வேதனையும் வெறுப்பும் எரிச்சலும் கோபமும் நமக்குள் உணர்ச்சிகளைத் தூண்டி உடலைச் சோர்வடையச் செய்கின்றது.

பின் உடலுடன் இது இயக்கிவிட்டால் அதனின் விளைவே அதிகமாகின்றது.

அதனை விளையவிடாது தடுக்க வேண்டுமென்றால் இப்பொழுது உபதேசித்த உணர்வின் தன்மை ஊழ்வினையாக விளைந்து இதைப் போல நாம் கூர்ந்து அந்த தியானத்தின் நிலைகள் வளர்த்துக் கொண்டால் இதுவே தியானம்.

அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் எங்களை அறியாது சேர்ந்த இருள்கள் நீங்கவேண்டும் அந்த மெய்ப்பொருள் காணும் திறன் நாங்கள் பெறவேண்டும் என்ற உணர்வின் ஏக்கத்தை வலுக் கொண்டு தியானித்தோம் என்றால் அதனின் பலனை நாம் அனுபவிக்கலாம்.