ஒரு சமயம எமது (ஞானகுரு) மனைவியை
பழனிக்கு அருகில் உள்ள கன்னடி பெருமாள் ஆலயத்திற்கு அழைத்துச் சென்றோம். அது சமயம்
எமக்கு சாமியம்மாவின் உடலில் நோய் இருந்தது தெரியாது.
அந்தக் கோவிலுக்குச் சென்று வரும்போது
சாமியம்மாவினால் வண்டியிலும் ஏற முடியவில்லை. நடந்து போகவேண்டும் என்றாலும்
முடியவில்லை.
உடலில் நடுக்கம் ஏற்பட்டபின்தான் ஆஸ்பத்திரிக்கு
சாமியம்மாவை அழைத்துச் சென்று காண்பித்தோம். ஆஸ்பத்திரியில் என் மனைவிக்கு போன்
டி.பி. உள்ளது எலும்புகள் அரிக்கப்பட்டுள்ளன என்று கூறினார்கள்.
இங்கே ஒன்றும் செய்யமுடியாது என்று பழனி அரசாங்க
ஆஸ்பத்திரியில் சொல்லிவிட்டார்கள். அதன் பிறகு ஒட்டன்சத்திரத்தில் உள்ள
ஆஸ்பத்திரிக்கு சாமியம்மாவை அழைத்துக் கொண்டுபோய்க் காண்பித்தோம்.
அங்கே போனால், அங்கே பணிபுரிபவர்கள் ஒருவருக்கொருவர்
விளையாடிக் கொண்டிருந்தார்கள். சாமியம்மாவை ஒருவரும் கண்டு கொள்ளவில்லை.
ஒருவருக்கொருவர் தமாஷ் செய்து கொண்டிருந்தார்கள்.
அதன்பிறகு யாம் எமது மனைவியை தோளில் தூக்கிக்
கொண்டுபோய் அங்குள்ள டாக்டர்களிடம் காண்பித்தோம். டாக்டர்கள் ட்ரீட்மெண்ட்
கொடுத்தார்கள். எலும்பு துண்டாகிவிட்டது என்று கூறினார்கள்.
ஆபரேசன் செய்யவேண்டும் என்று கொண்டு சென்றால் அதுவும்
நடக்கவில்லை. பிறகு எமது மாமனார்தான் தனக்குத் தெரிந்தவர்கள் மூலம் சொல்லி
சாமியம்மாவிற்கு பேண்டேஜ் போடச் செய்தார்கள்.
பேண்டேஜ் போட்டாலும் குணம் அடையாது. ஏதோ கொஞ்ச
நாளைக்குப் பாருங்கள். அதனுடைய விதி அதுதான் என்று கூறினார்கள். பிறகு
சாமியம்மாவைத் தூக்கிக் கொண்டு வீட்டுக்கு வந்துவிட்டோம்.
பிறகு இரண்டு நாளைக்கு யாம் வேலைக்குச்
சென்றுவிட்டோம். யாம் மில்லில் வேலை செய்து கொண்டிருந்தபொழுது எமது மாமனார்
மயக்கமாகி அவருடைய உடலைவிட்டு ஆன்மா பிரிந்துவிட்டது.
எமக்குச் செய்தி அனுப்பினார்கள். வீட்டிற்கு வந்தோம்.
வீட்டில் நிலவரம் மோசமாக இருந்தது. எமது மாமியாருக்கு எம் மீது கோபம். “சண்டாளன்,
நீ என் குடும்பத்திற்குத் தொல்லை செய்துவிட்டாய்” என்று பேசி கண்டபடி எம்மைத்
திட்டினார்கள்.
எமது மாமனார் உடலுக்கான முதல் நாள் காரியம் முடிந்து
மறு நாள் அவருடைய உடலுக்கு சுடுகாட்டில் செய்யவேண்டிய
சாங்கியங்களைச் செய்வதற்குப் போனோம்.
அப்பொழுது குருநாதர் வந்து, “டீ வாங்கிக் குடிடா..,”
என்று எம்மைப் பார்த்துக் கூறினார்.
நான் உடனே “எனக்கு டீயும் வேண்டாம், ஒன்றும்
வேண்டாம்.., நீங்கள் இங்கிருந்து போங்கள்” என்று கூறினோம்.
அங்கே அப்பொழுது எமது சொந்த பந்தம் என்று உறவினர்
கூட்டம் ஏராளமாக வந்திருந்தது. அந்த நேரத்தில் குருநாதர் இப்படி “டீ குடிடா” என்று
கூறினார்.
எமது மாமனார் இறந்துவிட்டார். சாமியம்மாவோ (என்
மனைவி) இன்றோ நாளையோ என்ற நிலையில் இருந்தார். இவ்வளவு மோசமான நிலையில் அந்தக்
கூட்டத்தில் குருநாதர் எம்மைப் பார்த்து சத்தம் போட்டுக் கொண்டிருந்தார்.
அங்கிருந்த எமது உறவினர்களும் எம்மைப் பார்த்து
அசிங்கமாகப் பேசும் நிலை ஆகிவிட்டது. தெருவில் குடியிருந்தவர்களும் எம்மை ஒரு
பைத்தியக்காரன் என்று பேச ஆரம்பித்துவிட்டார்கள்.
இப்படிப் பல வகையிலும் குருநாதர் எம்மை ஒரு குற்றவாளி
ஆக்கிக் கொண்டு வந்தார். எமது மாமனாருக்கான இரண்டாம் நாள் சடங்கு முடிந்து
உறவினர்கள் எல்லோரும் அவரவர் ஊருக்குச் சென்றுவிட்டார்கள்.
குருநாதர் எம்மிடம் “நீ என்னுடன் வரவேண்டும்” என்று
கட்டாயப்படுத்தினார். அவருடன் சென்றேன்.
சாமியம்மாவிற்கு ஏற்பட்டுள்ள நோயையும் அதற்கு
டாக்டர்கள் கூறிய மருந்துகளையும் நோயின் தன்மைகளையும் குருநாதர் எப்படியே எம்மிடம்
கூறினார்.
“உனது மனைவி பிழைக்க மாட்டார், அவரை ஆண்டவன்தான்
காப்பாற்ற வேண்டும்” என்று டாக்டர்கள் கூறியதைக் கூறி “உனது மனைவியைக் காப்பாற்ற ஆண்டவனே வந்துவிட்டான்” என்று சொல்லி சில விஷயங்களைக் கூறினார் குருநாதர்.
பிறகு சிறிது விபூதியையும் எலுமிச்சம்பழமும் கொடுத்து
இதைக் கொண்டு போய் உன் மனைவிக்குக் கொடு என்று கூறினார்.
குருநாதர் கூறியபடி சாமியம்மாவிற்கு அதைக்
கொடுத்தோம். அவர்களால் அதைக் குடிக்கக் கூட முடியவில்லை. அப்பொழுது எமது மாமியார்
மனைவி சாகக் கிடக்கிறாள், எலுமிச்சைச் சாறைக் கொடுக்கிறான் என்று என்னைத்
திட்டினார்கள். மிகவும் சிரமப்பட்டு சாமியம்மா அதைக் குடித்தார்கள்.
அடுத்த நாள் பார்த்தோம் என்றால் அசைவில்லாமல் இருந்த
கைவிரல் அசைய ஆரம்பித்தது. பிறகு படிப்படியாக உடல் ஆரோக்கியம் அடைந்தது. ஒரு
மாதத்திற்குள் தானே எழுந்து அமரும் நிலை உண்டானது.
அப்போது வீட்டிலுள்ளோர் அனைவருக்கும் ஒரு நம்பிக்கை
தெரிந்தது. சாமியம்மா குணமடைந்த விபரத்தைக் குருநாதரிடம் கூறவேண்டும் என்று
விரும்பினோம்.
குருநாதரைத் தேடினோம்.
அவரை எங்கேயும் பார்க்க முடியவில்லை.
ஆனால், அதற்கு முன் தினமும் ரோட்டில் சத்தம் போட்டுக்
கொண்டு வருவார், மின் கம்பத்தைத் தட்டுவார். ஆனால், அந்த ஒரு மாதமாக அவரைக் காணவே
முடியவில்லை.
அப்பொழுது யாம் வசிக்கும் தெருவில் எப்படியும் இந்தப்
பக்கம்தான் குருநாதர் இருப்பார் என்று எண்ணிக் கொண்டிருந்தோம்.
அது சமயம் குருநாதர் எமக்குப் பின்னால் நின்று என்
முதுகைத் தட்டி “என்னைத் தேடினாயா..?” என்று கேட்டார்.
“ஆமாம் சாமி” என்றோம்.
“என்னை நீ நம்புகிறாய் அல்லவா” என்று கேட்டார்.
யாமும் “உங்களை நம்புகிறோம்” என்று கூறினோம்.
“நான் சொல்வதை நீ கேட்பாய் அல்லவா..? என்று கேட்டார்.
“கேட்பேன்” என்று கூறினோம்.
“மாற மாட்டாயே..,” என்பதுதான்
அவருடைய வாக்கு.
அதன் பிறகு காடு மேடெல்லாம் குருநாதர் எம்மை அலையச்
செய்து மூன்றரை இலட்சம் பேரைச் சந்திக்கச் செய்து பல அனுபவங்களைப் பெறும்படி
செய்தார்.
இயற்கையின் செயலாக்கங்களையும், பல பேருண்மைகளையும்,
ஞானிகள் கண்ட நிலைகளையும் நேரடியாக உணர்த்தி அந்த ஆற்றல்களை எம்மைப் பெறும்படி
செய்தார்.
இந்த உடலுக்குப் பின் நாம் எங்கே செல்ல வேண்டும் என்று உணர்த்தினார். அப்படி
அவர் காட்டிய அருள் வழியில் கண்டுணர்ந்த பேருண்மைகளைத்தான் யாம் சொல்லி வருகிறோம்.