ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

May 22, 2015

அகஸ்தியர் அருளிய விநாயகர் தத்துவத்தின் மூலக்கூறு

தாய் தந்தையர்கள் நம்மை வளர்ப்பதற்காக நாம் குழந்தைப் பருவமாக இருக்கும் பொழுது எத்தனையோ நிலைகளில் இரவும் பகலும் நமக்காக விழித்திருப்பார்கள்.

நாம் வேதனையால் அழுவோம், எத்தனையோ வகையான செயல்களைச் செய்வோம். பொதுவாக, குழந்தையாக இருக்கும்பொழுது நெருப்பு என்றும் தெரியாது. இது அசிங்கமான பொருள் என்றும் தெரியாது.

நாம் நெருப்பென்றால் சுடும் என்று தெரியாத நிலையில் இருக்கும் பொழுது நாம் நகர்ந்து சென்று மகிழ்ச்சியுடன் நெருப்பைத் தொட முயற்சிக்கின்றோம். சூடான பொருள்களை நம்மை அறியாமல் தொட முயற்சிப்போம்.

அப்பொழுது தாய் குழந்தையைக் கண்ணுற்றுப் பார்க்கப்படும் பொழுது 'ஆ..,' என்ற வேகத்துடிப்புடன் வேதனைப்பட்டு இதைத் தொட்டான் என்றால்
அவனுடைய கதி என்ன ஆகும் என்று பதறி பதைத்து
அந்த உணர்வினைச் சுவாசித்து
நம்மைக் காத்திடும் உணர்வின் வேகமாக அது இயங்கி
நம்மைக் காத்துவிடுகின்றது.

உதாரணமாக செம்பும் பித்தளையும் வைத்து நாம் தங்கத்தினை ஒரு நகையாகச் செய்ய அதை உபயோகப்படுத்தி நகையாகச் செய்து அழகுபடுத்துகின்றோம்.

இதைப்போல, தன் குழந்தையை வளர்த்திட அவனை அழகுள்ளவனாக, ஞானியாக வளர்ந்திட தன் உணர்வின் ஆற்றலால் குழந்தைக்குத் துயரம் ஏற்பட்டுவிடுமே என்று ஏக்கமாக சுவாசித்தபின் அந்த உணர்வின் அலைகள் துரிதமாக இயக்கப்பட்டு அவனைக் காத்துவிடுகின்றது.

ஆனால், தங்கத்திற்குள் செம்பும் வெள்ளியும் இணைந்தது போல இந்த நல்ல உணர்வுக்குள் வேதனையும் பதட்டமும் குழந்தை அவன் எப்படியெல்லாம் துன்பப்பட்டுவிடுவான் என்ற துயர உணர்வுகளினுடைய நிலைகள் அது கலந்தே எண்ணங்கள் வளர்ந்து விடுகின்றன.

ஒரு ஜீவ இயக்கத்திற்குள் கசப்பினைக் கலந்து கொண்டால் அது நம் உடலிலே வரப்படும் பொழுது நல்ல உணர்வுகளை நாம் எண்ண விடாதபடி நோயாக விளையும்.

அடுத்து பையனை எண்ணும் பொழுதெல்லாம், ஐயோ நெருப்பில் பட்டுவிடுவானே.., இப்படி ஆகிவிடுமே..,” என்ற வேதனையை அடிக்கடி எண்ணும்பொழுது அது தாயின் உடலில் நோயாக விளைந்து விடுகின்றது.

இவ்வாறு நம்மை வளர்த்திட அந்தத் தாய் தன் குழந்தையைக் காத்திட இதேபோல அவசர உணர்வால் தனக்குள் எடுத்துக் கொண்ட நிலைகள் புழுவிலிருந்து மனிதனாகத் தெளிந்துணர்ந்து தெளிந்திடும் ஆற்றல் பெற்ற தாயின் உணர்வுகள்
நம்மால் வேதனைப்படும் உணர்வுகள் கலந்து,
உடலுக்குள் நோயாக இருந்து
அந்த உடலின் குறுகும் நிலைகளிலிருந்து
காத்திடும் நிலையைக் காட்டியுள்ளார்கள் அன்றைய ஞானிகள்.

மகரிஷிகளின் அருள்சக்தி நாங்கள் பெறவேண்டும். எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும். எங்கள் உடலிலுள்ள ஜீவாத்மா பெற வேண்டும் என்று ஏங்கி தன் உணர்வின் நிலைகளில் எண்ணிவிட்டு தாயை வணங்கச் சொல்லுகின்றார்கள்.

என் இளம் பருவத்தில் என்னைக் காத்திட வேதனை கொண்டு எத்தனையோ உணர்வுகளைச் சுவாசித்து அந்த வேதனயின் உணர்வால் நோயாகி வாடிக் கொண்டிருக்கும் அந்த நிலைகளிலிருந்து என் தாய் விடுபடவேண்டும்.

மகரிஷிகளின் அருள்சக்தி என் தாய் உடல் முழுவதும் படர்ந்து பெற்று என்னால் ஏற்பட்ட வேதனைகள் நீங்கி தாயின் உள்ளம் மகிழ்ச்சி பெறவேண்டும்.

 மகரிஷிகளின் அருள் ஒளி என் தாய் தந்தையர் பெறவேண்டும் என்று தாயை எண்ணி தந்தையை எண்ணி அந்த உணர்வின் சக்தியை அங்கே ஏங்கி அவர்களுடைய அருளாசியைப் பெறும்படி செய்தார்கள் ஞானிகள்.

தாயின் உணர்வின் நிலைகள் கொண்டு உடல் பெற்றவர்கள் நாம். ஆனால் அதே சமயம் தன்னைக்காத்திட தாய் வேதனைப்பட்ட உணர்வுகள் எடுத்து நோயானாலும் அந்த வேதனை கொண்ட குரல் கொண்டுமகனே! இப்படி இருக்கின்றது, இதைச் செய்" என்ற வேதனையுடன் தான் சொல்லின் நிலைகள் வலுவிழந்து சொல்லும்போது அதே வேதனை நம் உடலுக்குள் பட்டபின் தாயின் வேதனையான உணர்வும் நம்மையறியாமல் நமக்குள் வந்துவிடுகின்றது.

நம்முடைய வேதனையைத் துடைத்துவிட்டு தாயின் வேதனையான உணர்வுகள் நீங்க வேண்டுமென்று வானை நோக்கி ஏகி "அந்த மகரிஷிகளின் அருள் ஒளி பெற வேண்டும்" என்று ஏக்கத்தினை அங்கே கலந்து இந்த உணர்வின் தன்மை பெறவேண்டும் என்பதற்குத்தான்.
அன்னை தந்தையை எப்படி வணங்கவேண்டும் என்ற முறையினை
விநாயகர் தத்துவத்தில்
காவியமாகப் படைத்துள்ளார்கள் ஞானிகள்.

ஆனால், அத்தகைய காவியங்கள் அனைத்தும் எங்கே மறைந்தது என்று யாருக்குமே தெரியாமல் போய்விட்டது.

அருகம்புல்லை வைத்தால் விநாயகர் ஓடி ஓடி வந்து நமக்குக் காரியமெல்லாம் செய்வார் என்றும், அவருக்குக் கொழுக்கட்டை மட்டும் செய்து வைத்தால் அதற்குப் பிரியப்பட்டு நமக்கு எதேனும் செய்வான் என்றும் சொல்கிறார்கள்.

அதே சமயத்தில் விநாயகரைத் திருடிக் கொண்டு வந்து ஒரு பக்கத்திலே வைத்துப் பூஜித்தால் அவனுக்கு வேண்டிய செல்வங்களைக் கொடுப்பான் என்று நம்மைத் திருடப் பழக்கி வைத்திருக்கின்றார்கள்.

ஆனால் அந்த ஞானி சொன்ன உண்மையான நிலைகள் எது?

மகரிஷிகளின் அருள் ஒளியை நமக்குள் பெற்று அன்னை தந்தையருக்கு மகரிஷிகளின் அருள் ஒளி பெற வேண்டும். என்னால் வேதனைப்பட்ட என் தாய் தந்தையரின் வேதனைகள் நீங்க வேண்டும்.
மகரிஷிகளின் அருள் ஒளியால்
தீபச் சுடராக என் தாய் தந்தையர் மகிழ்ந்திட வேண்டும்.

தாய் தந்தையரின் மகிழ்ச்சியான எண்ணங்களை நான் பெற்று என் வாழ்க்கையும் மகிழ்ந்திருக்க வேண்டும் என்று ஏக்கத்தினை நினைத்து விநாயகரை வணங்கச் சொன்னார்கள்.

இவ்வாறு நம்மை இணைந்து வாழச் செய்தார்கள் ஞானிகள். ஆனால், இப்படி ஆழ்ந்த நிலைகளில் யாரும் வணங்கவில்லை.
 
பௌர்ணமி நாள் அன்று உடலை விட்டுப் பிரிந்து சென்ற முன்னோர்களின் உயிரான்மாக்களை எண்ணி சப்தரிஷிமண்டலத்துடன் இணைந்து ஒளி சரீரமாகப் பெறவேண்டுமென்று நாம் உந்திச் செலுத்தினோம் என்றால் அவர்களை விண் செலுத்த முடியும்.

ஏனென்றால் நம் எண்ணங்கள் கூர்மையாக அங்கே செயல்பட்டு அந்த உணர்வினை நமக்குள் வளர்த்துக் கொண்டபின் அந்த எண்ணத்தின் வலுக்கொண்டு தாய் தந்தையரை எண்ணி
உயிருடன் இருக்கும் பொழுதே
இந்த உணர்வினுடைய நிலைகளில் நாம் இணைத்து வரவேண்டும்.

அப்பொழுது, உடலைவிட்டுப் பிரிந்து சென்ற அன்னை தந்தையரை நாம் பிறவியில்லா நிலை பெறச் செய்து ஒளியின் சரீரமாக அங்கே விண்ணுலகம் செல்லச் செய்ய முடியும்.

ஆக அந்த மகா ஞானிகள் தன் உடலில் வந்த நஞ்சினை அதை நீக்கி உணர்வின் ஆற்றல் மிக்க சக்தியாக ஒளியின் சரீரமாக இருக்கின்றார்கள்.

இன்று விஞ்ஞானிகள் ஒரு அணுவைப் பிளந்து அணுவின் ஆற்றலை வளர்த்து அணுவின் துணை கொண்டு எதிரிகளை வீழ்த்திட அணுகுண்டுகளைத் தயார் செய்கின்றனர்.

அதைப்போல மகரிஷிகள் தன் உணர்வின் தன்மையை தன் உடலுக்குள் வரும் எதிரியான உணர்வுகளை விடுத்து அந்த அணுவினைப் பிளந்து ஒளியின் உணர்வாகத் தனக்குள் வளர்த்துக் கொண்டனர்.

உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரமாக விண் சென்றுள்ள அதிலிருந்து வெளிப்படும் உணர்வின் சக்தியை மனித உடல் கொண்டவர்கள் அந்த ஞானியின் தன்மையை நாம் எண்ணி அந்த உணர்வின் வலுகொண்டு சப்தரிஷிமண்டலத்துடன் அந்த உயிரான்மாக்கள் இணைய வேண்டும் என்று உந்தித் தள்ள வேண்டும். 
அப்படித் தள்ளினால் இந்த உடல் பெறும் நஞ்சான உணர்வின் எதிரிகளை வீழ்த்திவிட்டு அதற்குள் உடலை வளர்த்த உணர்வின் ஒளியான அந்த உணர்வுகள் மிஞ்சி அந்த மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் என்றும் ஒளிசரீரமாகத் திகழ்வார்கள்.

பண்டையக் காலங்களில் இவ்வாறு சென்றவர்களை முப்பத்து முக்கோடி தேவாதி தேவர்கள் – சப்தரிஷி மண்டலம் என்று சொல்வார்கள்.

சப்தரிஷி மண்டலத்தில் எண்ணிலடங்காத மனித உணர்வின் ஒளி சரீரமாக அவர்கள் இன்றும் திகழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.
ஏழு நட்சத்திரங்களைக் காட்டி அதன் மத்தியிலே
எண்ணிலடங்காத பல உயிரான்மாக்கள்
இன்றும் சுழன்று கொண்டிருக்கின்றார்கள்.