ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

May 8, 2015

அனைவரும் தெய்வீக நிலை அடைவதற்குத்தான் கோவிலைக் கட்டினார்கள் மகரிஷிகள்

தீமையான உணர்வுகளைப் பிளக்கும் சக்தியை நாம் அனைவரும் பெறுவதற்காக்க் கோவிலை வைத்துள்ளார்கள் ஞானிகள். ஆனால், நாம் கோவிலில் என்ன செய்கிறோம்?

சிலையைப் பார்த்தவுடன், “எனக்கு இப்படிக் கஷ்டமாக இருக்கின்றதே.., நான் உன்னையே வணங்குகின்றேனே” என்று எண்ணுகிறோம்.

யார் யாரெல்லாம் நமக்குத் தீங்கு செய்தார்களோ அவர்களை எல்லாம் எண்ணுகிறோம்.

தொழில் செய்யும்போது கொடுத்தவர்கள் பணத்தைத் திரும்பக் கொடுக்கவில்லை என்றால், அவர்களுக்கெல்லாம் நான் நன்மை செய்தேனே, எனக்கு இப்படிச் செய்கின்றார்களே என்று வேதனைப்படுகிறோம்.
இப்படி எண்ணும் பொழுது
நம் நினைவு தீங்கு செய்வோர் மேல்தான் செல்கிறது.

கோவிலில் நம் முன் காட்டப்பட்டுள்ள சிலையைப் பார்க்கும்பொழுது அதிலே மறைத்துக் காட்டப்பட்ட காவியப் படைப்பு - தீமைகளை அகற்றும் நிலைகள்.
அதை நுகர்ந்தால் நாம் தெய்வமாகலாம்.
அதை நாம் நுகர்வது இல்லை.

சாமிக்கு சந்தன அபிஷேகம் செய்கிறார்கள் என்றால் அந்தச் சந்தனத்தின் நறுமணம் நாங்கள் பெறவேண்டும் என்று எண்ணுவதில்லை.

சாமி மீது மலர் மாலைகள் போட்டிருக்கின்றதென்றால் அந்த மலரின் நறுமணம் நாங்கள் பெறவேண்டும் என்று எண்ணுவதில்லை.

சாமிக்கு பூவைப் போட்டு அலங்கரித்து அபிஷேகம் செய்யும் போது நமக்குள் இருக்கும் கஷ்டமெல்லாம் கிளர்ந்தெழுகிறது. ரோஜாப்பூ பக்கம் அந்த நறுமணம் இருக்கும் பொழுது தீமையான உணர்வுகளை அது பக்கத்தில் வர விடுவதில்லை.

அதுபோல தீமையான உணர்வுகள் நம் ஆன்மாவில் இருக்கும் பொழுது நல்ல மணங்களைக் காட்டினால் அது நமக்கு எதிர்நிலையாகும். நம் கண்களில் கண்ணீர் வரும். எதிர்மறையான உணர்வுகள் மோதியவுடனே கண்களில் கண்ணீர்தான் வரும்.

இப்படியெல்லாம் நாம் எண்ணும்பொழுது இடைஞ்சல் செய்தவர்களுடைய உணர்வுகள் முன்னனியில் நின்று சிலையிலிருந்து வருவதைத் தடைப்படுத்தும்.

காரணம் அந்தத் தீமையான உணர்வுகள் நம் ஆன்மாவிற்கு வந்து சுவாசிக்கும் பொழுது அந்த உணர்வே கண்களுக்கு வருகின்றது.
ஆன்மாவிலே பட்டதுதான் உயிரிலே பட்டு ஐந்து புலனறிவாகிறது.
உணர்வுக்கும் சரி,
கண்ணுக்கும் சரி,
சொல்லுக்கும் சரி,
வாசனைக்கும் சரி நல்ல வாசனையை எடுக்கவிடாது.

ஆகவே, ஞானிகள் காட்டிய முறைப்படி யாருமே தெய்வத்தை வணங்குவதில்லை. அந்தத் தெய்வ குணத்தைப் பெறவேண்டும். தெய்வமாக ஆகவேண்டும் என்று யாருமே எண்ணுவதில்லை.

ஞானிகள் சாதாரண மக்களுக்குக் கிடைக்க வேண்டும் என்று இதையெல்லாம் சொன்னார்கள். அரசர்கள் ஒரு வகையில் மதங்களை உருவாக்கி மதத்திற்கு ஒரு தெய்வம், மதத்திற்கு ஒரு கடவுளை உருவாக்கினாலும் ஞானிகள் தன்னை உணர்ந்தவர்கள்.

தன் இன மக்களுக்குக் கிடைக்க வேண்டும் என்று காவியங்களைப் படைத்துக் கொடுத்திருக்கிறார்கள். வழிபடும் முறையும் சொல்லியிருக்கிறார்கள் அதை யாரும் கோவிலில் போய் அப்படிச் செய்வதில்லை.

இரண்டு பேர் சண்டை போடுகிறார்கள் என்றால் அவர்கள் சொல்லைக் கேட்கும் பொழுது நமக்குள் பதிவாகின்றது. இந்தப் பதிவின் நிலைகள் வரும் பொழுது எண்ணங்களானவுடனே ஆன்மாவாக மாறுகின்றது.

சுவாசித்தவுடன் உயிரில் பட்டு இயக்குகின்றது. அப்படி நம் ஆன்மாவில் காற்றிலே இருக்கும் உணர்வின் தன்மை எதை நாம் நினைவிற்குக் கொண்டு வருகின்றோமோ இது வந்தவுடனே நல்ல எண்ணங்களுக்கு உணவு இல்லாதபடி தடைப்படுத்துகின்றது.

இந்தத் தீமைகளை வென்றவர்கள் யார்? சந்தோஷத்தை ஊட்டியவர்கள் யார்? அந்த மகரிஷிகள்தான்.

தீமைகளைப் பிளக்க அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை  நம் உயிர் வழியாக உள்முகமாகச் செலுத்தித்தான் பிளக்க வேண்டும். நம் உயிரிடம் வேண்டி இந்த உணர்வைப் பதிவு செய்யவேண்டும்.

அந்தத் துருவ மகரிஷியின் அருள் சக்தியை, நாங்கள் பெற வேண்டும். எங்கள் உடல் முழுவதும் படரவேண்டும் என்ற நினைவை, புருவ மத்தியில் செலுத்திப் பழக வேண்டும்.

ஆகவே, அந்த மகரிஷிகளின் அருள் உணர்வை நாம் எண்ணும் பொழுது, நமக்குள் அந்த ஆகாரத்தைக் கொடுத்தவுடனே, வலுப் பெறச் செய்கின்றது. தீமைகளை மாற்றி ஒளியின் உணர்வாக மாற்றுகின்றது.

படிக்காதவர்களும் பார்த்தவுடன் தீமைகளை நீக்கி மனமகிழ்ச்சியுடன் வாழ்ந்து மகரிஷிகளின் அருள் சக்தியை ஒவ்வொருவரும் பெற்று தெய்வீக நிலை அடைவதற்குத்தான் கோவிலைக் கட்டினார்கள் மகரிஷிகள்.