ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

May 16, 2015

கல்யாண வீடுகளில் திருப்பூட்டும் முன் விநாயகரை வணங்கச் செல்வதன் ஐதீகம் என்ன...?

திருமணக் காலங்களில் திருப்பூட்டும்போது விநாயகரை வணங்கச் செல்வதன் தத்துவம் என்ன?

திருமணமாகும் பொழுது இப்பொழுது நாம் என்ன செய்கின்றோம்?

விநாயகரிடம் மேள தாளத்துடன் பத்துப் பேர் போய் அங்கே “மாலையைப் போட்டு கும்பிட்டு வந்து இங்கே திருப்பூட்டு” என்று தான் சொல்கின்றார்கள்.

யாகத் தீயை மூட்டி திருப்பூட்டிய பின் இருவரையும் “அம்மி மிதித்து அருந்ததியைப் பார்” என்று வெறுமனே சொல்லால் சொல்வார்கள்.

அம்மியும் கல்லும் எப்படி இரண்டும் ஒன்றாக இணைந்து அரைக்கின்றதோ,
ஒன்று சேர்ந்து வரும்பொழுது தான் அரைக்கும்
மேடுபள்ளம் ஆகிவிட்டால் அதில் வைக்கும் சரக்கு
சரியாக இணைந்து அரைக்காது என்ற நிலைகளை
இப்படித்தான் நினைக்கின்றார்கள்.

ஆனால், அந்த ஞானிகளின் அருள்சக்தியைப் பெறவேண்டும் என்ற உணர்வுகளை யாரும் உந்தவே இல்லை, யாரும் சொல்லவும் இல்லை.

துருவ நட்சத்திரத்தை எண்ணி இதன் அடிப்படையில் விண் சென்றவர்கள் தான் வசிஷ்டரும் அருந்ததியும். ஆகவே அவர்கள் இன்றும் ஒளி சரீரமாக இருந்து என்றும் பதினாறாக வாழ்ந்து கொண்டுள்ளார்கள்.

திருமணமாகும் அந்த மணமக்கள் விநாயகர் கோவிலுக்குச் சென்று, அங்கே அகஸ்தியர் காட்டிய வழிகளில் வணங்கி நல்ல வினைகளைச் சேர்க்க வேண்டும்.

அதாவது வசிஷ்டரும் அருந்ததியும் இரு மனமும் ஒரு மனதாக ஒன்று சேர்ந்து இந்த மனித நிலைகளில் வாழ்ந்து இரு உணர்வும் ஒன்றாகி தீய வினைகளையெல்லாம் நீக்கி உணர்வின் எண்ணங்களை ஒளியாக்கி விண் சென்றனர்.

வசிஷ்டரும் அருந்ததியும் போல அந்த மகரிஷிகளின் உணர்வலைகளை நாங்கள் இருவரும் பெறவேண்டும் என்று மணமக்கள் இருவரும் சேர்ந்து எண்ண வேண்டும்.

வசிஷ்டரும் அருந்ததியும் ஒன்றி வாழ்ந்தது போல நாங்கள் இருவரும் ஒன்றிணைந்து வாழவேண்டும் என்று எண்ண வேண்டும்.

எங்கள் வாழ்க்கையில் அறியாது சேர்ந்த இருள்கள் நீங்கி ஒளியின் உணர்வாக எங்கள் வாழ்க்கையில் மகிழ்ந்து வாழ்ந்திடும் அந்த சக்தி பெறவேண்டும் என்று எண்ண வேண்டும்.

இருவரும் இந்த விநாயகரை எண்ணி வானை நோக்கி நினைவைச் செலுத்தி அந்த மகரிஷிகளின் அருள்சக்தியை தன் உணர்வால் ஏங்கிச் சுவாசித்து
அந்த உணர்வின் தன்மையை தன் உடலுக்குள் செலுத்தி
அந்த வினையைத் தனக்குள் சேர்த்துக் கொள்வதற்குத்தான்
விநாயகர் கோவிலுக்கு அழைத்துச் சென்றார்கள்.

நாம் முதலிலே இந்த வினையின் தன்மையை விண்ணை நோக்கி ஏங்கிச் சுவாசித்து அந்த உணர்வின் ஆற்றலை நமக்குள் வினையாகச் சேர்த்து இங்கே திருப்பூட்ட வர வேண்டும்.

ஆக வசிஷ்டரும் அருந்ததியும் வாழ்ந்தது போல நாமும் இந்த வாழ்க்கையில் நம்மையறியாது வந்த இருள்களை நீக்கி மெய் ஒளியின் உணர்வாகப் பெற வேண்டும் என்று திருப்பூட்டு காலங்களில் இப்படி எண்ணச் செய்தார்கள் ஞானியர்கள்.