ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

May 10, 2015

நஞ்சை ஒடுக்க குருநாதர் காட்டிய ஆற்றல்மிக்க வலுவான சக்தி

இன்று ஒரு செடியில் பூச்சி வராதபடி தடுப்பதற்காக விஷத்தன்மையான மருந்துகளை அந்தச் செடிகளின் மேல் தெளிக்கப்படும் பொழுது பூச்சிகள் அதன் மேல் உட்கார்வதில்லை.

POLYDOL ஐத் (பூச்சி மருந்து) தயார் செய்வதற்காக ஒரு செடியை விஞ்ஞான அறிவால் அதற்குள் பல செடிகளை இணைத்து அந்தப் பூக்களை எடுத்து அதைப் போன்ற பல விஷமான மருந்துகளைத் தயாரிப்பதற்காக கிராமப்புறங்களில் கொடுத்திருப்பார்கள்.

அப்படி விளைய வைத்த அந்த நிலத்திலே வேறு செடிகள் போட்டாலும் முளைக்காது. அதே சமயத்தில்
புற்கள் அதிலே விளைந்தாலும்
அதை மாடுகள் சாப்பிட்டாலும் அதற்கும் நோய் வரும்.

உதாரணமாக ஒரு குடம் நிறைய பால் இருந்தாலும் அதில் ஒரு துளி விஷம் பட்டால் அந்த விஷம் குடத்திலுள்ள பால் முழுவதையும் விஷமாக்கிவிடுகின்றது. ஒரு துளி பாலை நாம் விழுங்கினாலும் நம்மை மயங்கச் செய்கிறது.

ஆனால், ஒரு துளி விஷத்தை மாற்ற 1000 குடம் பாலை அதிலே ஊற்றினால்
அந்த விஷத்தின் தன்மை குறைந்து
அந்தப் பாலுக்கு எவ்வளவு வீரிய சக்தி கொடுக்கிறது
என்று காட்டுகிறார் குருநாதர்.

அதே சமயம் குருநாதர் சும்மா இல்லை. விஷத்தையும் என்னிடம் கொடுக்கிறார் குடிக்கச் சொல்கிறார்.

“சாமி.., இது விஷம்.., நாம் புள்ளை குட்டிக்காரன்” என்று சொல்கிறேன்.

நான் சொல்வதைச் செய்கிறேன் என்று சொன்னாய் அல்லவா. “இதைச் செய்’ என்கிறார் குருநாதர்.

அதைக் குடிக்கப்படும் பொழுது அந்த விஷத்தின் அணுக்கள் எனக்குள் எவ்வாறு சேர்கின்றது? அந்த விஷத்தை எவ்வாறு முறிக்க வேண்டும்?

அதை முறிப்பதற்காக
காற்றில் இருக்கக்கூடிய சக்திகளை
விஷத்தை முறித்த அந்த மகரிஷிகளின் உணர்வுகளை நீ நுகரு.

அதை நுகர நுகர விஷம் குறைகின்றது.

அப்பொழுது அந்த நுகர்ந்த நிலைகள் விஷத்தை ஒடுக்கிடும் அருள் மகரிஷிகளின் உணர்வுடன் ஒன்றி நாம் எண்ணத்தால் எப்படி விஷத்தை ஒடுக்க முடிகின்றது என்ற நிலை வருகின்றது.

அப்பொழுது ஒரு பாம்பு வருகிறது.. அதைவிட்டு என்னைக் கொத்த வைக்கின்றார். பாம்பைக் கொண்டு கொத்த வைக்கும் பொழுது அந்த விஷத்தின் தன்மை இதனுடைய விஷத்தை முறிக்கின்றது.

அதைக் கடிக்கச் செய்து இந்த விஷத்தின் தன்மையை எவ்வாறு முறிக்க வேண்டும் என்ற நிலையையும் உணர்த்துகின்றார்.

இப்பொழுது உன்னை இந்தப் பாம்பு தீண்டிவிட்டால் அடுத்து அதனின் நினைவு கொண்டு நீ பாம்பாகத்தான் பிறப்பாய். ஏனென்றால் அதனின் நினைவின் ஆற்றல் அதிகரிக்கின்றது.

அதனின் நஞ்சின் தன்மை உன் உணர்வுக்குள் கலக்கின்றது. அடுத்து உன்னுடைய பிறவி அதுதான். உன் உயிரான்மா சென்றபின் அதனின் ஈர்ப்புக்குள் சென்று நீ அதுவாகத்தான் பிறப்பாய் என்கிறார் குருநாதர்.

அப்பொழுது அதிலிருந்து மீளும் வழியாக தியானத்தைக் காட்டி அதன் மூலமாக நுகரவைக்கின்றார். தியானத்தின் மூலம் அவர் காட்டிய உணர்வை நுகர நுகர
எனக்குள் அது சேர்ந்து விஷம் தணியும் நிலையும்
மாறும் நிலையும் வருகிறது.

தியானத்தின் மூலம் எனக்குள் மாறும் பொழுது எப்படி அந்த விஷத்தின் தன்மை ஒடுங்கி
இந்த எண்ணத்திற்கு வலுவும்
திடகாத்திரமான ஒரு சக்தி
உனக்குள் கிடைக்கின்றது என்று உணர்த்துகின்றார் குருநாதர்.

உணர்த்தியபின், அதன் வழியில் சென்றாலும் இந்த தியானத்தை அடிக்கடி நீ செய்து கொண்டே வரவேண்டும் என்று எனக்குத் தெளிவான நிலையில் அனுபவபூர்வமாகக் காட்டினார் குரு.

அவர் எனக்குக் கொடுத்த அந்த சக்தியைத்தான் யாம் உங்களுக்கு ஆத்ம சுத்தி என்று கொடுக்கிறோம்.

ஆத்ம சுத்தி செய்து அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை நீங்கள் எடுக்க வேண்டும். அதை உங்கள் உடலில் உள்ள எல்லா உறுப்புகளிலும் பாய்ச்சி எல்லா அணுக்களுக்கும் உணவாகக் கொடுக்க வேண்டும்.

வாழ்க்கையில் ஒவ்வொரு உணர்வுகளும் வந்து தாக்கும் பொழுது அதை இந்த முறைப்படி ஆத்ம சுத்தி செய்து உங்களுக்குள் அந்த தீமை செய்யும் உணர்வுகளைக் குறைக்க முடியும்.

உங்களை நீங்கள் நம்புங்கள்.