ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

May 26, 2015

துருவத்தின் வழியாக வரும் துருவ நட்சத்திரத்தின் ஆற்றலைச் சுவாசிப்பதே துருவ தியானம்

அகஸ்தியன் துருவத்தை நுகர்ந்தறிந்தனால் துருவ நட்சத்திரமானான். இன்று நம் பூமிக்கு வருவதனைத்தையும்
அகஸ்தியனும் அவன் மனைவியும் ஒளிச்சுடராக மாற்றி,
ஒளியின் சுடராக உருவாக்கிக் கொண்டே உள்ளார்கள்.

துருவ நட்சத்திரம் தன் இனப் பெருக்கத்தை ஒளிச் சுடராக மாற்றி இன்றும் நமது பூமியில் பரவிக் கொண்டுள்ளது.

அந்தத் துருவப் பகுதியில் இருந்து வரும் அந்தச் சக்தியை நாம் பருகும் நிலைக்குத்தான் இந்த உபதேசமே.

அவர்கள் இருவரும் நஞ்சினை வென்று இந்த உடலிலேயே ஒளி அதாவது ஒளியாக மாற்றும் உணர்வுகள் பெற்றார்கள்.

அதை நாம் நுகர்ந்தோமென்றால் இந்த வாழ்க்கையில் நம்மையறியாது எத்தனையோ விஷத்தன்மைகள் நாம் நுகர நேர்ந்து விஷ அணுக்கள் நமக்குள் உருவாகி
இந்த மனிதனின் உடலைக் கரையச் செய்யும்
அல்லது மாற்றி அமைக்கும் நிலைகளிலிருந்து நாம் தப்ப முடியும்.

எப்படி வராகன், தீமைகளை வென்றிடும் உணர்வு பெற்று மனிதனாக உருவாக்கியதோ, இதைப் போல மனிதனான பின் தீமையை வென்றிடும் அந்த உணர்வின் எண்ணம் கொண்டு நாம் அந்த்த் தீமையை வென்றிட்ட அருள் மகரிஷியின் உணர்வை நாம் நுகரவேண்டும்.

துருவ மகரிஷியின் ஆற்றலை நாம் பெற்று விட்டால் நமக்குள் அதை உருவாக்கி நம் உடலிலே வளர்த்துக் கொண்டபின், இந்த உடலை விட்டு நாம் செல்லும்போது இந்தப் புவியின் பிடிப்பை அகற்றி விட்டு விண் உலகில் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் சுழன்று கொண்டிருக்கும் ஏழாவது நிலைகள் கொண்ட சப்தரிஷி மண்டலத்துடன் நாம் ஐக்கியமாக முடியும்.

இன்று சூரியனின் காந்த சக்தி துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் உணர்வலைகளைக் கவர்ந்து துருவப்பகுதியின் வழியாக நம் பூமிக்குள் பரவச்செய்து கொண்டிருக்கின்றது.

நமது குருநாதர் எந்தத் தருணத்தில் எனக்குள் அதை உபதேசித்து அந்த உணர்வைக் கவரும்படி செய்தாரோ அதைப் போல் இப்பொழுது உங்களுக்குள் அந்த துருவ மகரிஷி துருவ நட்சத்திரமானபின் அதிலிருந்து வெளிப்படும் உணர்வை சூரியன் காந்த சக்தி கவர்ந்த அலைகளாக மாற்றி,
நம் பூமிக்கு வந்து கொண்டிருக்கும் இந்த நேரத்தில்
அந்த அருள் ஞானியின் உணர்வை
உங்களுக்குள் அந்த உணர்ச்சியைத் தூண்டச்செய்து
செவி வழி இந்த உணர்வின் தன்மை உணர்ச்சிகளை ஊட்டி,
உங்கள்  நினைவின் ஆற்றலைக் கவரும்
கண்களால் ஈர்க்கச் செய்வதும்,
இப்போது யாம் உபதேசிக்கும் இந்த நேரத்தில்
உங்கள் நினைவுகள் உணர்வுகள் அனைத்தும்
துருவப் பகுதியில் துருவ நட்சத்திரத்தின் நினைவுடன்
உங்கள் எண்ணங்களைச் செலுத்தச் செய்வதும்
இந்த உணர்வுகளைத் தூண்டச்செய்வதும்
அதை உங்கள் கண்களில் நினைவாக்கப்படும்போது
கண்களின் கருவிழி அந்த நினைவின் ஆற்றலை
உங்கள் உடலுக்குள் இருக்கும்
ஊனுக்குள் துருவநட்சத்திரத்தின் உணர்வைப் பதிவாக்குகின்றது.


பதிவாகும் இதே உணர்வின் தன்மையை விண்ணை நோக்கி நீங்கள் ஏகும்போது உங்கள் கண்ணுடன் சேர்ந்த காந்தப் புலன்கள் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து நம் பூமிக்கு வரும் துருவ மகரிஷியின் உணர்வுகளைக் கவர்ந்து உயிரின் தன்மை கொண்டு உயிர் வழியாக உங்களை சுவாசிக்கச் செய்து நஞ்சினை வென்றிடும் உணர்வின் அணுக்களாக உங்களுக்குள் அது உருவாக்கச் செய்வதற்கே இந்தத் துருவ தியானம்.

ஏனென்றால், எமது குருநாதர் இத்தருணத்தில் தியானிக்கும்படி எமக்குள் எப்படி உருவாக்கினாரோ, அதே போன்று உங்களுக்குள்ளும் இது உருவாக்கப்பட்டு அந்தச் சக்திகளை நீங்களும் பெறுவதற்குத்தான் இந்தத் துருவ தியானத்தை அமைத்திருக்கிறோம்.