ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

June 4, 2013

இறைவன், தெய்வம், கடவுள், குரு இவர்களைப் பற்றி மெய்ஞானிகள் உணர்த்தும் உண்மை நிலை

1. கடவுள் என்ற தனித்த நிலை, இயற்கையில் எதுவும் இல்லை
ஒவ்வொரு நட்சத்திரமும் ஒவ்வொரு குணம் கொண்டது. இருபத்தியேழு நட்சத்திரங்களும் இருபத்தியேழு விதமான குணங்களைக் கொண்டது, இருபத்தியேழு நிறங்களைக் கொண்டது. அதைத் தனக்குள் எடுத்துக் கொண்டோமென்றால் அதன் நிறமாக மாற்றிவிடும்.

இவ்வாறு நட்சத்திரத்திலிருந்து அழுத்தத்தில் பரவி வருவதை, சுழன்று வரும் பொழுது தூசியாக வருவதை, நமது சூரியன் தனக்குள் உணவாக இழுக்கும். அது உணவாக இழுத்து வரும் பொழுது இதனை இடைமறித்து, கோள்கள் தனது உணவாக எடுக்கும்.

நாம் கண்களால் பிறிதொருவரைப் பார்த்து நுகரும் உணர்வுகள்,
நமது ஆன்மாவில் வந்து சேர்ந்து விடுகின்றது.
இந்த உணர்வுகளை நுகர்ந்தபின்,
நமக்குள் எண்ணங்களாக மாறுகின்றது.

இந்த எண்ணத்தின் உணர்ச்சிகள் கொண்டு உடலுக்குள் சென்று உடலுக்குள் சென்று, இதே உணர்வின் தன்மை கொண்டு இந்த உணர்வுகள் உறுப்புகளாக மாறுகின்றது நுரையீரல், கல்லீரல், கிட்னி என்ற இதைப் போன்ற பலவிதமான உறுப்புகள் மாறுகின்றது.

இதைப் போன்றுதான், சூரியன் நடுமையமாக இருக்கும் பொழுது, அது பிற மண்டலங்களிலிருந்து கவர்ந்து வருவதை,
ஒவ்வொரு கோளும் இடைமறித்து,
தனக்குள் எடுத்து, சமைத்து வெளிப்படுத்தி,
பல கலவைகளாக மாற்றுகின்றது.

நட்சத்திரங்களிலிருந்து தூசிகளாகப் படர்ந்து வருபவைகள் ஒவ்வொன்றும் மற்ற நட்சத்திரங்களிலிருந்து வருபவைகளிலிருந்து வித்தியாசம் கொண்டது.

உதாரணமாக, ஒரு ஜெனரேட்டரில் உற்பத்தியாகும் மின்சாரமும்,
இன்னொரு ஜெனரேட்டரில் உற்பத்தியாகும் மின்சாரமும்,
ஒன்றோடொன்று மோதினால், அது பொறியாகி இரும்பையே உருக்கிவிடும்.

இதைப் போன்றுதான், சுழற்சியின் வேகத்தில் ஈர்க்கும் காந்தம் தூசிக்குள் காந்தப் புலனறிவாக மாறுகின்றது. அதனின் சுழலின் வேகத்தில் அதனின் அழுத்தமும், அதற்குள் இயக்கச் சக்தியின் ஈர்ப்பும், ஒளிக்கற்றைகளாக மாற்றும் தன்மையும் உருவாகின்றது.

தூசிகளாகப் படரப்பட்டு, அதை நமது சூரியன் கவர்ந்து வரப்படும் பொழுது, இரண்டு நட்சத்திரங்களின் நிலைகள் மோதினால் மின்னல் பாய்கின்றது. இதைப் பார்க்கலாம்.
இது போன்று ஒன்றோடொன்று மோதி மின்னலாகி, பல திசைகளுக்கும் பரவி வேகமாக ஓடுகின்றன. இப்படி ஒளிக்கற்றைகள் பரவி, மற்றொன்றில் இணைந்து, அதன் உணர்வின் தன்மை கலவையாகின்றது.

உதாரணமாக, வெண்மையாக இருக்கும் ஒரு பொருளில், நீல நிறத்தையும், மஞ்சள் நிறத்தையும் கலந்தால், அந்த வெண்மை நிறம் காப்பி நிறமாகின்றது.

இதைப் போன்றுதான், பல கலவைகளாகக் கலந்து, பல வண்ணங்களின் நிலையாக மாற்றப்பட்டு, உணர்வின் அணுக்களும் அதனின் உணர்ச்சிகளும் பல திசைகளிலும் ஓடுகின்றன

இவையெல்லாம் இயற்கையின் செயல் நிலைகள். கடவுள் என்ற நிலையில் தனியாக எதுவும் இல்லை.
2. இறைவன், தெய்வம், கடவுள், குரு இவர்களைப் பற்றி மெய்ஞானிகள் உணர்த்தும் உண்மை நிலை
வெப்பம், காந்தம், விஷம் என்ற இந்த மூன்று நிலைகள்தான் ஒன்றைத் தனக்குள் கவர்ந்து, மற்றொன்றோடு இணைக்கப்படும் பொழுது உணர்வுகள் மாற்றமடைகின்றது.
மெய்ஞானிகள் கண்டுணர்ந்த இந்த மெய் உணர்வை
நாமும் தெரிந்து கொள்தல் வேண்டும்.

உணர்வின் தன்மை எதனுள் கவர்ந்து கொண்டதோ, வெப்பம், காந்தம், விஷம் இவை மூன்றும் ஒன்றுக்குள் இணைத்து, மற்றொன்றை எதிர்க்கும் நிலையில்தான் மோதலில் வெப்பமாகி, இரண்டறக் கலந்து ஒரு இயக்கச் சக்தியாக மாறுகின்றது என்பதை நாம் அறிந்து கொள்ளலாம்.

நம்முள் இருக்கும் உயிரை ஈசனென்றும்,
இயக்கத்தைக் கடவுள் என்றும்
ஞானிகள் உரைத்தார்கள்.

அதே சமயத்தில், நுகர்ந்து உணர்ந்த உணர்வின் அணுக்கள் நம் உடலுக்குள் உயிரைப் போன்று ஜீவ அணுவாக மாறினால், அக்குணத்தின் தன்மை நமக்குள் உள்நின்று கடவுளாக இயக்குகின்றது.

உணர்வின் தன்மை இறையாகும் பொழுது இறைவன் என்றும்,
இறையின் உணர்வு செயலாகும் பொழுது தெய்வம் என்றும்,
எக்குணத்தின் தன்மை மீண்டும் செயல்படுகின்றதோ,
அக்குணத்தின் செயலாக உயிர் நம்மை வழிநடத்தும் என்பதற்காக,
“குரு” என்றும் காரணப்பெயரை வைத்தார்கள் ஞானிகள்.