ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

May 5, 2013

போகர் எதைத் திருடினார்? எதைச் செலவழித்தார்?

போகரை, திருடன், திருடன் என்று அடிக்கடி சொல்லிக்கொண்டே இருப்பார் குருநாதர்.

என்ன சாமி, அவர் (பழனி) கோயிலிலே நாம் இருந்து கொண்டிருக்கிறோம். அவர் இவ்வளவு பெரிய செயல்களைச் செய்திருக்கிறாரேஅப்பொழுது எமக்கு அதிக விளக்கம் தெரியாததால், குருநாதரிடம் யாம் கேட்டோம்.

உனக்குத் தெரியாதுடா., பக்காத் திருடன்அவன் என்பார் குருநாதர். அப்புறம்தான் திருடன் என்ற சொல்லுக்கே வியாக்கியானம் கொடுக்கின்றார்.

ஒவ்வொரு தாவர இனத்தில் உள்ள சத்தையும் போகன் திருடி, அது என்ன நன்மை செய்யும் என்ற நிலைகளைத் தனக்குள் திருடி, அவன் செலவழிக்கத் தொடங்குகின்றான். அவன் திருடிய சொத்து, பிறருடைய நிலைகளுக்கு நன்மை செய்யப் பயன்பட்டது.

ஆக நீ எதைத் திருடப் போகிறாய்? நன்மை செய்யும் அந்த உணர்வின் தன்மையைத் திருடப் போகிறாயா? அல்லது, பிறருடைய நிலைகளில் அவர்களைக் கஷ்டப்படச் செய்து, அவர்களுடைய சுகத்தை நீ திருடப் போகிறாயா? இப்படி வினாக்கள் எழுப்பினார் குருநாதர்.

போகன் எவ்வளவு பெரிய சக்தி பெற்றாலும், அவனைத் திருடன் என்று குருநாதர் சொல்லுகின்றார். நாம் எதைத் திருட வேண்டும்? உயர்ந்த அருள் ஞானத்தைத் திருட வேண்டும். நமக்குள் தீமைகளை அடக்கும் அந்த ஞானத்தைப் பெறவேண்டும்.
அருள் ஞானம் பெறுவதற்கு,
நன்மை செய்யும் உணர்வை அங்கே போதிக்க வேண்டும்.
ஏனென்றால், திருடியதை மறுபடியும் செலவழித்துத்தானே ஆகவேண்டும்.

ஆகவே, அந்த அருள் ஞானத்தைப் பெறும் பொழுது, அதைத் திருடினால், அந்த உணர்வை எடுத்துத்தான் நம் வாழ்க்கைக்குச் செலவழிக்க முடியும்.

போகன் தன் உணர்வின் தன்மை, தனக்குள் அந்த உயர்ந்த நிலையைத் திருடினான், உயர்ந்த  நிலைகளைச் செலவழித்தான்.

அதைப் பெற்றுக் கொண்டு, அந்த மகிழ்ச்சியின் நிலைகளில் இங்கே கொடுக்கின்றார்.
அந்த மகிழ்ச்சியே மூலதனமாகின்றது.
மகிழ்ச்சியில், அவன் எதிர்காலம் வளர்க்கும் தன்மை பெறுகின்றது.

இப்படித்தான் நாம் பிறருடைய நிலைகளில், ஒவ்வொருவரையும் மகிழச் செய்யும் தன்மைகள் கொண்டு, அதிலே நாம் பேரானந்தப்படவேண்டும் அதுதான் நமக்கு அழியாச் சொத்தாக வரும்.

ஏனென்றால், எம்மைப் பக்குவப்படுத்துவதற்கு அந்த நிலையைத் தெளிவுபடுத்தினார். இப்பொழுது அவர் வழிகளில், அவர் கொடுத்த சக்திகளைப் பயன்படுத்துகிறோம்.