ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

May 16, 2013

அகஸ்தியர் குழந்தைப் பருவத்தில் பெற்ற பேராற்றல்கள்

அகஸ்தியர் தம் தாயின் வயிற்றில் சிசுவாக இருந்தபொழுது, பெற்ற பூர்வபுண்ணியத்தால், அவர் தம்முள்  விஷத்தை ஒடுக்கிடும் ஆற்றலை, கருவிலேயே பெற்றார். 

அவர் குழந்தையாகப் பூவுலகில் பிறந்தபின், திறந்தவெளியில் மல்லாந்து படுத்திருக்கும் நிலையில், சூரியனை உற்றுப்பார்க்கின்றார். சூரியனிலிருந்து வெளிப்படும் விஷத்தை நுகர்கின்றார், அது சமயம், அவைகள் அவருக்குள் அடங்குகின்றது.

நட்சத்திரங்களிலிருந்து வெளிப்படும் கதிரியக்க உணர்வுகள், ஒன்றுடன் ஒன்று மோதும்பொழுது மின்னல்களாக, மின் கதிர்களாக புவியில் பரவுகின்றது. அதனில் கலந்து வரும் விஷத்தை, அகஸ்தியர் நுகர்கின்றார். அதுவும் அவருக்குள் அடங்குகின்றது.

இப்படி,  தமது குழந்தைப்பருவத்தில்
கண்ணால் பார்த்து நுகர்ந்த உணர்வுகள்,
அகஸ்தியருக்குள் நஞ்சினை வென்றிடும்
உணர்வின் ஒளிக்கதிர்களாக மாறுகின்றது. 

மின்னல் எப்படிப் பல நிலைகளிலும் ஊடுருவிச் சென்று தாக்குகின்றதோ, அதே போன்று அகஸ்தியருடைய நினைவாற்றலும், விண்ணில் பரவும் தன்மையினைப் பெறுகின்றது.

ஆகவே, அகஸ்தியர் ஒளிக்கதிரில் நுண்ணிய அலைகளைப் பார்க்கக்கூடிய ஆற்றலைப் பெற்றார்.

தாயின் கருவில் சிசுவாக இருந்தபொழுது, விஷத்தை வெல்லும் ஆற்றலைப் பெற்ற அகஸ்தியர், உணர்வின் அணுக்களின் உண்மையினைக் காணும் திறன் பெற்றார். இதனின் பேருண்மைகளை அறிந்த அகஸ்தியர், தமக்குள் அதை உருவாக்கினார்.
ஏதுமறியாத பாலபருவமாக அகஸ்தியர் இருந்தாலும்,
இதனின் உணர்வின் இயக்கம்,
அவருள் ஞானமாக வளரத் தொடங்குகிறது.

உதாரணமாக, புழு ஒன்றும் அறியாத நிலையில் இருக்கின்றது. ஒரு விஷம் கொண்ட குளவி, அதைத் தன் விஷத்தால் கொட்டி, மண்கூட்டில் அடைத்து விடுகின்றது. புழு குளவியாக ஆனபின், தாய்க் குளவியைப் போன்றே, அந்த உணர்வின் செயலாக்கங்களில் இயங்கத் தொடங்குகின்றது.
இது போன்றுதான், அகஸ்தியர் தாயின் கருவில் இருக்கும் பொழுது விளைந்த உணர்வுகள்,
அவருடைய குழந்தைப் பருவத்தில்
ஞானத்தைப் பிரதிபலிக்கும் நிலையாகவும்,
அறியச் செய்யும் உணர்வின் தன்மை
வளரும் நிலையாகவும், அங்கே வருகின்றது.