ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

May 12, 2013

கொலைகாரனாக இருந்த வான்மீகிக்கு, ஞானம் எப்படிக் கிடைத்தது?

1. வான்மீகி ஆரம்பத்தில் எப்படி வாழ்ந்தார்?
இன்று நாலாயிரம் ஆண்டுகளுக்கு முன், வான்மீகி காட்டில் ஒரு புலையரைப் போன்றுதான் வாழ்ந்து வந்தார். காட்டு விலங்குகளை வேட்டையாடிக் கொன்று புசித்து வந்தவர். மற்றும், வேறு சிலர் விலங்குகளை வேட்டையாடி தின்றது போக, தனது சேமிப்பாக வேறு இடங்களில் பதுக்கி  வைத்திருப்பர்.

இப்படிப் பதுக்கி வைத்த இடங்களை அறிந்த வான்மீகி, அதைத் திருடி எடுத்துச் செல்வார். வேட்டையாடி மாமிசங்களைக் கொண்டுவரும் ஆட்களைத் தாக்கி, அவர்களிடம் இருக்கும் மாமிசங்களைப் பறித்துச் செல்வார்.

இப்பொழுது, எப்படி நமது ஊரில் கொள்ளையடிக்கின்றார்களோ, இதைப்போன்று அன்று வான்மீகி கொள்ளையடித்து விற்றும், பண்டமாற்றம் செய்தும், வாழ்ந்து வந்தவர்.

கொள்ளை செய்வது மட்டுமல்லாமல் கொலை செய்வது போன்ற நிலைகளும் அவரிடம் இருந்தது. இப்படிப்பட்டவர்தான், இராமாயண காவியத்தை எழுதினார்.
2. வான்மீகி கொலைகாரனாக இருந்தாலும், அவனுக்கு, தன் மனைவி, குழந்தை என்ற பாசம் உண்டு
மனிதர் தாம் நுகர்ந்த உணர்வு எதுவோ,
அதனின் எண்ண வடிவம் எப்படி ஆகின்றது என்பதையும்,
மனிதன் தன்னைப் பாதுகாக்கும் நிலையையும்,
வான்மீகி இராமாயண காவியத்தில் தெளிவாக்கினார். இதனின் ஞானம், வான்மீகிக்கு எப்படி வந்தது? என்பதை இப்போது பார்ப்போம்.

அகஸ்தியர் தீமையின் உணர்வுகளை வென்று, பாசத்தின் உணர்வு கொண்டு தமக்குள் ஆற்றல்களைப் பெற்றிருந்தார். அதே சமயத்தில்,
சூரியனின் காந்தப் புலனறிவுகள்
எதை எதைத் தனக்குள் கவர்ந்து கொண்டதோ,
அதன் உணர்வுகளை மற்றவர்கள் நுகரும்போது,
நுகர்ந்த உணர்வுகள், அவர்களிடத்தில் எந்த நிலை செய்கிறது?
என்ற உண்மையையும் வெளிப்படுத்தியிருந்தார்.
இதனைப் பெறுவதற்கான சந்தர்ப்பம், வான்மீகிக்குக் கிடைத்தது.
 
பட்சிகள், தன் இனத்தைக் காக்க என்ன செய்கின்றது? தனக்கு உணவு இல்லையென்றாலும், தன் குஞ்சுகளுக்காகத் தேடியலைந்து உணவை எடுத்து வந்து கொடுக்கின்றது. தன் இனத்தைப் பாதுகாக்கின்றது.

எதிரி என்ற நிலை வந்தாலும், அதிலிருந்து தன் குஞ்சுகளைப் பாதுகாப்பது போன்று, பெரும்பாலான உயிரினங்களுக்கு இந்தப் பாச உணர்வு உண்டு.

மனிதனானவன், மற்ற விலங்குகளை, பறவைகளை இரக்கமற்று, வேட்டையாடிக் கொன்று புசிப்பவனாக இருந்தாலும், அவனிடத்திலும் தன் மனைவி, தன் குழந்தை என்று பாச உணர்வு கொண்டு, பாதுகாக்கும் நிலை வருகின்றது என்ற நிலையைத் தெளிவாக்கி, அன்று வான்மீகிக்கு ஞானம் எப்படி, எதனால் வந்தது? என்ற நிலையை எமக்குத் தெளிவாகக் காண்பித்தார் குருநாதர்.
3. மகிழ்ச்சியுடன் இருந்த ஜோடிப் பட்சிகளில் ஒன்றை வீழ்த்தினார் வான்மீகி
வான்மீகி, காட்டினுள் வேட்டையாடி வரும் காலத்தில், இரண்டு பட்சிகள் ஜோடியாக இருந்து, ஒன்றுக்கொன்று மகிழ்ந்து குலாவி ஆடுகின்றது, பாடுகின்றது.

மகிழ்ச்சியுடன் உறவாடிக் கொண்டிருந்த அந்தப் பட்சிகளை உற்று நோக்கினார் வேடனாக இருந்த வான்மீகி, இந்தச் சந்தர்ப்பத்தில், அம்பெடுத்து, அந்தப் பறவைகளில் ஒன்றைக் குறி பார்த்துத் தாக்கினார்.

பட்சியில் இரண்டில் ஒன்று, அம்பால் தாக்கப்பட்டு துடிதுடித்துக் கீழே விழுந்து இறந்தது. ஆனால், இவர் வேட்டை கிடைத்தது என்று, மகிழ்ச்சியாக அதை எடுக்கின்றார்.

கொன்ற பட்சியினைப் பார்த்து வான்மீகி இரசிக்கும் வேளையில், இறந்த பட்சியுடன் இருந்த மற்றொரு பட்சியோ, பதறுகின்றது. துடிக்கின்றது. வேடன் வான்மீகியின் கண்களை உற்றுப் பார்க்கின்றது.

ஆனால் வான்மீகியோ, அந்தப் பட்சியையும் வீழ்த்தக் குறி பார்க்கின்றார். ஆனால், அந்தப் பட்சி தப்பிப் பறந்தோடி விடுகின்றது. வேட்டையாடிய பட்சியை எடுத்து, தோளில் போட்டுக் கொண்டு நடக்கத் தொடங்கினார்.
4. கூட வந்த பட்சி, தன் பாச உணர்ச்சிகளை வெளிப்படுத்துகின்றது
இதைப் பார்க்கின்றது அந்த ஜோடிப் பட்சி. பாசத்தால் துடிக்கின்றது. சுற்றி வரும் பட்சியைப் பார்த்த வேடனாக இருந்த வான்மீகி, மறுபடியும் அம்பால் குறி பார்க்கின்றார். ஆனால், அந்தப் பட்சி மீண்டும் தப்பி ஓடுகின்றது. ஆனால், மீண்டும் வருகின்றது. இவருடைய கண்களை உற்றுப் பார்க்கின்றது.

அந்தப் பட்சி பாச உணர்வுகளை வெளிப்படுத்தி
இறந்த பட்சியைப் பார்ப்பதும்,
பின் இவரை உற்றுப் பார்ப்பதும்,
பாச உணர்வு வருவதும்,
பாச உணர்வால் துடித்துக் கொண்டிருப்பதும் போன்ற
உணர்வின் அலைகள் வெளிவருவதை
சூரியனின் காந்தப் புலனறிவுகள் கவர்ந்து கொள்கின்றது என்பதை,
எமக்கு உணர்வுபூர்வமாகத் தெளிவாகக் காண்பித்தருளினார் குருநாதர்.

அதாவது, வேடனின் உடலிலிருந்து வெளிப்பட்ட உணர்வுகள்,
அவருடைய ரூபத்தின் தன்மைகள்,
மற்றும் அவர் நுகர்ந்த உணர்வுகள்,
அவர் உடலில் உருவான பதட்டங்கள்,
அதே சமயம் பட்சியின் ரூபம்,
அது வெளியிட்ட உணர்வுகள் போன்றவைகளை,
சூரியனின் காந்தப்புலனறிவு கவர்ந்தது.

அது இன்றும் புவியில் இருக்கின்றது என்ற நிலையைக் காண்பித்து, அதை நாம் நுகர்ந்தறிய முடியும் என்பதனை எமக்கு நமது குருநாதர் உணர்த்தினார்.

உதாரணமாக, இன்று விஞ்ஞானிகள் கம்ப்யூட்டரின் துணைகொண்டு சில பகுதிகளில் உள்ள உணர்வுகளை, எலெக்ட்ரிக் எலெக்ட்ரானிக் என்ற நிலையில் மாற்றி,
இங்கே என்னென்ன ஜீவன்கள் வாழ்ந்தது?
அவைகள் எந்தெந்த ரூபத்தில் இருந்தது? வளர்ந்தது? என்பதை
விஞ்ஞான அறிவால் காணுகின்றனர்.

இதைப் போன்று, மெய்ஞானிகள் புவியில் படர்ந்துள்ள உணர்வின் அலைகளை, தமக்குள் சக்தி வாய்ந்த நிலைகளில் குவித்து, பட உணர்வாகப் பார்த்து, உணர்வின் செயலாக்கங்களைக் கண்டுணர்ந்தார்கள். இதனின் ஆற்றல் கொண்டவர்கள், இன்றும் உண்டு. குருநாதர் அருளால் யாமும் அறிய முடிந்தது.
5. வான்மீகி, கூட வந்த பட்சியைத் தாக்க முற்படும்போது, பாச அலைகளால் அது அவனைத் தாக்குகின்றது
மற்றொரு பட்சி, இறந்த பட்சியைப் பார்த்துப் பதறுவதையும் பாசத்தால் துடிப்பதையும், இவரருகில் சுற்றிச் சுற்றி வருவதும், மீண்டும் மரத்துக்கு மரம் தாவுவதும் வேடன் வான்மீகி, அந்தப் பட்சியைக் குறி வைத்துத் தாக்க எண்ணும் பொழுது,
அந்தப் பட்சி இவர் கண்களை உற்றுப் பார்ப்பதும்
இந்தச் சமயத்தில், இவருடைய உடலுக்குள் உள்ள
பாச அலைகளைத் தாக்குகின்றது.
இதனால், இவருடைய உடல் சோர்வடைகின்றது.
இவருடைய மனமும் சோர்வடைகின்றது.

பாசம் என்ற உணர்வுகள் இவருக்குள் உந்துகின்றது. தன் இன மக்களை எப்படிக் காக்கின்றோமோ, தன் மனைவி இறந்துவிட்டால், நாம் எப்படித் துடிக்கின்றோமோ, இதைப் போன்று அந்தப் பட்சி பாசத்தால் துடிப்பதைப் பார்த்து, தன் மனைவி தன்னுடன் இணைந்து வாழ்ந்து, இறந்திருந்தால், நாம் எவ்வாறு இருந்திருப்போம்? என்று சிந்திக்கத் தொடங்கினார்.
 6. வான்மீகி சிந்திக்கும் பொழுது, அகஸ்தியரின் உணர்வுகள் அவன் ஈர்ப்புக்குள் வருகின்றது
அப்பொழுது, தாக்கும் நிலையை விடுத்தார். இந்த நிலை எவ்வாறு வந்தது? என்று சிந்திக்கத் தொடங்கினார்.
அச்சமயம், அகஸ்தியரின் உணர்வலைகள்
வேடன் வான்மீகியின் ஈர்ப்புக்குள் வந்து,
சிந்திக்கும் ஆற்றலை உருவாக்குகின்றது.

அப்பொழுதுதான், செய்த பிழையை அறிகின்றார். வானை நோக்கி ஏகுகின்றார். இதன் காரணத்தால் தான், வான்மீகி என்று பெயர் வந்தது.

அகஸ்தியர் தீமைகளை வென்று,
உணர்வின் ஒளியாக மாறி,
துருவ நட்சத்திரமாக இருப்பவர்.
அணுவின் ஆற்றலை அறிந்தவர்.
துருவத்தின் ஆற்றலைத் தம்முள் பெருக்கியவர்.
கணவன் மனைவியுமாக, உணர்வுகளை இரண்டறக் கலந்தவர்.
அணுவினை ஒளியாக உருவாக்கத் தெரிந்து கொண்டவர். 
அவரிடமிருந்து வெளிப்படும் உணர்வைக் கவர்ந்து, தீமைகளை வென்ற அவருடைய உணர்வை நமக்குள் உருவாக்கினால், தீமை என்ற உணர்வுகள் நமக்குள் புகாது,
நமது உடலுக்குள் இருக்கும் அணுக்களை,
ஒளியாக மாற்றும் ஆற்றல் பெறலாம்.
இதை எவர் ஒருவர் செய்கின்றாரோ,
அவரே இந்த மனித வாழ்க்கையில்
பிறவியில்லா நிலையை அடைய முடியும்.
7. கொலைகாரராக இருந்த வான்மீகி, ஞானியாக மாறி இராமாயணக் காவியத்தையே எழுதினார்
வான்மீகி, மூடராக இருந்தார், கொலைகாரராக இருந்தார், கொள்ளைக்காரராக இருந்தார். இருந்தாலும், பட்சியின் பாச உணர்வு இவரிடம் வரும் பொழுது, பட்சியின் துடிப்பை உணர்ந்தார். தவறிலிருந்து மீண்டார்.

சூரியனின் இயக்கத்தையும், நம்முடைய உயிரின் இயக்கத்தையும், உணர்வால் தோன்றும் எண்ணங்களையும், அருள் ஒளியை நமக்குள் பெற்று இருளை அகற்றிடும் நிலையைப் பெறவேண்டும் என்று, இராமாயணத்தில் உணர்த்தியுள்ளார் வான்மீகி மகரிஷி.

சாந்த குணம் கொண்டவன் இராமன் என்றும், அதன் உணர்வு கொண்டு பகைமை உணர்வுகளை வெல்லும் ஆற்றல் எப்படிப் பெற்றார் என்றும், எந்தக் குணத்தின் தன்மையோ அதனின் உணர்ச்சிகள் தூண்டி, அறியச் செய்யக் கூடிய நிலைகளை சீதா லட்சுமி என்றும் உணர்த்தியுள்ளார். அதாவது,
சீதா லட்சுமி - தான் நுகர்ந்த உணர்வுகள் எதைக் கவர்ந்ததோ,
அது மகிழ்ச்சி பெறும் உணர்வுகள் என்றும்,
செழித்த உணர்வுடன்
சோர்வற்ற நிலைகள் கொண்டு இருக்கின்ற உணர்வுகள்
நற்குணங்கள் கொண்டு தன் இனத்தை
தன் மனைவியாக இயக்கும் தன்மையும்,
உணர்ச்சியின் தன்மை கொண்டு
எண்ணங்கள் எப்படி உருவாகிறது என்ற நிலையும்,
அன்று வான்மீகி தெளிவாக எழுதியிருந்தார்.