ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

February 23, 2015

கறி சாப்பிட்டுப் பழகியவர்களின் கடைசி நிலை

1. கோழிக் கறியை ஏன் அதிகம் சாப்பிடுகிறார்கள்?
ஒரு பாத்திரத்தில் தேளைப் போட்டபின், அது பாத்திரத்தில் கொட்டினால், அந்தக் கொடுக்கின் நுனி எவ்வளவு இருக்கிறதோ, அந்த அளவுக்கு அந்தப் பாத்திரத்தில் ஓட்டை போட்டுவிடும். அதற்கு அவ்வளவு வலிமை இருக்கிறது.
ஆனால், கோழியோ இந்தத் தேளைக் கொத்திக் குதறுகிறது.
அந்த முள்ளுடன் விழுங்குகின்றது.
அதற்குள் இருக்ககூடிய அமிலமோ, அந்த விஷத்தை ஒடுக்குகின்றது.

அந்தக் கோழியை மனிதன் சாப்பிடுகின்றான். அதிலே சேர்ந்த விஷத்தின் தன்மை, மனிதனுடைய உணர்ச்சிகளை அதிகமாக ஊட்டுகின்றது.

ஆகையினாலேதான், பெரும்பகுதியானவர்கள் கோழியை அதிகமாகச் சாப்பிடுகின்றனர். உணர்வின் வேகமும், உணர்ச்சியின் வேகங்களையும் அங்கே கூட்டப்படும்போது, கோழியை நிறையப் பேர் சாப்பிடுவார்கள்.

சேலத்தில் பார்க்கலாம். ஆட்டுக்கறியைக் காட்டிலும், கோழிக் கறிதான் நன்றாக இருக்கிறதென்று முழுதாக விழுங்குவார்கள். கோழி சாகக் கிடக்கும். தீனி கூடக் கொடுக்கமாட்டான்.
2. கோழியை வேதனைப்படுத்தி, இரசித்து, உணவாக உட்கொண்டால் உடலில் இனம் புரியாத வலிகள் ஏற்படும்
பிடித்துக் கொண்டு வருவான். தொங்கவிடுவான். நரகவேதனைப் படுத்துவான். இவன் எடுத்து வந்து, தீனியும் போடமாட்டான். அப்பொழுது அந்த உணர்வுகள், அது இவனை எண்ணினால் என்னவாகும்?

நாம் கோழி என்று நினைக்கிறோம். ஒரு பட்சி தன்னுடன் வந்த அந்த பட்சி துடிப்பதைப் பார்த்தது. தன்னுடைய பாசத்தின் உணர்வுகொண்டு பார்த்தது. ஆனால், வேடுவனின் கண்ணை உற்றுப்பார்த்தது. அவனுக்குள் (வான்மீகி மகரிஷி) ஊடுருவி பாச உணர்ச்சிகளைத் தூண்டியது.

ஆனால், வேதனைப்படும் உணர்வுகள் இங்கே வேதனைப்பட்டு “இப்படிச் செய்கிறானே” என்று அவன் உருவை நிச்சயம் பார்க்கும். இந்த உணர்வின் தன்மை, இவனுக்குள் வேதனைப்படும் உணர்ச்சியைத் தூண்டும்.

அதே மாதிரி தொங்கப் போட்டு, சில பறவை இனங்களைச் சிலர் சாப்பிடுகிறார்கள். அவர்களைப் பார்க்கலாம். அடிக்கடி இனம் புரியாது
மூட்டு வலிக்கின்றது,
இடுப்பு வலிக்கின்றது,
இங்கே வலிக்கின்றது,
வயிறு வலிக்கின்றது என்பார்கள்.
ஏன் வலிக்கின்றது? என்பது தெரியாது.
இந்த உணர்வின் அலைகள் பல பாகங்களுக்கு வரும்.

நாம் அதைப் “பட்சி” என்று நினைக்கின்றோம். அதை வேதனைப்படுத்தும் உணர்வின் வழிகளில், அது உருவாக்கப்படும்போது நமக்குள் இத்தனை வேலைகளைச் செய்கிறது இயற்கையின் சில நியதிகள்.

இதைத்தான் வான்மீகி சொல்லுகின்றார். அதாவது, நாராயணன் சீதாலட்சுமியாக மாறுகின்றான். எதை எடுக்கின்றதோ, அந்த சுவையின் உணர்வாக அந்த சூரியனிலிருந்து வரக்கூடிய வெப்பம், காந்தம், விஷம் இதில் கலந்துள்ளது.

காந்தம் சுவையை எடுத்துக் கொள்ளும்போது, இந்த சுவையின் சத்தை அது வளர்த்துக் கொள்கிறது. அதுதான் சீதா - சுவை, இலட்சுமி அதன் வளர்ச்சியாக வளர்கின்றது. இலட்சுமி வளர்ப்பாள். இலட்சுமி என்றால், வளர்க்கும் சக்தி கொண்டது. ஆகவே, சீதாலட்சுமி அந்த சுவையை அரவணைத்து, தனக்குள் வளரும் பருவத்திற்கு வளர்கின்றது.

கோழியைச் சாப்பிட வேண்டும் என்று, அந்த உணர்வின் தன்மையை நுகரப்படும்போது அந்த உணர்வுகள் இவனுக்குள் மகிழ்ச்சியாக இருக்கும். ஆனால், அதே சமயத்தில் அவன் உடலுக்குள் வேதனை உணர்வுகள் அங்கே கிளரப்பட்டு, அந்த வேதனை உருக்களை உருவாக்கும். ஆக, இங்கே அந்தக் கோழியின் உணர்வுகள் உடலுக்குள் வேதனையை வளர்க்கும்.

வேதனைப்படுபவர்களைப் பார்த்தால் போதும். அவன் உடலுக்குள், வேதனைப்படும் உணர்வுகளுக்கு இது உணவாகின்றது. இந்த உணர்வின் தன்மை வளர்ச்சியாகும் போது, அவனுக்குத் தெரியாது.
3. கறி சாப்பிட்டால் நீ செத்துவிடுவாய் என்று, கடைசியில் டாக்டர்கள் சிபாரிசு செய்வார்கள்
எந்தக் கோழியைச் சாப்பிட்டானோ, அந்த உணர்வின் தன்மை வளர்ந்தபின் அது வேதனைப்பட்ட உணர்வெல்லாம் முதலில் வீரியமாக இருக்கும். பின் அதனுடைய நிலைகளைப் பார்த்தபின், “அம்மம்மா, சாப்பிட்டேனே” என்று கடைசியில் டாக்டரிடம் சென்றால் என்ன ஆகிறது?

இந்த வேதனை உணர்வுகள் அங்கே சேர்க்கப்படும்போது,
கோழியை அடுத்து சாப்பிட்டால்,
“அது விஷம் நீ செத்துவிடுவாய்” என்று டாக்டர் சொல்வார்.
டாக்டர், “உனக்குக் கோழிக்கறி சேராது” என்பார்.

இதே மாதிரி ஆட்டுக்கறியைச் சாப்பிட, அது வேதனைப்படுவதை இரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தால், அதை வேடிக்கை பார்த்தால் அதன் உணர்வின் தன்மைக்குள் வேதனையின் தன்மை வருகின்றது.

அந்த வேதனையின் தன்மை வரப்படும்போது, அதன் உணர்வை மாற்றப்படும்போது,
“அடுத்து ஆட்டுக்கறியைச் சாப்பிட்டால்
உனக்கு ஆகாது” என்று டாக்டர் சிபாரிசு செய்வார்.

அந்த உணர்வின் தன்மை எதிர்மறையாகி, உணர்வின் தன்மை அணுக்களாக மாற்றும். எதனின் தசைகளைப் புசித்தோமோ அதன் உணர்வின் தன்மை இயக்கி, இயற்கை எப்படி மாறுகின்றது? என்ற நிலையைத் தெளிவாக, நமது குருநாதர் காட்சியாகக் காண்பித்தார்.
4. அருள் ஞானம் பெறவேண்டும் என்ற உணர்வைக் கூட்டினால், மாற்றியமைக்கலாம்
யாரிடமும் யாம் கறி சாப்பிட வேண்டாம் என்று மட்டும் சொல்வதில்லை. அருள் மகரிஷிகளின் அருள் சக்திகளை எடுத்தால், இது தனியாகப் போகும்.

ஆனால், சாப்பிட வேண்டாம் என்று கட்டாயப்படுத்தி நினைத்தீர்கள் என்றால், நிச்சயம் பத்து கிலோ சாப்பிட்ட மாதிரி ஆகிப் போகும்.

ஆகையினாலே, அருள்ஞானம் பெறவேண்டும் என்ற உணர்வைக் கூட்டினால், அதை “ஈர்க்கும் சக்தி” குறைகின்றது. இப்படித்தான் குறைக்க வேண்டும்.
5. கறி சாப்பிட்டுப் பழகியவர்களின், "கடைசி நிலை"
தடைப்படுத்தினால், “கொடுக்கவில்லை” என்று, அதுவே நோயாக மாறும். அந்த உணர்வின் வேகத்தைக் கூட்டும். கறி சாப்பிட்டவர்களைக் கடைசியில் பார்த்தால், உயிர் இழுத்துக் கொண்டிருக்கும்.

சீக்கிரம் உயிர் போக வேண்டும் என்றால், அவர் என்ன அதிகமாகச் சாப்பிட்டாரோ, அதை வேக வைத்து,
அந்த வாசனையை நுகர்ந்தவுடன்
உயிர் உடனே வெளியில் வந்துவிடும்.
இப்பொழுது அது எங்கே போகும்?
ஆட்டிற்கே செல்லும்.

ஆட்டுக்கறியின் மேலே நினைவிருந்தால், அந்த உயிர் மனித இனத்திற்குள் செல்லாது. ஆட்டின் ஈர்ப்புக்குள் சென்று, அங்கே சுற்றிக் கொண்டிருக்கும்.

மனிதனாக இருக்கும் பொழுது, ஆட்டுக் கறியைச் சாப்பிட்டார். பின், அங்கே போனவுடன், “மே., மே..” என்று சொல்வார். அடுத்து அங்கேயே அடங்கிவிடும். இதையெல்லாம் அப்படியே நேரடியாகக் காட்டுகின்றார் குருநாதர்.