ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

February 22, 2015

நன்மைகள் பல செய்ய - உங்களுக்குத் துணிவைக் கொடுக்கின்றோம் - ஞானகுரு

நமது வாழ்க்கையில் பாச அலை வந்து சேர்கின்றது,
கோப அலை வருகிறது,
வெறுப்பு அலை வந்து போகிறது.
பகைமை அலைகள் வந்து தாக்குகின்றது.
இப்படி எத்தனையோ அலைகள் நமக்குள் வந்து மோதுகின்றது.

மோதலில் பாசத்தினால் நம் பையன் என்ன செய்யப் போகிறான்? என்று எண்ணும்பொழுது பாச அலைகளில் மூழ்கிவிடுகிறோம்.

அதில் மூழ்கியவுடன் பையனின் நினைவாற்றலே வருகிறது. இந்த உடலைவிட்டுச் சென்றபின், பையன் உடலுக்குள் போய்விடுகின்றோம்.

வெறுப்பான நிலைகளில் ஒருவன் தொந்தரவு கொடுத்துக் கொண்டே இருக்கின்றான் என்றால், நமது எல்லையை மறந்து இப்படியே செய்து கொண்டிருக்கின்றான் என்று அவனிடம் போய்விடுகின்றோம்.

நாம் அவனைத் திருத்தும் நிலைகளுக்குப் போய்விட்டால் நாம் அதில் மூழ்கிவிடுகிறோம்.

இது போன்றே நமது வாழ்க்கையில் எத்தனையோ உணர்வின் அலைகளில் சிக்குண்டு மீளமுடியாத நிலைகளில் இருக்கின்றோம்.

ஆக, அந்த அலைகள் வரும் பொழுது மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என்று எண்ணத்தால் எண்ணி
அந்த உணர்வை எடுத்து சுவாசித்து
அந்த அலையைப் பிளக்க வேண்டும்.

மகரிஷிகளின் அருள் சக்தி பையன் பெறவேண்டும். அவன் எதிர் காலம் செழித்திருக்க வேண்டும் என்று எண்ணம் வேண்டும்.

அவன் உயர்ந்த ஞானம் பெறவேண்டும் என்ற எண்ணத்தை எடுக்கும் பொழுது பாச அலையைப் பிறப்பிக்கின்றது. இந்தப் பாசம் அவனை உயர்ந்த நிலைக்குக் கொண்டு செல்கிறது.

அவனை உயர்ந்த நிலைகளில் எண்ணிப் பார்க்கும் பொழுது இந்தச் செயல் அவனை ஒழுக்கமாக்குகின்றது.

இதே மாதிரி, பலர் பகைமை கொண்ட நிலையில் பேசுவர். பிறிதொரு கெடுதல் செய்த ஆவி ஒரு உடலுக்குள் சென்றால் நீங்கள் எவ்வளவு நல்லது செய்தாலும் அவருக்குப் பிடிக்காது.
எதிரி என்ற நிலைகளில்
உங்களைப் பார்த்தாலே இல்லாததெல்லாம் சொல்வார்கள்.

ஒரு உடலுக்குள் ஆவி சென்றுவிட்டால் தியானம் செய்பவர்களைப் பார்த்தால் எனக்கு ஏதோ செய்கிறான் என்று சொல்வார்கள்.

நான் ஒன்றும் சொல்லாமலே இப்படிச் சொல்கிறான் என்று இந்த அலைகளில் சிக்கிவிடுகிறோம்.

இந்த நேரங்களில் மகரிஷிகளின் உணர்வை நமக்குள் எடுத்து அவனுக்குள் இருக்கும் ஆவிக்கு மகரிஷிகளின் அருள் சக்தி கிடைக்க வேண்டும் என்று எண்ண வேண்டும்.

அந்த ஆவி மகரிஷிகளின் அருள்சக்தி பெற்று அவனுக்குள் இருந்து நன்மை செய்யும் செயல்கள் வரவேண்டும் என்று எண்ண வேண்டும்.
இதில் நமக்குத் துணிவு வேண்டும்.
நமக்குள் நன்மை வளரவேண்டும் என்றால்
அதற்குத் துணிவு வேண்டும்.

இதைத்தான் நன்மைகள் பல செய்யத் துணிவோம் என்று நம் குரு சொன்னது.

நமது தியான வாழ்க்கையில் இதையெல்லாம் தெரிந்து கொள்ள வேண்டும். யாம் அவ்வப்பொழுது கொடுக்கும் சக்திகளை உங்களுக்குள் வலுப் பெறச் செய்துதான் அங்கு கொடுக்க வேண்டும்.

நமக்குள் எத்தனையோ எண்ணங்கள் இருக்கின்றது. அதனால் உருவான அணுக்கள் இருக்கின்றது. ஒவ்வொரு நிமிடமும் அந்த அணுக்களுக்கு அருள்ஞானியின் உணர்வைச் செலுத்திவிட்டுவிடவேண்டும்.

அருள்ஞானியின் உணர்வு வலுப்பெற்றபின் இது குறைந்து விடுகின்றது. இதை உங்கள் அனுபவத்தில் தெளிவாகத் தெரிந்து கொள்ளலாம்.

முதலில் சிரமமாகத் தெரியும். சிறிது நாள் பழகிவிட்டால் குறைகள் நமக்குள் நீங்கும். பிறரின் குறைகளையும் நீக்கும்.

இப்படி நாம் அதை வளர்க்க வளர்க்க நம்முடைய பார்வையே பிறருடைய தீமைகளை நீக்கும் சக்தியாக வரும்.
அப்படி நீக்கும் சக்தியாக வந்தாலும் கூட
கடும் ஆவிகளுக்கு எரிச்சலாகும்.
அது எழுந்து ஓடும்.

ஓடினாலும், மகரிஷிகளின் அருள் உணர்வு அது பெறவேண்டும். அந்த ஆன்மா மெய் ஒளி பெறவேண்டும், அந்த உடலுக்குள் நன்மை செய்யும் உணர்வுகள் பெறவேண்டும் என்ற இந்த எண்ண அலைகளைப் பாய்ச்ச வேண்டும்.

உங்களுக்குள் அந்தச் சக்தி வளரவேண்டும் என்று விரும்புகின்றேன். ஆக, நீங்கள் அனைவரும் ஒவ்வொரு நிமிடத்திலும் ஆத்ம சுத்தி செய்து இதைப் பழகிக் கொள்ள வேண்டும்.