ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

February 1, 2015

அணுவிற்குள் இருக்கும் மூன்று சக்தி - மும்மண்டலம்

சூரியனிலிருந்து வரக்கூடிய வெப்பகாந்தம் ஒரு ரோஜாப்பூவிலிருந்து வெளிப்படக்கூடிய மணத்தை கவர்ந்து கொள்கின்றது. காந்தத்துடன் கலந்துள்ள வெப்பம் அந்த ரோஜாப்பூவின் மணத்தைத் தனக்குள் இழுத்து, காந்தம் வெப்பத்துடன் இணைத்துக் கொள்கின்றது.

அவ்வாறு இணைத்துக் கொண்ட அந்த அணு, எந்த ரோஜாப்பூவின் மணத்தை அது தனக்குள் இழுத்து இணைத்துக் கொண்டதோ அந்த மணத்தை வீசும் அலையாக மாற்றுகின்றது.
ஆக, அந்த அணுவிற்குள்
ஈர்ப்பு – காந்தம்
அதற்குள் மறைந்திருக்ககூடிய வெப்பம்
அது சேர்த்துக் கொண்டது மணம்.

அதை நாம் தெரிந்துகொள்வதற்குத்தான் அன்று ஞானிகள் காந்தம் என்பது லட்சுமி, தனக்குள் அணைத்துக் கொள்ளும் சக்தி. பராசக்தி என்பது வெப்பம், எதிலேயும் உருவாக்கக்கூடிய சக்தி.

உதாரணமாக நம் உடலுக்குள் பல குணங்கள் இருக்கிறது என்று வைத்துகொள்வோம். அத்தனை குணங்களிலேயும் அந்த காந்தம் இருக்கின்றது. அதனால் அது மஹாலட்சுமி.

அத்தனை குணங்களையும் சேர்த்து வளர்க்கும் ஆற்றல் பெற்றது மஹாலட்சுமி.

ஆனால், அத்தனை குணங்களிலேயும் இந்த வெப்பம் நாம் எடுக்கக்கூடிய ஒவ்வொன்றும் அது வளரச்செய்வதற்கு அந்த வெப்பம், சூடு தேவை. ஆக, இது பராசக்தி.

அத்தனை குணங்களிலும் நாம் வெளிப்படுத்தும் ஒவ்வொரு குணத்திலும் அந்த மணங்கள் உண்டு. அந்த ஒவ்வொரு மணத்தையும் நாம் அறிந்துகொள்ளக்கூடியது ஞானம் – சரஸ்வதி.

இதைப் போல ஒரு அணுவிற்குள் லட்சுமி, பராசக்தி மூன்றாவது சரஸ்வதி. இந்த மூன்று நிலை கொண்டதுதான் ஒரு அணுவின் வேலை.

அணுவிற்குள் இந்த மூன்று சக்திதான் மும்மண்டலம், மும்மலம் என்று தத்துவ ஞானிகள் எழுதியிருப்பார்கள்.

இந்த மும்மலத்தின் இயக்கம்தான் என்றாலும் ரோஜாப்பூவிலிருந்து வெளிப்படும் மணத்தை சூரியனிலிருந்து வரக்கூடிய வெப்பகாந்தங்கள் கவர்ந்துகொண்டு அந்த மணத்தை வீசும் அலைகளாகப் போகும்.

அதே சமயம், பூமியில் இருக்கக்கூடிய ரோஜாச்செடி தன் மணத்தை இழுத்து வாழச்செய்து தனக்குள் வெப்பத்தை உண்டாக்கிக் கொள்ளும்.

ஒரு பொருளை நாம் வேகவைத்தால் அதிலிருந்து ஆவி  வெளிப்படுகின்றது. இப்பொழுது நாம் சுவாசிக்கும்போது மூச்சை வெளிப்படுத்துகின்றோம்.

அதைப் போல ரோஜாச் செடியும் பூமியின் ஈர்ப்பலைகளிலே வெளிவந்து
தன் உணர்வின் சத்தை இழுத்து
தனக்குள் மோதும்போது ஏற்படக்கூடிய வெப்பத்தில்
தான் சேர்த்துக் கொண்ட மணத்தை வெளிப்படுத்தும்,
ஆவியாக அந்த மூச்சை வெளிப்படுத்தும்


அந்த மூச்சை வெளிப்படுத்தும் மூசசு இல்லையென்றால் அதற்கு வேலையே இல்லை. அது போன்று அது வெளிப்படுத்தும் அத்தனை அலைகளும் (ரோஜாப்பூவின் மணங்கள்) அது அலை அலையாகத் தொடர்ந்து போய்க் கொண்டிருக்கின்றது.