ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

February 20, 2015

உடலை விட்டுப் பிரியும் ஆன்மாக்களின் உணர்வின் இயக்க நிலைகள் எப்படிப்பட்டது?

இது நான் (ஞானகுரு) பழனியில் சைக்கிள் கடை வைத்து நடத்திக் கொண்டிருக்கும்போது நடந்த நிகழ்ச்சி.

 இராணுவத்திற்குப் போய்விட்டு வந்த ஒருவர் ஓய்வு பெற்று இங்கு வந்திருந்தார். இங்கு வந்தபின் தீவிர தி.க. மெம்பராகிவிட்டார். சாமியாவது, பூதமாவது என்று சொல்லிக் கொண்டிருப்பார்.

அவருடைய மைத்துனர் ஒரு ரேடியோ மெக்கானிக், அவரும் சைக்கிள் கடைக்கு வந்திருந்தார்.

நான் 1984-ல் விஜயகுமார் மில்லில் மேஸ்திரியாக வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது என்னுடன் இராஜரத்தினம் என்பவர் வேலை பார்த்துக் கொண்டிருந்தார்.

அவருக்கு இரண்டாம் தாரமாக ஒரு பெண்னைக் கல்யாணம் செய்தார்கள். என் சைக்கிள் கடையில் ரேடியோ மெக்கானிக்கும் அவருடைய மைத்துனரும் இருக்கும்போது ராஜரத்தினம் அங்கு வந்தார்.

என் மனைவி ரோட்டில் இருக்கும் குழந்தைகளைத் தூக்கிகொண்டு போய்க் கிணற்றில் போடுகின்றது. ஊரில் உள்ளவர்கள் என்னை அடிக்க வருகிறார்கள்.

செயினில் கட்டிப் போட்டுவிட்டு வந்திருக்கின்றேன். நீங்கள் வந்து அதைப் பார்க்க வேண்டும் என்று சொன்னார்.

கூட்டமாக இருக்கிறதே என்று சொன்னேன்.

குதிரை வண்டி கூட்டி வந்திருக்கின்றேன், போகலாம் என்றார்.

கடையிலிருந்து அவர் வீட்டிற்கு வந்தேன். வீட்டைப் பூட்டி வெளியில் இருவர் அமர்ந்திருந்தார்கள். நான் வந்தவுடன் கதவைத் திறந்து பார்த்தால் உள்ளே ஆளைக் காணவில்லை.

செயின் போட்டு தூணோடு சேர்த்துக் கட்டிப் போட்டிருந்தார்கள். வீட்டைச் சுற்றிப் பெரிய சுவர் இருந்தது. ஆனால், கழற்றிப் போட்டுவிட்டு வெளியில் போய்விட்டது. சுற்றுச் சுவரைத் தாண்டிக் குதித்து வெளியில் போய்விட்டது.

சுற்றுச் சுவருக்குப் பின் தெரு இருந்தது. கட்டிப் போடச் சொன்னவர் வீடு அந்தத் தெருவில் இருந்தது. வீட்டில் அவர் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.

என்னைக் கட்டிப் போடச் சொல்லிவிட்டு நீ சாப்பிடுகின்றாயா? என்று அவரின் கழுத்தை நெரித்துக் கொண்டிருந்தது. கூட்டம் அனைத்தும் அங்கே நின்று கொண்டிருந்தது.

இதெல்லாம் நடந்த நிகழ்ச்சிகள். நான் அங்கே போய்ப் பார்த்தேன்.  சாதம் சாப்பிட்டுக் கொண்டிருந்தவருடைய கழுத்தை நெரித்துக் கொண்டிருந்தது.

ஆனால், அது சாப்பிட்டு எட்டு நாள் ஆகியிருந்தது. எலும்பும் தோலுமாக இருந்தது. நான் அங்கு சென்றவுடன், “வாங்க., வந்துட்டீங்களா?”” என்றது.

தன் கணவனைப் பார்த்து, இவனுக்குச் சொல்லுங்கள், இவனுக்கு அறிவே இல்லை, என்னைக் கட்டிப்போட்டுவிட்டான் என்று சொன்னது.

சரி, நாம் போகலாம் என்று சொன்னேன்.

“ஓ., போகலாமே” என்றது. இவர்களுக்கெல்லாம் புத்தி சொல்லு. அப்பொழுதுதான் நான் வருவேன் என்றது.

ஏனய்யா இப்படிச் செய்கிறீர்கள்? என்று அவர்களுக்குச் சொல்லியபின் என்னுடன் வந்தது. குதிரை வண்டியில் ஏற்றினார்கள்.

முன் பக்கம் மூன்று வாலிபர்கள் அமர்ந்து கொண்டார்கள். பின் பக்கம் அவரும் அவர் மனைவியும் அமர்ந்தார்கள். நான் சைக்கிளில் பின் தொடர்ந்தேன்.

காவல் நிலையம் அருகில் வந்தவுடன், தன் கணவனைக் கீழே தள்ளிவிட்டுவிட்டு ஸ்டேசனுக்குள் சென்று அங்கிருந்த தடியை எடுத்து போலீசை அடிக்க ஆரம்பித்துவிட்டது.

S.I அங்கு வந்தார், அவருக்கும் அடி விழுந்தது. அந்தம்மாவைப் பிடிக்கவே முடியவில்லை. நாலைந்து பேர் சேர்ந்து பிடித்தாலும் ஒரே ஒதரில் அத்தனை பேரும் கீழே விழுகிறார்கள்.

நான் அங்கு சென்றவுடன், “இவர்களுக்கெல்லாம் புத்தி சொன்னால்தான் நான் வருவேன்” என்று சொல்லிவிட்டது.

அதை ஒன்றும் செய்யாதீர்கள், நல்ல ஆன்மாதான் என்று சொல்லியபின் என்னுடன் வந்தது.

கடைக்கு வந்ததும் மூர்த்தி என்பவர் அங்கு வந்தார். “உண்மையிலே இது பேய்தானா?” என்றார்.

“உனக்கு ஏன்டா இந்த சந்தேகம்?” என்று கேட்டது. “அட, அறிவு கெட்டவனே.., உனக்கு ஏன்டா இந்த சந்தேகம்” என்று கேட்டது.

அவர்கள் சொல்கிறார்கள், நீ பேசாமல் இரு என்று சொன்னேன். இரும்புச் சங்கிலியில் கட்டிப் போட்டு வைத்திருந்ததைக் கழட்டிவிட்டது என்று சொன்னேன்.

நீங்கள் தளர்ச்சியாகக் கட்டியிருப்பீர்கள், இப்பொழுது நான் கட்டுகிறேன் கழட்டச் சொல்லுங்கள் பார்ப்போம் என்றார் மூர்த்தி. கயிற்றில் தண்ணீரை ஊற்றிக் கட்டினார். கழட்டச் சொல்லுங்கள் என்றார்.

“அட, போடா மானம் கெட்டவனே..,” என்று கயிற்றைக் கழட்டிக் கையில் கொடுத்துவிட்டது. கயிறு முழுதாக இருக்கிறது.

இரண்டாவதாக கையைப் பின்னாடி வைத்துக் கட்டினார்.

“உனக்கு ரோஷம் இருக்காடா..,?” என்று சொல்லிக் கழட்டிக் கையில் கொடுத்துவிட்டது.

மூன்றாவதாகத் தூணில் சேர்த்துக் கட்டினார்.

“உனக்கு வலுவுமில்லை, சக்தியுமில்லை, என்னை ஏன்டா சோதிக்கிறாய்...,?” என்று முறைத்துப் பார்த்தது.

பயந்து நடுங்க ஆரம்பித்துவிட்டார். இதை அவர் மைத்துனர் ராணுவக்காரர் பார்த்துக் கொண்டேயிருந்தார். இதுவெல்லாம் “வேஷம்” என்று அவரும் பேசுகின்றார்.

“சாமியாவது.., பூதமாவது?” இதுவெல்லாம் ஏமாற்று வித்தைகள் என்று அவரும் பேசுகின்றார். நாங்கள் ஒரு பொருளை எடுத்துக் கொள்கிறோம், நீ சொல்லிவிடு என்றார்கள்.

ஒருவன் முடியை எடுத்துக் கொண்டான். இன்னொருவன் மண்ணாங்கட்டியை எடுத்துக் கொண்டான். மூன்றாமவன் ஐந்து பைசாவை எடுத்துக் கொண்டான். கையில் இருப்பதை நீ சொல்லு பார்க்கலாம் என்றார்கள்.

ஐந்து பைசா வைத்திருப்பவனைப் பார்த்து பரவாயில்லை, நீ காசு வைத்திருக்கின்றாய் பிழைத்துக் கொள்வாய் என்று சொல்லியது. அந்தக் காசில் இந்த நம்பர் இருக்கின்றது என்றும் சொல்லியது.

அதைச் சொல்லிவிட்டாய், நீ இதைச் சொல்லு பார்க்கலாம் என்றால் அடுத்தவர்.

அவரைப் பார்த்து, ”அட.., போடா மண்ணாங்கட்டி” என்று சொல்லிவிட்டது.

மூன்றாமவன் இதை உன்னால் சொல்ல முடியாது என்றான்.

”அட.., போடா மயிராண்டி” என்று சொன்னது. இதைச் சொல்லிவிட்டு ஆவேசமாக ஆட ஆரம்பித்துவிட்டது.

இதெல்லாம் முடிந்தவுடன் குருநாதர் இரண்டு கோழி முட்டை வாங்கிவரச் சொன்னார். கடுகு வாங்கி வரச் சொன்னார். ஒரு மூடை பொரி, எட்டு தேங்காய் வாங்கிவரச் சொன்னார். ராஜரத்தினம் வாங்கி வந்தார்.

வாங்கி வந்தவுடன் தேங்காயையும் நொறுக்கி வைக்கச் சொன்னார். பொரியைச் சாப்பிடு. இல்லையென்றால் முட்டைக் கருவை உடைப்பேன், கடுகைப் போட்டு வறுப்பேன் என்று சொல்லச் சொன்னார்.

சொன்னவுடன் பொரியையும் தேங்காயையும் தின்றது. பிறகு “பொத்” என்று விழுந்துவிட்டது. அதன் பின் சுய நினைவு வந்தது.

பின்பு மூர்த்தியின் மைத்துனர் பொரிக்காரனுக்குச் சுண்டிவிட்டவுடன் அவன் ஆட ஆரம்பித்துவிட்டான்.

“ஏன்டா.., சண்டை நடக்கும்போது தப்பித்து வந்தால் கல்கத்தா காளிக்கு தேங்காய் போடுகிறேன் என்று சொன்னாய் அல்லவா” என்றது.

நான் எப்பொழுது சொன்னேன்? என்று மூர்த்தி கேட்டார்.

“ராணுவத்தில் சண்டையில் பனிப் பாறையில் சிக்கி எதிரியிடமிருந்து மீண்டு வரும்பொழுது அந்தக் குகைக்குள் இருந்து நீ சொன்னாயா இல்லையா?”  என்று கேட்டவுடன் அந்த ஆள் வெலவெலத்துப் போய்விட்டார்.

இல்லை என்றார்.

என்னிடம் மறுக்க முடியாது என்று கட கடவென எடுத்துச் சொல்லியது. நீங்கள் மொத்தம் இத்தனை பேர் வந்தது. கூட வந்தவன் குண்டடி பட்டு கால் இழந்து இருந்தது. அதற்கு வைத்தியம் பார்க்காமல் இறந்தது. இதையெல்லாம் சொன்னவுடன் பயந்து போய்விட்டார்.

அந்த இடத்தில் இன்ன மாதிரியெல்லாம் சொன்னாய். ஆனால், இங்கு வந்தபின் ஒன்றும் செய்யவில்லை.

இப்படி எடுத்துச் சொன்னவுடன் அவருக்குத் தலை சுற்ற ஆரம்பித்துவிட்டது. அதற்குப் பின் தான் அவர் நம்பினார்.

ஆக, ஆவிகளது உண்மை நிலை என்ன? இந்த உணர்வின் அலைகள் எப்படி இயங்குகிறது என்று நான் விளக்கம் சொன்னபின் தான் அவர் உணர்ந்தார். உணர்ந்தபின் என்ன ஆனது?

என் உடலில் காலை முழுவதும் மடக்க முடியவில்லை என்று சொன்னார்.

உடனே, “சாமியிடம் கேள், உனக்கு நன்றாக ஆகிவிடும்” என்றது.

சரி என்றார்.

விபூதி கொடுத்தேன்.

மின்னல் தாக்கியது மாதிரி இருந்தது. பின், கால் நடக்க முடிகிறது என்றார்.


இதுவெல்லாம் நடந்த நிகழ்ச்சிகள். குருநாதர் அனுபவபூர்வமாக எமக்கு காட்டிய உண்மைகளைத்தான் சொல்லி வருகிறோம்.