ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

February 21, 2015

அரசன் ஏன் ஆக்டோபஸ் (OCTOPUS) உடல் பெறுகிறான்?

கோகர்ணத்தில் நடக்கும் நிகழ்ச்சிகளை குருநாதர் முன்பே சொலியிருந்தார். அன்று ஆண்ட அரசர்கள் அமைத்த குகைகள் அங்கே உண்டு.

காளி கோவிலுகுக் கீழ் கல்லிலேயே கதவு செய்து வைத்திருக்கிறார்கள். கல்லை எடுத்துவிட்டு உள்ளுக்குள் சென்றால் குகை பல பிரிவாகச் செல்கிறது. அதற்கும் கதவு வைத்திருக்கின்றார்கள்.
ஒரு கல்லை நகர்த்தினால்தான் கதவு திறக்கும்.
அவ்வளவு இணைப்புக் கொடுத்து வைத்துள்ளார்கள்.

அரச காலங்களில் எதிரிகளிடமிருந்து தப்பிக்க என்னவெல்லாம் செய்தார்கள் என்று தெரிந்து கொண்டேன்.

அதிலிருந்து கீழே வந்தவுடன் இராமர் தீர்த்தம் என்று ஒன்று இருந்தது. அங்கு கடல் அலைகள் வந்து மோதுகிறது.

பாவத்தைப் போக்க என்று அங்கே வருகின்றார்கள். வருகிறவர்கள் என்னவெல்லாம் பாவம் செய்கிறார்கள்? அந்த அலையின் தொடர் என்ன செய்கிறது என்று உணர்வால் உணர்த்திக் கொண்டே வந்தார் குரு.

அரசன் தன்னைப் பாதுகாக்க எத்தனை குகைகளைக் கண்டுபிடித்தான், அவன் இருக்கின்றானா?
அவன் இந்த உடலின் இச்சைக்காக இதைச் செய்தான்.
நீ வேடிக்கையாகப் பார்க்கின்றாய்.
அவன் ஆன்மாவை யார் என்று காட்டினார்.

நஞ்சு கொண்ட உணர்வைப் பெற்று அதன்பின் சென்றவர்கள் தேளாகவும், பாம்பாகவும் இருக்கிறார்கள். ஆசையின் உணர்வு வரும் பொழுது பூதங்களாக மாறி அதனின் உணர்வின் தன்மை கடும் வேதனைக்குண்டான உணர்வின் தன்மை பெறுகின்றது.

அப்படிப் பெற்றபின், கடல்வாழ் இனங்களில் அவன் உணர்வுகள் ஈர்க்கப்பட்டு அவனுடைய எண்ணக் கலவைகளாகி ஆக்டோபசியாகின்றது (OCTOPUS).

இங்கிருந்து அங்கு சென்றது. இதனுடைய ஆசையின் நிலைகள் கொண்டு கடலில் மூழ்கும் பொழுது அந்த காந்தப்புலன் அழைத்துக் கொண்டபின் இவன் மீன் இனமாகி, ராட்சஸ மிருகங்களாக பல விழுதுகளாகி உணவிற்காக எத்தனை அவஸ்தைப்படுகிறது பார் என்று காட்டுகிறார் குருநாதர்.

அந்த இடத்தில் இதைக் காட்டுகிறார் குருநாதர். இதுவெல்லாம் அனுபவ ரீதியில் தெரிந்து கொண்டது.

ஆக, அவன் அரசனாக இருந்தான். பல உணர்வுகளை எடுத்தான். அவன் கடல் வாழ் நிலைகளில் மரணமடையப்படும் பொழுது எப்படிப் போகின்றது பார்.

கடலிலே கவரப்பட்டு அந்த உணர்வின் தன்மை எப்படி மாறுகிறது என்பதை குருநாதர் தெளிவாகக் காட்டுகின்றார்.

ஆகையால், நாம் எதிலிருந்து வந்தோம்? வந்தபின் எதிலே போகிறோம்? நமது குருநாதர் காட்டிய உணர்வை நாம் எப்படி இதற்குள் இணைக்க வேண்டும்?

எதையும் பார்க்கலாம், தவறில்லை. ஆனால், மனிதன் எல்லாவற்றையும் கடந்து வந்தவன் அவனுக்குள் அனைத்தையும் அறியும் ஆற்றல் உண்டு. அவனுக்குள் பதிவு செய்யும் நிலை உண்டு
.
அனைத்திலிருந்தும் விடுபடவும் முடியும். அப்படிப் பெற்றவன் மகரிஷி.

இந்த உணர்வின் கண்களுக்கு மனிதன் (அரசன்) தவறு செய்த உணர்வைப் பார்க்கின்றாய். அதே சமயத்தில் அதை வென்ற மகரிஷி எப்படி இருக்கிறான்? என்று இந்த இரண்டையும் அந்த இடத்தில் எடுத்துக் காட்டுகின்றார்.

உடலின் இச்சையின் ஆசையைப் (அரச உணர்வின்) பருகும் பொழுது அதுவாகின்றாய், மகரிஷியின் உணர்வைப் பருகும் பொழுது இதுவாகிறாய்.

அஞ்சி இவனுடைய செயல்கள் என்ன என்று அச்சமாகும் பொழுது அவனின் அச்சம் இங்கே உணர்வாக்கப்பட்டு, அதனின் நினைவுகள் உருவாக்கப்பட்டு மீண்டும் நீ அங்கேதான் போகிறாய்.
அச்சத்தாலும் போகின்றாய்,
உணர்வின் நினைவாலும் போகிறாய் என்று காட்டுகிறார்.

ஏனென்றால், நமக்குள் எத்தனையோ உணர்வுகள் பதிவாகி இருக்கின்றது. அவை அணுக்களாக விளைந்திருக்கிறது. அது அது ஆகாரத்திற்கு தேடிக் கொண்டுதான் இருக்கிறது.

உதாரணமாக, ஒரு மாமரம் காய்த்துக் கொண்டிருக்கும் பொழுது அதனுடைய கிளைகளே மற்றதற்கு வரக்கூடிய சக்தியை மறைத்திருக்கும். மறைந்த கிளையில் வரக்கூடிய காய் ருசியிருக்காது.

இதனுடைய சத்துகள் எடுக்காதபடி ருசி இல்லாதபடி மாற்றிவிடும். அதே சமயத்தில் மாமரத்திற்குள் இருக்கும் அதே மரத்தின் சத்து இங்கே வரப்படும் பொழுது மற்ற காய்களுக்கு வளர்ச்சி இருக்காது.

இடைப்பட்ட ஒளியின் அலைகள் எது வருகிறதோ அதனுடைய வளர்ச்சி அதிகமாக இருக்கும்.
ஒரே கிளையில் ஒரு பழம் ருசியாக இருக்கும்,
மற்றொன்று ருசியாக இருக்காது
என்று இதையும் குருநாதர் காட்டுகிறார்.

இதைப்போன்ற இயற்கையின் நிலைகள் எவ்வாறு இருக்கின்றது என்பதைத்தான் கோகர்ணத்தில் அனுபவமாகக் காட்டினார் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்.