ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

January 26, 2016

பதிவு இல்லையென்றால் நினைவு ஏது? துருவ நட்சத்திரத்தைப் பதிவு செய்தால் உங்கள் நினைவின் ஆற்றல் அங்கே எளிதில் செல்லும்

அடிக்கடி உங்களுக்குச் சொல்லியுள்ளேன். மீண்டும் மீண்டும் உங்களுக்கு ஞாபகப்படுத்திக் கொண்டே வருகின்றேன்.

ஏனென்றால், சொன்னதைத் திரும்பச் சொல்லும் போது “சொன்னதைத்தான் சொல்கின்றார்..,” என்ற நினைவு வந்துவிடும். “சரி.., அப்புறம் பார்க்கலாம்” என்று கேட்பதையும் மறந்துவிடும்.

ஒரு செடி கசப்பின் தன்மை அந்த உணர்வை நுகர்ந்துவிட்டால்
மீண்டும் அதை நுகர்ந்தால் தான்
அந்தக் கசப்பின் உணர்வைக் கொண்டு
அந்த மரத்தின் தன்மை விளைய முடியும்.

ஒரு ரோஜாச் செடி நல்ல நறுமணத்தின் தன்மை மறந்துவிட்டோம் என்று அது மீண்டும் மீண்டும் நுகர்ந்தறிந்தால் தான் அந்த ரோஜாப்பூவின் நறுமணம் அங்கே வரும்.

ஒரு ஆடோ மாடோ எந்த உணர்வைத் தனக்குள் உணவாக எடுத்துக் கொண்டதோ
அதை மீண்டும் நினைவு கொண்டால்தான்
தன் இனத்தை எதனால் உடலாகி
நோயற்ற நிலைகளில் விளைகின்றதோ அது விளையும்.

அந்த தாவர இனத்தைப் புசித்த அந்த மாடு
மாற்றுத் தாவர இனத்தை மீண்டும் சாப்பிடும் என்றால்
இந்த உணர்வுக்கு எதிர் நிலையாகி
அந்த மாட்டிற்கே நோய் வரும்.

ஆக, நுகர்ந்து பார்த்துத் தன் இனம் அல்ல அன்று நகர்ந்து வெளியில் செல்கின்றது.

இதைப் போன்றுதான், நமக்குள் தீமை என்ற நிலைகளை நாம் கேட்டறிந்தாலும் அந்தத் தீமையின் உணர்வுகள் நமக்குள் எவ்வாறு செயல்படுகிறது என்ற நிலைகளிலிருந்து நாம் விடுபட வேண்டும்.

அவ்வாறு விடுபட வேண்டுமென்றால் அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை தனக்குள் புகுத்துதல் வேண்டும். அவ்வாறு புகுத்திவிட்டால் தீமையை அடக்கிடும் சக்தியாக மாற்றிட முடியும்.

ஏனென்றால், சூட்சமத்தில் மறைந்திருக்கும் உண்மைகளை நாம் அறிய முடியவில்லை. இதனை நாம் எளிதில் கண்டுணர்வதற்குத்தான் அந்த மகரிஷிகள் தெளிவான நிலைகளில் நமக்குள் தெளிந்த மனம் பெறுவதற்காகக் காட்டியுள்ளார்கள்.

இந்த மனித வாழ்க்கையில் தீமைகளை எவ்வாறு எளிதில் அகற்ற முடியும் என்ற நிலைகளை அது உருவமாக்கி அது கதைகளாக்கி காவியமாகப் படைத்துள்ளார்கள்.

அவைகளை நமக்குள் எண்ணத்தால் பதியச் செய்து எண்ணத்தின் துணை கொண்டு அவன் காட்டிய உண்மையின் வழிப்படி நாம் காற்றிலே மிதந்து கொண்டிருக்கும் உணர்வினைத் தனக்குள் பதியச் செய்யவேண்டும்.

எதையுமே பதிவு செய்யாதபடி நினைவுக்குக் கொண்டு வர முடியாது.
பதிவு இல்லையென்றால் நினைவு ஏது?

ஒருவர் நம்மைத் திட்டினார் என்று பதிவு செய்து கொண்டால் அது மீண்டும் நினைவு வரும். உதாரணமாக, ட்ரெயினில் வரப்படும் போது நல்லவராகப் பேசிக் கொண்டு வருகின்றார். அவரை உற்றுப் பார்க்கின்றோம்.

திடீரென்று அவரின் உள் உணர்வுகள் ஏதோ எதிர்பாராத பய உணர்வால் துடிக்கின்றார் என்று அந்த உணர்வின் தன்மையைப் பதிவாக்கிவிட்டால் என்ன நினைப்போம்?

நல்லபடியாக என்னிடம் பேசிக் கொண்டிருந்தார். பார்த்தால் திடீரென்று துடித்துப் போய்விட்டார். “ஐயோ.., நல்ல மனிதனுக்கு இப்படி வந்துவிட்டது” என்று நாம் சொல்வோம்.

ஆக, பதிவு இல்லையென்றால் நினைவு இல்லை. பள்ளியில் நீங்கள் படிக்கும் பாடங்களின் பதிவு இல்லையென்றால் நினைவு இல்லை. இதைப் போன்று பதிவின் நினைவே நமக்குள் வருகின்றது.

அதனால் தான், நீங்கள் மறந்தாலும் மகரிஷிகளின் அருளாற்றல் மிக்க சக்திகளை எமது குருநாதர் எமக்குள் பதியச் செய்த அதே முறைப்படி திரும்பத் திரும்ப உங்களுக்குள் யாம் பதியச் செய்து கொண்டேயிருக்கின்றோம்.

ஒரு வேப்ப மரம் தன் கசப்பை மீண்டும் மீண்டும் எடுப்பது போல்,
ஒரு ரோஜாச் செடி தன் நறுமணத்தை மீண்டும் எடுப்பது போல்
நீங்கள் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உணர்வுகளை மீண்டும் மீண்டும் எடுத்துக் கொண்டேயிருக்க வேண்டும்.

உங்கள் நினைவின் ஆற்றல் துருவ நட்சத்திரத்துடன் சுழன்று கொண்டே இருக்கும். அதனின் ஈர்ப்பு வட்டத்தில் நீங்கள் அனைவரும் வாழ்ந்திட வளர்ந்திட எமது அருளாசிகள்.

January 23, 2016

என்னை நீ தான் இயக்கிக் கொண்டிருக்கின்றாய் என் நினைவில் எப்பொழுதுமே நீ தான் இருக்க வேண்டும் ஈஸ்வரா, குருதேவா

“என் இசையில் நீ இசைப்பாய், ஈஸ்வரா
என் நினைவில் நீ வருவாய், ஈஸ்வரா”

நம்மை உருவாக்கியவன் ஈசன் என்ற நிலை இருக்கும் போது ஈசனிடத்தில் நாம் எப்படி மரியாதை செலுத்த வேண்டும்?

வேதனைப்படுவதையோ,
      வெறுப்படைவதையோ,
            கோபப்படுவதையோ,
                  கோபித்துக் கொள்வதையோ
                        வேதனைப்படச் செய்வதையோ
நாம் எண்ணுவதை அந்த உணர்வின் இசையாகத்தான் நம் உயிர் இயக்கும்.

நாம் எண்ணியதை இயக்குவது உயிர் ஆனால் நாம் எதை எண்ணி இயக்க வேண்டும் என்பதுதான் பொருள்.

“என் இசையில் நீ இசைப்பாய்” என்றால் எதை நாம் இசைக்க வேண்டும்?

1.   நாம் பார்ப்போரெல்லாம் நலம் பெறவேண்டும்,
2.   நாங்கள் பார்க்கும் குடும்பமெல்லாம் நலம் பெறவேண்டும்.
3.   எங்கள் சொல்லைக் கேட்போர் அனைவரும் வாழ்க்கையில் மகிழ்ந்திட வேண்டுமென்ற
இந்த உணர்வின் இசையை நாம் இசைக்க வேண்டும்.

இதை நாம் இசைத்தோம் என்றால் அந்த உணர்வுகளை உயிர் “ஓ….ம்” - இயக்கி அதை ஜீவ அணுவாக நமக்குள் மாற்றிவிடுகின்றது.

நாம் எண்ணிய உணர்வுகள் நம்முடன்
      நமக்குள் மகிழ்ச்சி பெறும் உணர்வின் அணுக்களாக நம்மை இயக்கும்.

ஆக, மகிழ்ச்சி பெறும் உணர்வின் அணுக்கள் நமக்குள் விளையப்படும் போது அந்த அணுவின் மலம் நம் உடலாக உருவாகின்றது.

நல்ல அணுக்களால் உருவாக்கப்பட்ட அந்த மலம் நம் உடலின் தன்மைகளுக்கு நம் உறுப்புக்களாக மாறுகின்றது. உடலான சிவனுக்கும் மகிழ்ச்சியாகின்றது.

வேதனைப்படுவதையோ, வேதனைப்படுத்தும் உணர்வுகளை நாம் எண்ணுவோம் என்றால் அந்த வேதனையின் உணர்வுகள் நமக்குள் அணுவாகி அந்த வேதனை உணர்ச்சியைத் தூண்டி அது தனக்குள் நுகர்ந்த உணர்வை அதனுடைய மலத்தை நம் உடலுக்குள் பாய்ச்சப்படும் போது என்ன ஆகின்றது?

வேதனைப்படுத்தும் உணர்வின் தன்மையை நாம் நுகர்ந்துவிட்டால் அதனால் உருவான அந்த அணுக்களின் மலம் நம் உறுப்புகளில் உருவாக்கிய நல்ல அணுக்களில் படும் போது அந்த அணுக்கள் செயலிழந்துவிடுகின்றது.

நல்ல அணுக்கள் செயலிழக்கும்போது
அந்த உறுப்புகளில் வேதனையைத் தோற்றுவிக்கின்றது.
அல்லது அந்த உறுப்புகள் அழுகிப் போகின்றது.
கெட்டுப் போய் விடுகின்றது.

இதைப் போன்ற நிலையிலிருந்தெல்லாம் நாம் மீண்டிட வேண்டும் என்பதற்காகத்தான்
என் இசையில் நீ இசைப்பாய்..,
என் நினைவில் நீ வருவாய்.., ஈஸ்வரா.

எப்பொழுது நான் சொன்னாலும்
நான் சொல்லக் கூடியதை நான் நினைக்கக்கூடியதை
என்னை இயக்கிக் கொண்டிருப்பது நீயாகவும்
என் நினைவில் எப்பொழுதுமே நீ இருக்கவேண்டும்
உன்னை மறவாத நிலைகள் நான் பெறவேண்டும்
ஓம் ஈஸ்வரா.. குருதேவா..,
என்பதுதான் குருநாதர் உணர்த்திய இந்த அருள் பாடலின் உண்மை நிலைகள்.

January 21, 2016

மாடசாமி, சுடலை மாடன், கருப்பணச்சாமி – ஞானிகளின் விளக்கம்

அன்றாட வாழ்க்கையில் நாம் சுவாசிக்கும் ஒவ்வொரு உணர்வின் செயல்களை நாம் மனிதர்கள் அறியும் நிலைகளுக்காக இராமாயணம், மகாபாரதம், கந்த புராணம், சிவ புராணம், விநாயக புராணம், தேவி புராணம் என்ற நிலைகளை ஞானியர்கள் உருவாக்கினர்.

மனித வாழ்க்கையில் இதையெல்லாம் நாம் அறிந்துணர்ந்து தீமைகளை எவ்வாறு அகற்ற வேண்டுமென்று தான் அந்தக் காவியங்களைப் படைத்துள்ளார்கள்.

நம் உயிர் ஈசனாக இருந்து இயக்கி
நாம் எதை எண்ணுகின்றோமோ அதை உருவாக்கிவிடுகின்றது.

நாம் எதை எண்ணுகின்றோமோ
அதை நம் கண் வழி காட்டுகின்றது.

எண்ணியதை உயிர் இயக்குகின்றது.
அந்த உணர்வின் சத்தை உடலாக மாற்றுகின்றது.

இதைப் போன்ற நிலைகளை சாதாரண மனிதர்களூம் கண்ணுற்றுப் பார்த்தவுடன் அறிவதற்காகக் காரணப் பெயர்களை வைத்து தெய்வங்களாக இதைக் காட்டியுள்ளார்கள்.

தீய நிலைகளையும் அதன் செயலாக்கங்களையும்
தீய தெய்வங்களாகக் காட்டியுள்ளார்கள் ஞானிகள்.
      ஆனால், நாம் உணர்திருக்கின்றோமா என்றால் இல்லை.

மாடசாமி, சுடலை மாடன், என்று காட்டியிருக்கின்றார்கள்.

அதாவது தீய உணர்வின் தன்மைகளை நாம் நுகரப்படும் போது நமக்குள் இருக்கும் நல்ல உணர்வுகளைப் பொசுக்கிவிடுகின்றது.

அதிலே கடும் நோயாக வேதனைப்படுகின்றது.
இதற்குப் பெயர் சுடலை மாடன்.

நம் வாழ்க்கையில் சந்திப்போர்கள் அவர்கள் வேதனைப்படுவதை நாம் உற்றுப் பார்த்தோம் என்றால் அவர் உடலிலே வேகும் வேதனை உணர்வை
நாம் நுகரப்படும்போது அது நமக்குள் வந்து
நம்மையும் வேக வைக்கின்றது - சுடலை மாடன்.

ஆகவே, அங்கே உற்றுப் பார்த்த நிலைகள் ஊழ்வினையாக மாறி நம்மை வேதனைப்படச் செய்து நமக்குள் வேதனையை உருவாக்கும் அதனின் செயலாக்கங்களை சுடலை மாடன் என்று பெயர் வைத்து உணர்த்துகின்றார்கள்.

அடுத்து கருப்பணச்சாமி என்று வைத்திருப்பார்கள். கருப்பணச்சாமி அருகிலே மோப்ப நாயைக் காண்பித்திருப்பார்கள்.

ஒருவர் என்ன செய்கிறார் என்று நுகர்ந்து பார்த்தால்
அதனின் உணர்வை நுகர்ந்தபின்
நம் அறிவின் தன்மை மங்கி நாம் செய்வதறியாது
பிறரைப் பழி தீர்க்கும் உணர்வையே உருவாக்கிவிடுகின்றது.

இதைப் போன்ற நிலைகள் நாம் நுகர்ந்த உணர்வுகள் நமக்குள் எவ்வாறு தெய்வமாகச் செயல்படுகிறது? என்ற நிலையைத் தெளிவாக் காட்டியுள்ளார்கள் ஞானிகள்.

ஆகவே, நமக்குள் உருப்பெரும் இத்தகைய தீமையான நிலைகளிலிருந்து நாம் மீண்டிடல் வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெறவேண்டும் என்று இதனை நமக்குள் இணைத்துவிட்டால் நல்ல உணர்வின் தன்மையாகத் தெளிந்த நிலைகள் கொண்டு நாம் சிந்தித்துச் செயல்பட முடியும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் உணர்வுகள் நமக்குள் பெருகப் பெருக தீமைகளை அகற்றிடும் எண்ண உணர்வுகள் நமக்குள் வலுப் பெற்று தீமையான உணர்வுகள் நமக்குள் நெருங்காது நம்மைக் காத்திட முடியும். எமது அருளாசிகள்.

January 20, 2016

துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் உணர்வலைகளை RADIO, TV போன்று பிரித்து எடுக்கக் கற்றுக் கொள்ளுங்கள்

ஒரு புத்தகத்தைப் படித்து வாயளவில் சொன்ன பின் டேப்பில் பதிவு செய்து ஒரு இயந்திரத்தின் தன்மை கொண்டு ஒலிக்கற்றைகளை வெளிப்படுத்துகின்றார்கள்.

அப்படி வெளிப்படுத்திய ஒலிக்கற்றைகள் சூரியனின் காந்தப் புலனறிவால் கவரப்படும்போது இன்ன அலை வரிசையிலிருந்து இது வெளிப்பட்டிருக்கின்றது. என்று சொல்லுகின்றார்கள்.

அலை வரிசை என்றால்
ஒவ்வொன்றுக்கும் ஒரு உணர்வின் உந்து விசைகளை
எலெக்ட்ரிக் எலெக்ட்ரானிக் என்ற நிலைகளில் மாற்றியமைத்து
இந்த ஒலி அலைகளைப் பரப்புகின்றான் விஞ்ஞானி.

அதை சூரியனின் காந்தப் புலனறிவு கவர்ந்து நம் பூமியில் தான் வைத்துள்ளது. நம் வீட்டிலிருக்கும் ரேடியோவை அதே அலை வரிசையில் நாம் வைத்தால் அதைக் கவர்ந்து கொடுப்பது ஏரியல்

இதே போல நம் கண் ஏரியல். அன்று கண்ணின் தன்மை கொண்டு உடலில் பதிவு செய்து "விண்ணை இயக்கினான் அகஸ்தியன்".

இன்று இயந்திரத் துணை கொண்டு
இதிலே காந்தப் புலனறிவின் அலைகளை உராயச் செய்து
உள்ளிருக்கும் அந்த ரேடியோவிற்குள் அந்த அலைகளைக் கவருவதற்கு
எந்த அலை வரிசையில் வைக்கின்றானோ இது கவர்ந்து கொடுக்கின்றது.

அது கவர்ந்து கொடுப்பதை இதன் ஒலி அலைகளை
ட்ரான்சாக்சன் (TRANSACTION) இதற்குள் நிறுத்தி
அந்த ஒலி அலைகளைப் பிரித்து
ட்ரான்சாக்சன் மற்றவைகளுக்கு அது செல்லச் செய்து
அதன் உணர்வு கொண்டு ஒலி பெருக்கிக்கும் (SPEAKER) மைக்கிற்கும் (MIC) அது உணர்வுகளைத் தெளிவாக்கக்கூடிய நிலைகளுக்கு விஞ்ஞானி கண்டு கொண்டு செய்துள்ளான்.

இதே போல டி.வி களில் எடுத்துக் கொண்டால் மனித உருவைப் படமாக்குகின்றான். ஒளி அலைகளாகப் பரப்புகின்றான். அதனை எந்த அலை வரிசையில் வைக்கின்றோமோ அதை வைத்து அந்தப் படக் காட்சிகளையும் அவனிடமிருந்து வெளிப்பட்ட சொற்களையும் இன்று பார்க்கின்றோம்.

இதைப் போன்றுதான் மனிதன் ஒரு தெய்வத்தை வழிபட்டு அந்த உணர்வினைத் தனக்குள் பதிவாக்கிக் கொள்கின்றோம். அதாவது
அங்கே கற் சிலை பல வண்ணங்களில் இருப்பதை
நாம் கண்ணால் பார்த்து
உணர்வின் அலைகளாக மாற்றித்தான் நாம் நுகர்ந்தறிகின்றோம்.

இல்லாமல் போனால் அதன் மேல் சூரியனின் ஒளிக்கற்றைகள் பட்டு உணர்வலைகளைக் கவர்ந்து அது எத்தகைய வண்ணங்களோ அந்த அலைகளைக் கவர்ந்து வெளி வருகின்றது.

அதன் உணர்வைத்தான் நம் கருவிழி தனக்குள் இதைப் பதிவாக்குகின்றது.

இந்தக் கருவிழி பதிவாக்கியதை
கண்ணுடன் சேர்ந்த காந்தப்புலன்
சூரியனால் கவரும் இந்த அலைகளைத் தனக்குள் எடுத்து
இந்தப் பூமியில் பரவுவதைக் கவர்ந்து
நமது ஆன்மாவாக மாற்றிவிடுகின்றது.

ஆன்மாவாக மாறியதை நாம் சுவாசிக்கும்போது உயிரில் மோதி இந்த உணர்வின் அலைகளை உடலிலே பரப்பச் செய்துவிடுகின்றது. அதன் உணர்ச்சிகள் எதுவோ அதன் செயலாக்கங்களை நம்மை அறியச் செய்கின்றது.

சாமி, நான் படிக்காதவன் என்னமோ சொல்கிறேன் என்று, “விஞ்ஞானத்தில் எங்கேயோ போய்விட்டார் இவருக்கென்ன தெரியும்? பத்தாம்பசலி...,” என்று நீங்கள் நினைத்து விடக் கூடாது என்பதற்குத்தான் இதைச் சொல்கிறேன்.

இன்று விஞ்ஞான அறிவில் எதைச் செய்கிறார்கள்? என்ற நிலைகளை நான் இங்கிருந்து நம் குருநாதர் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய நிலைகள் கொண்டு
இங்கே அலைகள் பரவியிருப்பதை
என்னால் நுகர முடிகின்றது. அறிய முடிகின்றது.

தீமை பயக்கின்றது, தீமைகளிலிருந்து நீங்கள் விடுபட வேண்டும் என்பதற்குத்தான் உங்களில் பதிவாக்கி இந்த நினைவு கொண்டு இந்த விஞ்ஞான அழிவினால் வரும் பேரழிவிலிருந்து நீங்கள் உங்களை மீட்டிக் கொள்ள வேண்டும்.

பல அலைகள் வந்தாலும் ரேடியோவும், டி.வியும் பிரித்து எடுத்து நமக்குத் தெளிவாகக் காட்டுகின்றது.

இதே போல சூரியனின் காந்தப் புலனறிவு கவர்ந்து அலைகளாக மாற்றி பூமிக்குள் வரும் துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் அலைகளைப் பிரித்து எடுக்கக் கற்றுக் கொள்ள வேண்டும்.

யாம் உபதேசிப்பதை உங்களுக்குள் இப்பொழுது நினைவால் பதிவாக்கிக் கொள்ளுங்கள். பதிவு கொண்ட நினைவினை நீங்கள் வலுக்கூட்டி எடுத்துக் கொள்ளுங்கள்.

நாளைக்கு எத்தகையை அதிர்வு வந்தாலும் அதைப் பிரித்து
துருவ நட்சத்திரத்தின் உணர்வலைகளை நீங்கள் கவர்ந்து
உங்களைக் காக்க முடியும்.
உங்களைச் சார்ந்துள்ளோரையும் நஞ்சிலிருந்து மீட்க முடியும்.

அந்த நிலைகளை நீங்கள் பெறவேண்டும் என்பதுதான் ஈஸ்வராய குருதேவர் எனக்கிட்ட கட்டளை.

நெல் வயல்களில் நீரை ஏற்றி வைப்பது போல் அருள் உணர்வுகளை உங்களுக்குள் ஏற்றி வைக்கின்றேன் - ஞானகுரு

வயல்களில் அருகம்புல் வந்துவிட்டது என்றால் அதற்காக வேண்டி “களை நீக்கியைத் தெளித்து” அதை நீக்குகின்றார்கள். களை நீங்குகின்றது. நெல் பயிரை எடுத்தபின் மீண்டும் இந்த மருந்தின் வேகம் குறைகின்றது. மறுபடியும் புல் வெளியில் வந்துவிடுகின்றது.

நெல் பயிர் விளைய வேண்டுமென்றால் வயலில் தண்ணீரை முழுவதும் ஏற்றி வைத்துவிடுகிறார்கள். நெல்லுக்குத் தண்ணீர் ஜாஸ்தி தேவை. புல்லையெல்லாம் அமுக்கி வைத்துவிட்டோம் என்றால் முளைப்பதே இல்லை.

தண்ணீர் விடாமல் மட்டும் இருந்து பாருங்கள்.
புல் திகு திகு என்று வந்துவிடும்.
       நெல் காணாமலே போய்விடும்.

இதைப் போன்றுதான் யாம் உங்களுக்கு வாக்குகளைக் கொடுக்கின்றோம். சதா உங்கள் ஒவ்வொரு உயிரையும் கடவுளாக மதிக்கின்றேன். அந்த உடலைக் கோவிலாக நினைக்கின்றேன்.

மனிதனாக உருவாக்கிய உயர்ந்த குணங்களையெல்லாம் தெய்வமாக மதிக்கின்றேன், வணங்குகின்றேன். அந்தத் தெய்வங்களுக்கும் உயிரான ஈசனுக்கும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி கிடைக்க வேண்டும்.
அவன் கட்டிய கோட்டையில்
மனது நிம்மதியாக இருக்க வேண்டும் என்று நான் தியானிக்கின்றேன்.

ஆனால், நீங்கள் எதைத் தியானிக்கின்றீர்கள்?

என்னை அவன் இப்படிப் பேசினான்,
       என் பையன் இப்படி இருக்கின்றான்;
நான் இவனுக்கு இப்படி உதவி செய்தேன்,
       ஆனால் என்னை மோசம் செய்துவிட்டான் என்று தியானிக்கின்றீர்கள்.

ஏனென்றால் நல்ல உணர்வுகளை (விதைகள்) எடுத்துத்தான் இந்த மனித உடல் உருவானது. எத்தனையோ கோடிச் சரீரங்களில் வாழும்போது
பல வேதனைகள் பட்டோம்,
இம்சைகள் பட்டோம்,
சங்கடப்பட்டோம்.
இதிலிருந்தெல்லாம் மீண்டு வந்தோம்.

எப்படி என்று கேட்கின்றீர்களா?

நாம் இன்று சுகமாக இருக்கின்றோம். வேதனையாகி நோயானால் டாக்டரிடம் சென்று வைத்தியம் செய்து குணப்படுத்திக் கொள்கிறோம்.

வாய்க்கு ருசியாக வேண்டும், உடலுக்குப் பலம் வேண்டும் என்றால் ஆட்டை அறுத்துச் சாப்பிடுகிறோம்.

ஒரு தவளை என்ன செய்கிறது? வண்டைப் பார்த்தவுடன் தன் பசியைப் போக்க அதை விழுங்குகிறது. ஆனால், அந்த வண்டின் உயிர் தவளையாகப் பிறக்கின்றது.

நீங்கள் பார்க்கலாம், ஓணான், பல்லி இவைகள் எல்லாம் அப்படியே பம்மிக் கொண்டிருக்கும். தன் இரையைப் பார்த்தவுடன் பூச்சி, ஈ, பாச்சா இவைகளை “லபக்” என்று அப்படியே விழுங்குகின்றது.

அதன் வாய்க்குள் சிக்கியவுடன் பூச்சி பல அவஸ்தைப்படுகிறது. உள்ளுக்குள் செல்லும்போது “இப்படி என்னைக் கொல்கிறதே..,” என்று எண்ணுகிறது. இந்த உணர்வோடு உயிர் ஒன்றிக் கொள்கிறது.

ஆனால், பூச்சி, ஈ அவைகளுக்கு இரையாகிவிடுகின்றது. இரையானாலும் அவைகளின் உயிர் இந்த உணர்வுடன் ஒன்றி பல்லியின் உணர்வை எடுத்து முட்டையாகி பூச்சி, ஈ இவைகளின் உயிர் பல்லியாகப் பிறக்கின்றது.
இப்படித்தான் நாம் பல அவஸ்தைப்பட்டு
மனிதனாக இன்று வந்திருக்கின்றோம்.

அவஸ்தைகளிலிருந்து தப்ப உடனே அடுத்த உடலுக்குள் போய்விட்டோம்.

ஆனால், இப்பொழுது நாம் எங்கே போகின்றோம்?
இப்பொழுது எதையெல்லாம் தியானிக்கின்றோம்?

என்னைக் காட்டிலும் மோசமாகப் பேசினால் சிறிது கௌரவமாக இருந்தால் டஎன்னை இப்படிக் கேவலமாகப் பேசிவிட்டான் பார்.., இவனை என்ன செய்கிறேன்?" என்று சொல்லி அந்தக் குடும்பத்தையே கெடுப்பதற்கு என்ன வேலையோ அதைச் செய்கின்றோம்.

அவன் கெடுமதி செய்தான்.
       அந்த உணர்வு நமக்குள் விளைகின்றது.
              இந்த விஷமான உணர்வுகள் என்ன செய்கிறது?

       நமக்குள் இன்னும் தேய்மானமாகப் போய்விடுகிறது. ஆனால், நாம் தவறு செய்யவில்லை

பல நல்ல சரக்குகளைப் போட்டு சுவை மிக்க பதார்த்தங்கள் ஜிலேபி, லட்டு இவைகளைச் செய்து வைத்திருக்கின்றீர்கள். அதில் ஒரு துளி மிளாகாய்த் தூள் பட்டால் என்ன செய்யும்? காரமாகத் தான் இருக்கும். அதே போல உப்புப் பட்டுவிட்டால் அந்த ருசியை மாற்றிவிடும்.

இந்த மாதிரி நம் உயர்ந்த குணங்களுக்குள் நம்மையறியாது பல நிலைகள் (தீமைகள், துன்பங்கள்) சேர்த்து இத்தனை நிலைகளை உண்டாக்குகின்றது.
நாம் தவறு செய்யவில்லை.
ஆக, நாம் இதைத் தான் தியானிக்கின்றோம்

ஆனால், நான் எதைத் தியானிக்கின்றேன்?

உங்கள் உயிரைக் கடவுளாக மதித்து உடலை ஆலயமாக மதித்து உங்களை மனிதனாக உருவாக்கிய குணங்கள் மகரிஷிகளின் அருள் சக்தியால் தீமைகளிலிருந்து விடுபட்டு நன்றாக வேண்டும் என்று தியானிக்கின்றேன்.

தியானத்தில் விளைந்த இந்த எண்ணம் உங்களிடம் சொல்லாகச் (உபதேசம்) சொல்லி இதைத் திருப்பி நீங்கள் எண்ணுங்கள் 
உங்கள் தீமைகள், நோய்கள் நீங்கிவிடும் என்று சொல்கிறேன்.
இது உங்களுக்குள் வித்தாகப் பட்டு
உங்களுக்குள் இருக்கும் கஷ்டங்களை நீக்குகின்றது.

நெல் வயலில் நீரை அதிகமாக விட்டு ஏற்றி வைத்தவுடன்
       நெல் விளையும் வரையிலும்
              (களை – புல் போன்றவைகள்) உள்ளுக்குள் அடங்கியே நிற்கும்.

கடைசியில் நீங்கள் நெல் அறுவடை செய்யும் போது நீரை வற்றச் செய்தவுடன் இந்தப் புல்கள் அனைத்தும் கல கல கல என்று வெளியில் வந்து விளைந்துவிடும்.

இதே மாதிரி உங்களுக்கு என்ன செய்கிறோம்?

ஏற்கனவே உங்கள் உடலுக்குள் பல வித்துகள் ஊழ்வினையாகப் பதிந்திருக்கின்றது.
அந்த வினைகளை எழுப்ப விடாதபடி
நெல் பயிரில் நீரை எப்படி ஏற்றி வைக்கின்றோமோ
அதே மாதிரி உங்களுக்கு வாக்குகளைக் கொடுக்கின்றோம்.
அந்தச் சக்தி நீங்கள் பெறவேண்டும் என்று சதா தியானிக்கின்றேன்.

இதை நீங்கள் பதிவு செய்து கொண்டபின் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெறவேண்டும் என்று எண்ணி உங்களுக்குள் கெட்டது எழும்ப விடாமல் தடுத்துக் கொண்டேயிருக்க வேண்டும்.

அதற்குத் தான் திரும்பத் திரும்ப உபதேசித்து அருள் ஞானிகளின் அருள் உணர்வுகளை வாக்குகளாகக் கொடுக்கின்றோம்.

வாக்குகளைக் கொடுப்பது மட்டுமல்ல,
       சொல்லிக் கொண்டேயிருக்கின்றோம்,
              தியானித்துக் கொண்டேயிருக்கின்றோம்
                         இந்த அலைகள் வந்து கொண்டேயிருக்கும்.
                                                                                 
ஒருவன் திட்டுவதைப் பதிவு செய்தபின் அவனைத் திருப்பித் திருப்பி எண்ணும் போது அன்றைய தினம் உங்கள் உடலெல்லாம் வலிக்கின்றது, கை கால் குடைகின்றது, கோபம் வருகிறது, கொதிப்பு வருகின்றது எல்லாம் வருகின்றது.

இதைப் போல உங்கள் உடலில் அந்த ஊழ்வினை என்ற வித்தாக இருந்து இயங்கி உடல் வலியை உண்டாக்குகின்றது, வேதனை, எரிச்சல் எல்லாம் வருகின்றது.

எரிச்சல் வரும் அந்த நேரத்தில் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் உடல் முழுவதும் படரவேண்டும் என்று இதைக் கூட்டிக் கொண்டே வந்தால் அப்படியே அது சிறிது சிறிதாக ஒடுங்கிப் போகும்.

நேற்றைக்கெல்லாம் தியானித்துவிட்டோம் இன்றைக்கு எதற்குச் செய்ய வேண்டும் என்றால் என்ன ஆகும்? வயிற்று வலி, உடல் வலி இருந்தது குறைந்து விட்டது. இனிமேல் மறுபடியும் எதற்குச் செய்யவேண்டும்? என்பார்கள்.

அப்படியே விட்டுவிட்டால் அது மறுபடியும் குதிரை ஏறிக் கொள்ளும். பிறகு அந்தந்த நேரத்திற்கு மட்டும் செய்தால் பத்தாது. ஏனென்றால் கெட்டதுக்குச் சக்தி ஜாஸ்தி.

இதை எதற்காகச் சொல்கிறேன் என்று கேட்பீர்கள்.

ஆடு புலியைப் பார்த்தவுடன்
       தன்னைக் கொன்றுவிடும்,
              தன்னைத் தின்றுவிடும் தின்றுவிடும் என்று நினைக்கின்றது.

அந்தப் புலியின் உணர்வை “எடுத்து எடுத்து” சேர்த்துக் கொள்கின்றது.

புலி ஆட்டினை அடித்தவுடன் புலியின் நினைவுடன் ஆட்டின் உயிரான்மா புலியின் உடலுக்குள் சென்றுவிடுகின்றது. அங்கே சென்று புலியின் உணர்வாக மாறுகின்றது.

இதைப் போலத்தான் தவளையைப் பாம்பு விழுங்கும்போது தவளையின் உயிரான்மா பாம்பின் உடலுக்குள் செல்கின்றது.

இன்று, இந்த மனித வாழ்க்கையில் நமக்குள் இத்தனை வேதனையான உணர்வுகள் வந்தால் நாம் எங்கே செல்வோம்?

வேதனை என்றாலே விஷம். ஆக, விஷம் கொண்ட உயிரினங்களுக்குள் தான் மறுபடி போக வேண்டியிருக்கும்.

ஆகவே, சற்றுச் சிந்தித்துப் பாருங்கள்.

இந்த மனித வாழ்க்கையில் இந்தத் தீமைகளையெல்லாம் வென்று உயிருடன் ஒன்றி உணர்வை ஒளியாக மாற்றி சப்தரிஷி மண்டலங்களுடன் அங்கே இன்று நிலை கொண்டிருக்கின்றார்கள்.

நாம் அங்கே சப்தரிஷி மண்டலத்தில் சென்று சேர வேண்டும். அதுதான் நம்முடைய கடைசி எல்லை.