ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

October 11, 2014

விளக்கு பூஜையின் தத்துவம் என்ன?

பொதுவாக நமது பெண்கள் மாலை ஆனதும் தீபம் ஏற்றி விளக்கு பூஜை செய்கிறார்கள். இதை தவிர, மாதந்தோறும் கோயில்களிலே 108 விளக்கு பூஜை 1008 விளக்கு பூஜை என்று கூட்டு தியானம் செய்கிறார்கள். இந்த விளக்கு பூஜையின் தத்துவம் என்ன?.

விளக்கைப் பொருத்தியபின் அங்கிருக்கக்கூடிய பொருள்கள் அனைத்தும் தெரிகின்றது.

ஆக, விளக்கை வைத்தால் எப்படிப் பொருள் தெரிகின்றதோ அந்தச் சுடரைப்போல எல்லாவற்றையும் அறிந்திடும் அருள் உணர்வுகள் நாங்கள் பெறவேண்டும் எங்களை அறியாது வரும் இருள்களை நீக்கிடும் அருள்சக்தி பெறவேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

இப்பொழுது கோவிலில் போய் விளக்கை ஏற்றி வைத்து இதை வணங்குகின்றார்கள் ஆனாலும், அதே சமயத்தில் இவர்கள் வீட்டில் என்னென்ன கஷ்டங்கள் இருக்கின்றதோ இதை எல்லாம் போக்க வேண்டும் என்ற உணர்வை வைத்து,
விளக்கை வைத்து
அந்த ஆண்டவனுக்கு இப்படி ஜெபித்து வந்தால்
நன்றாக இருக்கும் என்று செய்கிறார்கள்.

ஆக, நாம் பாலில் பாதாமைப் போட்டு அதிலே ஒரு துளி விஷத்தைக் கலந்து அந்த உணவைச் சாப்பிட்டால் நம்மை இறக்கச் செய்கின்றது.

இதைப்போலத் தான் விஷத்தன்மை கொண்ட உணர்வுகளில் இருந்து நாம் இதை விடுபடவேண்டும் என்றால்
விஷத்தன்மையை வென்ற
மகரிஷிகளின் அருள் சக்திகளைப் பெறவேண்டும்.

வழக்கமாக விளக்கு பூஜை செய்யும்போது நீங்கள் என்ன செய்கிறீர்கள்? புஷ்பத்தை எடுத்து அங்கே போட்டுக்கொண்டே இருப்பீர்கள்.

அந்த நேரத்தில் இதற்காக சில பேர் மந்திரத்தைச் சொல்லிக் கொண்டு போடுவார்கள். ஆக, இதனால் பலன் ஏதுமில்லை.

இதெல்லாம் பக்தி மார்க்கங்களில் ஒன்று சேர்த்து வாழ்வதற்கு ஒர் இணைப்புப் பாலமாகத்தான் அமைகின்றனரே தவிர அவர்கள் இந்த விளக்கு பூஜையினால் பலன் இல்லை. ஒன்று சேர்த்து வாழ முடியும்.

இந்த விளக்கு பூஜை நடந்து முடிந்த பிற்பாடு பாருங்கள் ஒருத்தருக்கொருத்தர் இந்த குறைபாடுகள் தான் வரும்.

ஆக குறைபாடுகளை நிவர்த்திப்பதற்கு ஏதாவது வழி இருக்கின்றதா?இல்லை. நாம் புற நிலைக்காக விளக்கை வைத்துச் சென்றால் சரியில்லை. 
 
சாதாரணமாக கோயில்களில் விளக்கைக் காட்டுகிறார்கள் என்றால் எதற்காகக் காட்டுகிறார்கள்?

அங்கே இருட்டறைக்குள் மறைக்கப்பட்டு சிலைக்கு பல அலங்காரம் செய்து கனிகளும் பொருள்களும் வைத்துள்ளார்கள். அப்பொழுது அங்கே விளக்கைக் காட்டும்போது என்ன தெரிகின்றது? மறைந்த நிலைகள் அனைத்தும் அந்த வெளிச்சத்தில் தெரிகின்றது.

 அப்பொழுது என்ன எண்ண வேண்டும்? பொருளறிந்து செயல்படும் இச்சக்தி நாங்கள் பெறவேண்டும் எங்கள் குடும்பத்தில் அனைவரும் பொருளறிந்து செயல்படும் இச்சக்தி பெறவேண்டும்.

நாங்கள் பார்ப்போர் குடும்பங்களில் உள்ள அனைவரும் பொருளறிந்து செயல்படும் இச்சக்தி பெறவேண்டும். இந்த ஆலயம் வருவோருக்க்கெல்லாம் பொருளறிந்து செயல்படும் இச்சக்தி பெறவேண்டும் என்று இப்படி எண்ண வேண்டும்.

இப்படி எண்ணும்போது இந்த விளக்கு பூஜை எப்படி இருக்கும்? கோவிலில் இப்படிக் காட்டப்படுகின்றது.

ஆகவே, அந்த விளக்கு என்பது என்ன?

நாம் வேதனைப்படும்போது நமக்குள் மனம் இருண்டுவிடுகின்றது. அப்பொழுது, நம் மனம் இருளாது அருள் ஜோதியாக இருக்கவேண்டும், தெளிந்த மனம் பெறவேண்டும்
என்ற உணர்வை எண்ணி,
அந்த உணர்வை நாம் நுகர்ந்தோமென்றால்
அது உண்மையான விளக்கு பூஜை ஆகும்.

October 10, 2014

அனைத்தும் கைகூடும் ஞானம் எது...?

மக்கள் எல்லோரும் நம் சகோதரர்கள்
உலகத்தில் வாழும் மக்கள் அனைவரும் நம் சொந்தம். அவர்கள் அனைவரும் நம் சகோதரர்கள்.

ஒவ்வொருவரிடத்திற்குள்ளும் உள் நின்று இயக்கும் ஈசனுக்கு சாதியுமில்லை, மதமுமில்லை, மொழியுமில்லை.
இலக்கு இல்லாதவர் - இருளில் விளக்கு இல்லாதவர்
ஏங்கி எடுக்கும் உணர்வே ஈசனுக்கு உணவு.
அந்த உணர்வை நல் ஒளியின் உணர்வாய் வளர்ப்பது நமது கடமை.

நம்முடைய லட்சியம் எதுவாக இருக்க வேண்டும்? என்பதை நாம் அறிய வேண்டும். ஏனெனில்,
இலக்கு இல்லாதவர்
இருளில் விளக்கு இல்லாதவர் போன்றவர்.

உலகில் உயிர் ஒன்று மட்டுமே நமக்குச் சொந்தம். அந்த உயிருக்கு எது தேவையோ அதைப் பெறவேண்டும். அதனை குருவின் துணையுடன் பெறவேண்டும்.
அறிய வேண்டும் என்ற ஞானம்
இன்னும் அறிய வேண்டும் என்ற ஆவல் எழும்போது
அது ஞானத்தின் வளர்ச்சிக்கு உரமாகின்றது.

அனைத்தும் தெரியும் என்கிறபொழுது
அது ஞானத்திற்கு முற்றுப் புள்ளியாகின்றது.

பின், முன்னால் இருக்கும் உண்மைகள் கூட கண்ணால் காணமுடியாத் நிலை உருவாகிவிடும்.
அனைத்தும் கைகூடும் ஞானம்
உண்டு என்பவருக்கு உள்ளதாகவும்
இல்லை என்பவருக்கு இல்லாததாகவும்
செய்விக்கின்ற உணர்வின் தன்மையை அறிந்து
தன் ஆன்ம ஞானத்தை  வளர்ப்பவருக்கு அனைத்தும் கை கூடும்.

October 7, 2014

விதியை மதியால் வெல்லும் வழி - ஞானகுரு

நம் வாழ்வில் ஏற்படும் சாதனைகளோ அல்லது 
சோதனைகளோ எதுவாக இருப்பினும் அது
நாம் சுவாசிக்கும் உணர்வுகள் நம்மிடம் இணைந்து
ஊழ்வினையாக ஆவதால் உண்டாகும் விளைவே.
ஆகவே இது விதி.

கொடிய நஞ்சு போன்ற நஞ்சுகளையும் துன்பங்களையும் ஒடுக்குவதற்கு ஒரே வழி - மகரிஷிகளின் அருள் சக்திகளைப் பெறுவதே என்று அறிந்து,
அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளைப் பெற
குரு காட்டும் வழியில் செயல்படுவதே “மதி”.

ஆக, இந்த மதியால் விதியை வெல்ல முடியும் என்பதை நாம் அனைவரும் அறிய வேண்டும்.

October 6, 2014

தீமைகளை நீக்க நாம் பழகிக் கொள்வோம் - 3

உயிரினங்களிடம் பாசம் பரிவு காட்டலாமா?
ஆடு, மாடு, நாய், பூனை போன்ற பிற உயிரினங்களிடம் நாம் காண்பிக்கும் பாசம், பரிவு கூட நம்மிடத்தில் சாகாக்கலையை உருவாக்கிவிடும்.
நல்ல குணங்களுக்குச் சுதந்திரம் வேண்டும்
நமக்குள் நல்ல உணர்வுகளை சுதந்திரமாக இயங்கவிடவேண்டும்.

வெறுப்பு, வேதனை, கோபம், குரோதம் போன்ற
நஞ்சான உணர்வுகளுக்கு
நமது நல்ல உணர்வுகளை அடிமைப்படுத்திவிடக் கூடாது.
தீமைகளைப் போக்கிடும் சக்தி துருவ நட்சத்திரத்திற்குத்தான் உண்டு
அன்பு, பாசம், பரிவு, பொறுமை, சாந்தம் என்று
நற்குணங்கள் அனைத்தும் மனிதரிடத்தில் இருந்தாலும்
சந்தர்ப்பங்கள் மனிதரிடத்தில் தீமைகளைக் கொண்டு வந்துவிடும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி ஒன்றுதான் தீமைகளைப் போக்கும் அருமருந்தாகும்.
தீய உணர்வுகள் நம்மை நெருங்காது
ஒரு செடி பிறிதொரு செடியின் மணத்தைத் தன்னருகில் நெருங்கவிடாது.

அதே போன்று, மகரிஷிகளின் அருள் உணர்வுகளை நம்முள் வளர்த்துவிட்டால்
அது தீய உணர்வுகளை, தீய எண்ணங்களை
நம் அருகே நெருங்கவிடாது.

October 4, 2014

நாம் தெரிந்து கொள்ள வேண்டிய உண்மையின் நிலைகள் - 9

பன்றியிலிருந்துதான் மனிதன் தோன்றினான்
மனிதன் குரங்கிலிருந்து தோன்றினான் என்பது விஞ்ஞானிகள் கருத்து.

ஆனால், உணர்வின் இயக்கத் தொடர் கொண்டு
பன்றியின் உயிரான்மாதான்
அடுத்து மனித சரீரத்தை உருவாக்குகின்றது.

பன்றியின் உயிரான்மா நஞ்சான உணர்வுகளைப் பிளந்து நல் உணர்வுகளைத் தனக்குள் இணைக்கும் நிலையாகத்தான் உணர்வினை வளர்த்து, தனது மறு பிறவியில் மனிதச் சரீரத்தைப் பெறுகின்றது.

இதுதான், கடவுளின் அவதாரத்தில் வராக அவதாரமாகக் காண்பித்து மெய்ஞானிகள் நமக்கு உணர்த்திய பேருண்மை ஆகும்.
பூர்வ புண்ணியம் என்றால் என்ன?
தாய் எண்ணிய உணர்வுகள் அந்தத் தாயின் கருவில் வளரும் குழந்தைக்கு நல் உணர்வு ஆகின்றது.

கருப்பையில் இருக்கும் பொழுது பெற்ற நல் உணர்வுகளே அந்தக் குழந்தைக்குப் பூர்வ புண்ணியம்.
மெய்ஞானியர் அனைவரும்
தாம் பெற்ற பூர்வ புண்ணியத்தினால்தான்
தம்மிடத்தில் மெய்யுணர்வின் தன்மையைப் பெற்றார்கள்.
கொன்றால் பாவம் - தின்றால் போகுமா?
“கொன்றால் பாவம் - தின்றால் போகும்” என்பார்கள். இது தவறு.

எந்த ஜீவனின் மாமிசமோ அதனின் உணர்வின் மணம் தின்றவரின் உடலில் இணைகின்றது.

அதனின் உணர்வின் மணத்தை அவர் தனக்குள் அதிகமாக்கியபின்,
அவருடைய உடலை விட்டுப்பிரியும் உயிரான்மா
நேராக அந்த ஜீவனின் ஈர்ப்புக்குள் சென்று
அந்த ஜீவனின் ரூபமாக சரீரம் பெறுகின்றது.
இதுதான் உண்மை.
அடுத்த சரீரத்தின் கணக்கு
எதனின் உணர்வை நம்முள் (நம் உடலுக்குள்) அதிகமாக இணைக்கின்றோமோ அதனின் உணர்வுகளுக்கொப்ப நமது அடுத்த சரீரம் அமைகின்றது.

இதை நமக்கு உணர்த்தும் விதமாக சிவனின் கணக்குப்பிள்ளை நந்தீஸ்வரன் என்றுரைத்தார்கள் மெய்ஞானிகள்.

ஆகவே, நாம் மகரிஷிகளின் அருள் சக்திகளை நமக்குள் சேர்ப்போம். உயிருடன் ஒன்றுவோம். உடலை விட்டுச் செல்லும்போது உயிரைப் போன்றே ஒளி நிலை பெறுவோம். ஒளியின் சரீரம் பெறுவோம்

October 2, 2014

ஈஸ்வராய குருதேவர் நாமெல்லாம் கடவுளாக வேண்டுமென்று விரும்புகின்றார்

நமது குருநாதர் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்
நம்மையெல்லாம் கடவுளாக்குகின்றார்
நம்மைக் கடவுளாக மதிக்கின்றார்
நாமெல்லாம் கடவுளாக ஆகவேண்டும்
என்று விரும்புகின்றார்.

அதனைத்தான் செயல்படுத்த அவர் காட்டிய நெறிகளில் நீங்கள் பெறவேண்டுமென்று அந்த உணர்வை இங்கே வழிகாட்டுகின்றார்.

அவர் உணர்த்திய உணர்வுகளை உங்களுக்குள் பதியச் செய்யும்போது அந்த முறைப்படி செய்தால்
அவனுடன் அவனாகி,
அவனின் ஒளியாக நீங்கள் ஆக முடியும்.

உயிர் நாம் எடுக்கும் உணர்வின் தன்மையை அறிவாகக் காட்டுகின்றது. ஆக அறிவாகக் காட்டும் பொழுது இருளையும், மணத்தையும், மற்றவைகளையும் நுகரும் உணர்வாக நமக்குள் காட்டினாலும் உணர்வின் தன்மை நிலைகொண்டு ஒளியாக மாற்ற வேண்டும்.

மகரிஷிகளின் அருள் உணர்வுகளை நமக்குள் சேர்க்கும் பொழுது என்றும் ஒளியான நிலை பெறமுடியும்.

நம் உயிர் அனைத்தையும் உணர்த்துகின்றது. 
அதைப் போல அனைத்தையும் உணர்த்தும் ஆற்றலாக 
நாம் உணர்வின் ஒளியாக மாறுதல் வேண்டும். 

அப்படி அடைந்து விண் சென்றவர்கள் தான் மகரிஷிகள். அதுதான் கல்கி.

தொழில்நுட்பம் சம்பந்தமான பாடத்தைப் படிக்கும்பொழுது நீங்கள் என்ஜினியராக ஆகின்றீர்கள்.

விஞ்ஞானம் சம்பந்தமான பாடத்தைப் படிக்கும் பொழுது நீங்கள் ஒரு விஞ்ஞானியாக ஆகின்றீர்கள்.

மருத்துவத்தைப் படிக்கும்பொழுது நீங்கள் ஒரு டாக்டராக ஆகின்றீர்கள்.

இதே போன்று மெய்ஞானத்தின் உணர்வுகளை உங்களில் வளர்க்கும்போது நீங்கள் மெய்ஞானிகளின் அருள்வட்டத்தில் மெய்ஞானி ஆகின்றீர்கள்.

குருவின் அருள் எப்படிப்பட்டது?

செடிக்கு நீர் போன்றது குருவின் அருள்
ஒரு செடிக்கு நீர் ஊற்றுவதினால் அந்தச் செடி நீரின் துணை கொண்டு காற்றிலுள்ள தன் சத்தைக் கவர்ந்து தன்னை வளர்த்துக் கொள்கின்றது.

நமது உயிரான்மாவும் ஒரு செடி போன்றதே.
செடிக்கு நீர் போன்று குருவின் அருள்.

எனவே, குருவின் துணை கொண்டு காற்றில் பரவிப் படர்ந்துள்ள மகரிஷிகளின் அருள் உணர்வை நாம் கவர்ந்து, நம்மில் நாம் மெய்யுணர்வை வளர்ப்போம்.
அறியாது வரும் நஞ்சிலிருந்து மீட்டிடும் குருவின் அருள்
ஐந்தறிவு கொண்ட உயிரினங்கள் தான் உண்ணும் உணவிலுள்ள விஷத்தை உடலாக மாற்றி, நல்ல தன்மைகளைத் தன் கழிவாக மாற்றிவிடுகின்றன.

ஆறறிவு கொண்ட மனிதர்களோ நல்ல தன்மைகளைத் தமது உடலாக மாற்றி, விஷத் தன்மைகளைத் தமது கழிவாக மாற்றிவிடுகின்றனர்.

மனிதர் ஆறாவது அறிவின் துணைகொண்டு நஞ்சினை ஒடுக்கி நல்ல தன்மைகளைச் சேர்க்கும் தன்மை பெற்றிருந்தாலும்
தம்மையறியாது சேரும் நஞ்சிலிருந்தும்
தம்மைக் காத்திடும் நிலை பெறவேண்டும்.
அதற்கு குருவின் அருள் துணை வேண்டும்.
குழப்பமான நேரங்களில் குருவின் அருளை ஏங்கிச் சுவாசிக்க வேண்டும்
குழப்பங்களும் கவலைகளும் தம்மைச் சூழ்கின்றபொழுது அதனின் வேதனையில் ஆழ்ந்துவிடுகின்றனர்.

அந்த சமயத்தில் குருவையும் குரு தமக்குக் கொடுத்த அருள் வாக்கையும் எண்ணுவதற்குப் பலர் மறந்துவிடுகின்றனர்.

ஆனால், இது போன்ற சந்தர்ப்பங்களில் குருவையும் குரு தமக்குக் கொடுத்த அருள்வாக்கையும் எண்ணி ஏங்கும்பொழுது
நம்மைச் சூழ்ந்த குழப்பங்களும் கவலைகளும்
குருவின் அருளால் அகன்று
மகிழ்ச்சி உண்டாவதைக் காணலாம்.
குருவின் அருளால் விண்ணின் ஆற்றலைப் பெறுவோம்
குருவின் அருள் துணை கொண்டு
தன்னில் தன்னையறிந்து
விண்ணின் ஆற்றலைத் தன்னுள் பெற்று
பிறவாநிலை எனும் பெருநிலை பெறுவோம்.