ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

April 21, 2025

நம்மைப் பலவீனப்படச் செய்வது எது…?

நம்மைப் பலவீனப்படச் செய்வது எது…?


நான் என்னுடைய அனுபவத்தில் சொல்கின்றேன். 20 வருட காலம் குருநாதர் காட்டிய அருள் வழியில் எதை எதை எப்படி எல்லாம் நுகர்கின்றோமோ…? அது எல்லாம் எப்படி என்னை இயக்குகிறது…? என்று அதைக் காட்டுகின்றார்.
 
உதாரணமாக காட்டுக்குள் செல்லப்படும் பொழுது ஒரு மோசமான இலை இருக்கின்றது. அதை நசுக்கியவுடன் ரொம்ப நாற்றம் அடிக்கின்றது.
1.நாற்றம் அடிக்கின்றது என்று முகத்தைச் சுளித்தால்
2.இந்த உணர்வின் தன்மை முகத்தைச் சுளிக்க வைப்பது எது…? நீயா இல்லை அந்தப் பச்சிலையா…? என்று கேட்பார்.
 
அந்த பச்சிலையின் உணர்வு உயிரிலே பட்ட பின் அந்த உணர்ச்சியின் தன்மை உடலாக்கப்பட்டு
1.அந்த உணர்ச்சிகள் உன்னை எப்படி முகத்தைச் சுளிக்க வைக்கின்றது…?
2.வாந்தி உமட்டல் எப்படி வருகின்றது…?
3.இது எதனுடைய காரணம்…?
 
நீ நுகர்ந்த உணர்வு தான் அதை இயக்குகின்றது. இயக்குவது யார்…? உயிரே…! ஆக அந்த உயிர் இயக்கும் உணர்வுகளில் இருந்து இது எப்படிச் செயல்படுகின்றது…? என்பதனை இப்படித் தெளிவாக்குகின்றார்.
 
இதைப்போல் எத்தனையோ வகையான பச்சிலைகளை நுகரும்படி செய்கிறார். சந்தர்ப்பங்களில் என்னை இடக்கு முடக்கான இடங்களில் கொண்டுபோய் ஏற்றி வைத்துவிட்டு நீ இங்கே இரு… நான் வருகின்றேன்…! என்று போய்விடுவார்.
 
அப்பொழுது அவர் போனவுடனே என்ன நடக்கிறது…? அவர் இருக்கும் பொழுது முதலில் தைரியமாக இருந்தது. ஆனால் அதற்குப் பின் அந்த இடத்திலிருந்து கீழே இறங்க முடியாத நிலையும் பயம் கொள்ளும் உணர்ச்சிகளை எனக்குள் ஊட்டுகிறது.
 
இந்த உணர்வுகள் தோன்றிய பின் அதன் பின் நம் உடலில் நுகர்ந்த உணர்வுகள் என்னென்ன செயல்கள் செயல்படுகின்றது…? அதிலிருந்து நீ எப்படி விடுபட வேண்டும்…? என்று இவ்வளவும் ஞாபகப்படுத்தினாலும்
1.அந்தப் பயம் என்ற உணர்வு வரப்படும் பொழுது இதை மறந்து விடுகின்றோம்.
2.மறந்தவுடன் நடுக்கம் ஆகின்றது மன உறுதியே இருக்காது. நாக்கு கூட சில நேரங்களில் வறண்டு போகும்.
 
ஒரு ஆபத்தான இடத்தில் விட்டவுடன் அந்த உணர்ச்சியின் வேகம் வரும்போது இதை உற்றுப் பார்க்கும்போது நாக்கு வறட்சியாகி விட்ட்து. தண்ணீருக்கு எங்கே செல்வது…? அப்பொழுது வறட்சி ஆகும்போது பலவீனமடைகின்றது.
 
இதையெல்லாம் எது இயக்குகின்றது…?
 
1.நீ உன்னுடைய எண்ணத்தால் நுகர்ந்த நிலை உன்னைப் பலவீனப்படுத்தச் செய்து
2.அப்பொழுது நீ எடுக்கும் மன பலம் குறைகின்றது.
3.இங்கே வறட்சி ஆகின்றது. உன் உடலில் வேர்வையாகின்றது.
 
ஆக இதன் உணர்வுகள் உள் நின்று வெப்பமாகி இதன் உணர்வுகள் ஆவி ஆக்கப்படும் போது நீ எந்தப் பொருளைத் தொட்டாலும் அது வழுக்கும் தன்மை வருகிறது. மீண்டும் இங்கே உன் பலவீனம் தான் காட்டப்படுகின்றது.
1.பலவீனம் காட்டுவது எது…?
2.உன்னுடைய எண்ணம் தான்.
 
உயிரிலே பட்டு இயக்குவது யார்…? அந்த உயிரே தான். அந்த உணர்ச்சியின் தன்மை உன் உடலில் இயக்குவது யார்…? இந்த உயிரே தான் என்ற நிலையில் இப்படி ஒவ்வொரு நிலைகளையும் தெளிவாகக் காட்டுகின்றார்.
 
நீங்கள் சற்று சிந்தித்துப் பாருங்கள். இதைத்தான் ஞானியர்கள் அரங்கநாதன் என்றும் இந்த அரங்கத்திற்குள் உணர்வின் தன்மை மோதும் போது அந்த உணர்ச்சிகள் (ஆண்டாள்) நம்மை ஆளுகின்றது அது சொல்லைக் கேட்பவரையும் ஆளுகின்றது என்று தெளிவாக்கினார்கள்
 
இப்பொழுது வேறு ஒன்றும் தேவையில்லை. நாம் கொஞ்சம் தைரியமாக இருப்போம், ஒருத்தர் முடியாத நிலையில் அவர் பலவீனமான உணர்வை நுகர்ந்த பின் அந்த நாதத்திற்கொப்ப அந்த உணர்ச்சிகள் இயக்கப்பட்டு அவருடைய செயலைப் பார்க்கும்போது நாம் வலுவாக இருப்பவர்கள் என்ன செய்வோம்…?
 
என்னப்பா…? இதற்கெல்லாம் போய் நடுங்கிக் கொண்டிருக்கின்றாய்…! என்று நாம் கேலி செய்வோம். ஆனால் அவருக்கு அங்கே முடியாத நிலை. ஆனால் நாம் கேலி செய்வோம்.
 
அந்தக் கேலியின் தன்மை சிரிக்கச் சிரிக்க மீண்டும் அவருடைய பலவீனத்தைத் தான் ஊட்ட முடியும். ஆனால் அவருக்குத் தெளிவூட்டுகின்றோமோ…?
 
ஆனால் அதே சமயத்தில்
1.அவன் முடியாத நிலைகளை நாம் நுகர்ந்து விட்டால் அடுத்து இந்த மாதிரிச் சந்தர்ப்பம் வரும்போது நமக்கும் இதே மாதிரி நடுக்கம் வரும்.
2.நடுக்கம் வரும்போது யாராவது சிரித்தால் நமக்கு உடனே கோம் வரும்.
3.என்னைப் பார்த்து அவன் கிண்டல் செய்கின்றான் பார் என்று கோபம் வரும்... அல்லது பதட்டம் வரும்.
 
ஆக
1.அந்தந்தச் சந்தர்ப்பத்திற்குத் தக்கவாறு நுகர்ந்த உணர்வுகள் உணர்ச்சிகளாக பரவப்பட்டு
2.நம்மை ஆளுவது நாம் எண்ணிய எண்ணங்கள் தான் என்பதை நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.
 
ஆகவே நமது வாழ்க்கையில் நாம் இதைப் போன்ற நிலைகளில் இருந்து நாம் ஒவ்வொரு நிமிஷமும் எத்தனையோ வகையான ஆயிரக்கணக்கான நிலைகள் வருகின்றது. அதிலிருந்தெல்லாம் நாம் விடுபட வேண்டும்.