ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

August 2, 2022

எதனையுமே ஒளியாக மாற்றும் கலை தான் வேகாக்கலை

டி.வி. ரேடியோ ஸ்டேசனில் எந்த அலைவரிசையில் ஒலிபரப்பு செய்கின்றனரோ... நம் வீட்டில் அதிலே எதைத் திருப்பி வைக்கின்றோமோ அதை இழுத்துப் படமாக அல்லது பாடலாகப் பாடுகிறது.

அதே போல ஒரு மரத்தில் விளைந்த வித்தினை நிலத்தில் ஊன்றினால் எந்த மரத்தின் சத்தை எடுத்து அது விளைந்ததோ... அந்தச் சத்தினைத் தான் அது கவரும்... அதே மரமாக விலையும்.

இதைப் போல் சந்தர்ப்பத்தால் நாம் எடுத்துக் கொண்ட
1.வேதனை சலிப்பு கோபம் ஆத்திரம் போன்ற குணங்கள்
2.நம் உடலுக்குள் வீரியமான சத்தாக வலு கொண்ட நிலையில் இருந்தால் அது தான் முன்னணியில் இருக்கும்.
3.நல்ல குணங்களை நமக்குள் விடாதபடி அது தடுத்துக் கொண்டிருக்கும்.

அப்படித் தடுக்கும் நிலைகளை மாற்றி அருள் ஞானிகளின் சக்திகளைப் பெறச் செய்வதற்குத் தான் இப்பொழுது அந்த மெய் ஞானிகளின் ஆற்றல்களை... “அந்த அடிப்படை ஆதாரத்தையே” உங்களிடம் பதிவாக்குவது.

அன்று அகஸ்தியன் எப்படி இயற்கையின் பேருண்மைகளை அறிந்தானோ அதைப் பதிவாக்கி அதனின் தொடர் வரிசையிலேயே அடிக்கடி நாம் எண்ணி எடுக்க வேண்டும்.

அதை வளர்த்துக் கொள்ளக்கூடிய அந்தத் தகுதியை ஒவ்வொருவரும் பெற வேண்டும் என்பதற்குத் தான் பல முறை உபதேசித்திருந்தாலும் ஆயுள் கால மெம்பருக்கு யாம் (ஞானகுரு) ஆசீர்வாதம் கொடுப்பதும் அந்த அரும் பெரும் சக்திகளைப் பதிவாக்குவதும்.

ஏனென்றால் ஆழமாகப் பதிவாக்கிக் கொண்ட பின் அந்த அருள் உணர்வைப் பெற்று நீங்கள் எங்கே சென்றாலும் வாழ்க்கையில் வரும் இடைஞ்சல்களை மாற்றிக் கொள்ள முடியும்.

புறத்திலிருந்து வருவதைச் சூரியன் தன்னுடைய பாதரசத்தால் மோதி அதிலிருக்கும் விஷத்தைப் பிரித்துவிட்டு வெப்பமும் காந்தமுமாக உருவாக்குகின்றது... “இயக்க அணுக்களாக” வெளிப்படுத்துகின்றது.

அதே சமயத்தில் சூரியனிலிருந்து வெளி வரும் வெப்ப காந்தம் அந்த விஷத்தைத் தனக்குள் கவர்ந்து கொண்டால்
1.அதனை இணைத்தே வாழ்கிறது... அந்த விஷத்தைக் கொல்லவில்லை.
2.இதைத் தான் “இரணியன் சாகாவரம் கேட்டான்...” என்று சொல்கிறார்கள்
3.ஏனென்றால் எல்லாவற்றுக்கும் இந்த விஷம் இருந்தே ஆகவேண்டும்.

இது சாகாக்கலை.

ஒரு சத்துக்குள் இந்த விஷம் போயிருந்தால் அந்தச் சத்தை இயக்கச் சக்தியாக மாற்றுகிறது. ஆகவே... எதனையுமே சாகாக்கலையாக அதனதன் உணர்வுகளை உருவாக்கும்...! என்பது பொருள்.

ஆனால் நம் உயிரோ வேகா நிலை பெற்றது.

உயிர் எதிலுமே வேகுவதில்லை. அந்த உயிரைப் போலவே ஒவ்வொரு உணர்வையும் வேகா நிலையாக ஜீவ அணுவாக மாற்றும் சக்தி இந்த மனித உடலில் தான் உண்டு.

நமது ஆறாவது அறிவு கார்த்திகேயா... தீமைகளை நீக்கும் உணர்வுகள் சேனாதிபதி.
1.தீமைகளைத் தடுத்து நிறுத்தி நமக்குள் இருக்கும் நல்ல குணங்களை ஒழுங்குபடுத்தி
2.உயிரைப் போலவே உணர்வின் ஒளிமயமாக ஆவது தான் வேகா நிலை.

அதை அடைவதற்குத் தான் இதை எல்லாம் சொல்கிறோம்.