ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

August 3, 2022

அன்று அகஸ்தியன் வாழ்ந்த வாழ்க்கையும் இன்று கணவன் மனைவி ஒன்றி வாழும் வாழ்க்கையும்

இப்போது கணவன் மனைவியுமாக வாழ்பவர்கள் இரு மனமும் ஒன்றித் தான் வருகிறார்கள்.

எப்படி...?

தொழிலில் ஒரு நஷ்டமாகி விட்டால் என்ன ஆகிறது...?

நல்ல முறையில் நான் வேலை செய்கின்றேன் ஆனால் என்னை வேதனைப்படுத்துகின்றார்கள் என்று கணவன் மனைவியிடம் சொல்லும் நிலை வருகின்றது.

மனைவியோ தன் கணவரை நினைத்து வேதனையை உருவாக்கிக் கொள்கிறது. கணவனை நினைக்கும் போதெல்லாம் வேதனையைத் தான் மனைவியாலும் எண்ண முடிகிறது.

வேலைக்குச் சென்று விட்டார் என்றால்...
1.“இந்த மாதிரி நஷ்டமாகின்றதே...!” என்று வேதனையாக மனைவி நினைக்கும் போது
2.கணவனுடைய சிந்தனை குறைந்து செய்யும் வேலையில் பலவீனமாகும்.

ஒரு வியாபாரத்திற்கே செல்கிறார் என்றால் “அங்கே கலவரம் நடக்கிறது... இங்கே சண்டையிடுகின்றார்கள்...” என்று வீட்டில் பெண்கள் நினைத்துக் கொண்டிருந்தார்கள் என்றால் அதே உணர்வு தன் கணவருக்குத் தாக்கப்பட்டுப் பயமும் பதட்டமும் வந்து கொண்டேயிருக்கும்.

பதட்டமும் பயமும் வந்ததும் இவர் வைத்திருக்கும் பொருளைக் கூட இவருக்குத் தெரியாமல் தூக்கிக் கொண்டு சென்றுவிடுவார்கள். பொருள் காணாமல் போகும்.

இந்த மாதிரிச் சில நிலைகள் எல்லாம் நடக்கும்.

கணவனும் மனைவியும் ஒற்றுமையாகத் தான் இருக்கின்றார்கள்
1.ஆனால் வேதனை கலந்து தான் இருக்கின்றார்கள்.
2.வேதனையைத் தான் இருவரும் வளர்க்க முடிகிறது
3.இருவர் உடலிலும் நோயாக மாறுகிறது.

வேதனை அதிகமாகும் போது கடைசியில் இந்த உணர்வுகள் விஷமாகப் போகும் போது இருவர் உடலிலும் பகைமையாகின்றது. ஆக வேதனையில் தான் ஒன்று சேர்த்து வாழ்கின்றார்கள்.

இது தான் இன்று நடந்து கொண்டிருக்கின்றது.

ஆனால் அன்று வாழ்ந்த அகஸ்தியனும் அவர் மனைவியும் எப்படி வாழ்ந்தனர்...?

அகஸ்தியன் இந்தப் பிரபஞ்சத்தையும் அறிந்து... அண்டத்தையும் அறிந்து... அதனின் இயக்கத்தைத் தன்னில் உணர்கின்றான். அவனுடைய பதினாறாவது வயதில் அவனுக்குத் திருமணம் செய்து வைக்கின்றார்கள்.

1.தான் கண்டறிந்தவைகளை எல்லாம் தன் மனைவிக்கு எடுத்துச் சொல்கிறான்.
2.மனைவியும் தன் கணவன் சொன்ன நிலைகளை ஏற்று அதன் வழி நடக்கிறது.

மனைவி உயர்ந்து வருவதைக் கண்டு அகஸ்தியன் மகிழ்ச்சி அடைகின்றான். அவர்கள் இரு மனமும் ஒரு மனமாகி அருள் மணம் பெற்று வசிஷ்டர் அருந்ததி போல் வாழ்ந்து நளாயினி போன்று ஒருவரை ஒருவர் மதித்து நடந்து சாவித்திரி போன்று இரு மனமும் ஒன்றி இரு உயிரும் ஒன்றி பேரருள் பேரொளியாக மாறுகின்றனர்.

1.இரண்டு உயிரும் தனியாக இருந்தாலும் ஒரு உயிராக மாறிவிடுகின்றனர்...
2.துருவ நட்சத்திரமாக இன்றும் வாழ்கின்றனர்.

அவர்களைப் பின்பற்றியவர்கள் ஆறாவது அறிவை ஏழாவது நிலையாக ஒளியாக மாற்றிச் சப்தரிஷி மண்டலமாக அதனின் ஈர்ப்பு வட்டத்தில் வாழ்கின்றனர்.

அதுவே நாம் அடைய வேண்டிய எல்லை.