ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

August 20, 2022

குருநாதர் வழியில் காடு மேடெல்லாம் அலைந்து உண்மைகளைத் தெரிந்தாலும்... உலகம் எப்படிப் பார்த்தது...?

தனித்து நான் (ஞானகுரு) சாமியாராக இருந்தேன். குருநாதர் காட்டிய வழியில் காடு மேடு எல்லாம் அலைந்து பல அனுபவங்களைப் பெற்று விட்டு வந்த பிற்பாடு என் மனைவிக்கு இதையெல்லாம் சொன்னேன்.

ஆனால் “சாமியாராகப் போய்விட்டார்...!” என்று ஊரெல்லாம் என்னைத் திட்டினார்கள். குடும்பத்தை விட்டு விட்டுச் சாமியாராகச் சென்று விட்டார் என்று திட்டிய சொந்தக்காரர்களும் நண்பர்களும் ஏராளம்.

சாமியம்மாவும் “பாவிப்பயல்...! என்னை விட்டு விட்டுச் சென்று விட்டார்...” என்று என்னைத் திட்டியதும் உண்டு. அதே சமயத்தில் என் பிள்ளைகளைக் கூப்பிட்டு உன் அப்பனிடம் காசு வாங்கிக் கொண்டு வா...! பெத்துப் போட்டுச் சென்று விட்டால் யார் கொடுப்பது...? என்று துரத்தி விட்டவர்களும் உண்டு.

இது எல்லாம் இமயமலையில் நான் குருநாதர் காட்டிய வழியில் அனுபவம் பெறுவதற்காகச் சென்ற போது நடந்த நிகழ்ச்சிகள்.

குருநாதர் எம்மைக் கோவணத் துணியைக் கட்டிக் கொண்டு தான் அங்கே போகச் சொன்னார். அங்கெல்லாம் பனி ஜாஸ்தி. அது சீன எல்லை வேறு. அதிலே பல இம்சைகள். துணி இல்லை கிடு... கிடு... என்று நடுங்குகின்றது.

அப்படி நடுக்கம் வரும் பொழுது குருநாதர் சிலவற்றைச் சொல்லியுள்ளார். அதன்படிச் செய்தவுடன் உடலுக்குள் வெப்பமாகி நடுக்கம் நீங்குகின்றது.

நடுக்கம் நீங்கியபின் என்னுடைய பையன் தண்டபானி இருக்கின்றான். அவனைக் காட்டுகிறார் குருநாதர்.

அவனுக்கு மூல பௌத்திரம் மாதிரி இரத்த இரத்தமாகப் போய்க் கொண்டிருக்கிறது. தெரு மூலையில் உட்கார்ந்து கொண்டு நைனா... நைனா... என்று சொல்லிக் கொண்டு வலி பொறுக்க முடியாமல் உட்கார்ந்து போய்க் கொண்டிருப்பதைக் குருநாதர் காட்சியாகக் காட்டுகின்றார்.

அதைப் பார்த்ததும் பாசத்தால் எண்ணியவுடன் உடனே எனக்குக் குளிர் அதிகமாகிறது. மறுபடியும் கிடு... கிடு... என்று உதறுகிறது. பார்த்தோம் என்றால் “கிர்...” என்று இருதயமே விரைக்கின்றது.

அப்பொழுது குருநாதர் என்ன சொல்கிறார்...?

அனுபவம் பெறுவதற்காக எனக்குக் காட்டிய அந்த மூன்று இலட்சம் குடும்பங்களை எண்ணச் சொல்கிறார்.

அந்தக் குடும்பத்திலுள்ளோர் அனைவரும் “நன்றாக வாழவேண்டும் என்று நீ இங்கிருந்து எண்ணு...” என்று அங்கே உபதேசிக்கின்றார்.

அப்பொழுது அவர்களுக்கெல்லாம் நல்லதாக வேண்டும் என்று எண்ணும்போது இங்கே குளிரினால் வரும் இரைச்சல் குறைகிறது. பனி என்னைத் தாக்கவில்லை.

ஏனென்றால்... இந்த உணர்வின் இயக்கங்கள் எவ்வாறு...? என்ற நிலையை அந்த இடத்தில் வைத்துத்தான் பாட நிலையாகக் கொடுக்கின்றார்.

அதாவது... அங்கே காட்சி தெரியும்போது “இப்படி ஆகிவிட்டதே...” என்று பையன் மேல் பாசம் வருகிறது. அதே சமயத்தில் சாமியம்மா (என் மனைவி) என்ன நினைக்கின்றது...?

இரண்டு மூன்று குழந்தைகளை வைத்துக் கொண்டு அது பட்டினியாக இருக்கின்றது. ஏனென்றால் என் மூத்த பையன் அதைச் செய்கிறேன்... இதைச் செய்கிறேன்... என்று சொல்லி சொத்தை எல்லாம் இழக்கச் செய்துவிட்டான்.

இந்தச் சூழ்நிலையில்... இப்படியெல்லாம் இருக்கிறதே என்று சொல்லி மைசூரில் இருக்கும் என் மகள் என்னைத் திட்டுகின்றது. “பிள்ளைகளைப் பெத்துவிட்டுச் சோறு போடாமல் சுற்றிக் கொண்டுள்ளான்...!” என்று திட்டுகிறார்கள்.
1.இதெல்லாம் என் காதில் கேட்கிறது.
2.நான் இமயமலையிலிருந்து இதெல்லாம் பார்க்கின்றேன்.

பாசத்தினால் எடுக்கும் பொழுது எப்படியெல்லாம் இந்த உணர்வுகள் மாறுகின்றது...?

அந்த உணர்வால் நான் என்ன அவஸ்தைப்படுகின்றேன்...? என்று குருநாதர் அந்த இடத்தில் வைத்து நேரடி அனுபவமாகக் கொண்டு வருகின்றார்.

ஆக...
1.கஷ்டப்படும் குடும்பங்களை எண்ணி அவர்களுக்கெல்லாம் நல்லதாக ஆகவேண்டும் என்ற உணர்வைப் பாய்ச்சும் போது குளிர் ஒடுங்குகின்றது.
2.அதே சமயத்தில் குடும்பப் பாசம் என்ற நிலையில் அந்த இடத்தில் எண்ணும் பொழுது குளிர் பாதிக்கின்றது... நல்லதை எண்ண முடியவில்லை.

சிலர் எல்லோருக்கும் நல்லவைகளைச் சொல்வார்கள். தன் குடும்பப் பற்று வரும்பொழுது “தன் பையன்... தன் பிள்ளை...” என்று வரும்போது அவர்களுக்குள் அந்த உணர்வுகள் வரத்தான் செய்யும்.

ஏனென்றால் அந்தப் பாசம் என்ற உணர்வு வரும்போது எப்படியெல்லாம் தடைப்படுத்துகிறது...? என்று இமயமலையில் வைத்து குருநாதர் சொல்லிக் கொடுக்கின்றார்.

யாம் சந்தித்த அந்த மூன்று இலட்சம் பேரை எண்ணி... அவர்களெல்லாம் நலம் பெற வேண்டும் என்று அங்கிருந்து எண்ணச் சொல்கிறார்.

இப்படி பல வகையில் சிரமப்பட்டு உண்மைகளை எல்லாம் தெரிந்து நான் இங்கே வந்த பிற்பாடு சில இடங்களில்
1.இந்தச் சாமி கல்யாணம் செய்து விட்டாரே...!
2.கல்யாணம் பண்ணிய சாமியார்கள் எல்லாம் அயோக்கியச் சாமியார்கள் என்று இப்படியும் சொல்கின்றார்கள்.

காரணம்... சாமியார் ஆகிவிட்டால் கல்யாணம் செய்யக்கூடாது.

எப்பொழுதாவது என் மனைவி என் அருகில் வந்து ஏதாவது பேச முற்பட்டால் சில பேருக்கு இதைப் பார்க்கும் பொழுது “குடும்பப் பற்றுடன் இருக்கின்றாரே இந்தச் சாமியார்...” என்று சொல்கின்றார்கள்.

இது எல்லாம் “மனித உணர்வுகளுக்குள்...” நடந்த நிகழ்ச்சிகள்.